Friday, September 21, 2007

அண்ணல் நபிகள் நடந்த பாதையில்...! (9)-

" தன் குடும்பத்தார், தன் செல்வம், தன் அண்டைவீட்டார் ஆகியோர் விசயத்தில்ஒரு மனிதன் செய்யும் தவறுகளுக்குத் தொழுகை, தர்மம் ஆகியன பரிகாரம் ஆகின்றன. ''-திருக்குரான்.

பால்காரர் வந்துவிட்டார்.....!

அபூபக்கர் சித்திக்!

மக்கா நகரின் மகத்தான மனிதர்!!
இறைத் தூதர் முகம்மது நபி (ஸல் ) அவர்களின் இதயம் கவர்ந்த இனிய நண்பர்; அன்பும் பண்பும் ஒருங்கே அமையப்பெற்ற பெருந்தகையாளர் ஆவார்.

செல்வந்தர் என்ற கர்வமோ, அகம்பாவமோ மருந்துக்கும் இல்லாத பேராளர்!
ஏழை எளியோர்க்கு எப்போதும் உதவுகின்ற பேராளர்!

அபூபக்கர் சித்தீக் அவர்களின் இல்லத்துக்கு அருகே வசித்தவர்கள்
ஏழை எளியவர்களாகவும் முதியவர்களாகவும் அனாதைகளாகவும் இருந்தனர்; அவர்களின் அன்றாடத் தேவைகளைத் தனது பணியாட்களைக் கொண்டு நிறைவேற்றியிருக்கலாம்.

ஆனால் அபுபக்கரோ தானே தினமும் சென்று அவர்களின் சுய தேவைகளை நிறைவேற்றி வந்தார். எப்படி என்றால், சிலருக்கு மாவு அரைத்துக் கொடுப்பார். சிலருக்குத் தானே ரொட்டி சுட்டுக் கொடுப்பார்.

சிலருக்கு வேண்டிய மளிகைப் பொருட்களை வாங்கி வந்து கொடுப்பார்.

வயதான மூதாட்டி (வயதானால்தான் மூதாட்டி என்று உடனே

யாரும் வரிந்து கட்டிகொண்டு வந்துவிடவேண்டாம்!?)
ஒருவருக்கு ஆடு ஒன்று இருந்தது. மூதாட்டியின் வீட்டிற்குக் காலையிலும் மாலையிலும் அபூபக்கர் சென்று பால் கறந்து
கொடுத்து வருவது உட்படப் பல வேலைகளைத் தானே செய்து
உதவி வந்தார்.

நபி அவர்கள் மரணமெய்திய பிறகு மக்கள் அபூபக்கர் அவர்களையே தங்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்தார்கள். அதாவது அரசுத் தலைவராக ( கலீ·பாவாக ) தேர்ந்தெடுத்தனர்.

இந்தச் செய்தி அபூபக்கரின் இல்லத்துக்கு அருகில் வசித்தவர்களுக்குத் தெரியவந்தபோது ஒருபுறம் மகிழ்ச்சி அடைந்தாலும், மறுபுறம் மனக் கவலையுங் கொண்டனர். இனிமேல், அபூபக்கர் அரசுப் பணிகளில் மூழ்கிவிடுவார், நம்மை எங்கே கவனிக்கப் போகிறார்? அதற்கு அவருக்கு நேரமும் கிடைக்காதே என்பதுதான் அவர்களின் கவலைக்குக் காரணமாக இருந்தது.

ஆட்சித்தலைவர் பொறுப்பேற்ற பிறகும் அபூபக்கர் தம் அண்டை அயலாரை மறக்கவில்லை; வழக்கம் போல அபூபக்கர்

அதிகாலையில் முதல் வேலையாக மூதாட்டி வீட்டிற்குச்
சென்றார். மூதாட்டியின் வீட்டிற்கு முன் நின்றுகொண்டிருந்த
சிறுமி ஒருத்தி வேகமாக வீட்டிற்குள் ஓடி,

" பாட்டீ...பால்காரர் வந்துவிட்டார் " என்று பெருங் குரல் கொடுத்துக்கொண்டே ஓடினாள். பாட்டிக்கு மட்டுமல்ல,
அபூபக்கரின் வழக்கமான சேவைகளைப் பெறுகின்ற
எல்லோருக்கும் மிக்க மகிழ்ச்சி ஏற்பட்டது.

இனிமேல் கிடைக்காது அவரின் சேவை என்றெண்ணியிருந்த அவர்களுக்கு மகிழ்வு ஏற்படாதா என்ன?

அபூபக்கர் சம்பவத்தை எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரிடம் சொன்னேன். அவர் அரசாங்கத்தில் ஒரு பெரிய அதிகாரியாக

இருப்பவர்.

"இந்தக்காலத்தில் சாதாரண நிலையிலிருந்த ஒருவருக்குப் பெரிய பதவி கிடைத்தால் பழசை மறக்காமல் செய்வது என்பது அபூர்வம் என்று சொன்னேன்.

அதற்கு நண்பர் தன்னோட சோகமான அனுபவத்தை என்னிடம் சொன்னார். அபூபக்கர் காலம் அந்தக்காலம்!

இந்தக்காலத்தில் நல்லது என்று எண்ணி யாருக்காவது உதவி
செய்தால் நாம்தான் வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டியதாகிவிடுகின்றது என்றார்.

அவரோட அனுபவம் என்ன என்று விசாரித்தேன்.


அவரும் நடந்ததைச் சொன்னார்.

ஒரு நாள் என்னைப் பார்க்கவேண்டும் என்று ஒரு ஆள் வந்தார்.
வந்த ஆள் கேட்டார், "சார், போன மாசம் வந்த பெரிய வெள்ளத்தில் நான் மாட்டிக்கிட்டு தத்தளிச்சப்ப என்னைக் காப்பாத்திக் கரை சேத்தது நீங்கதானா சார், " என்று கேட்டார்.

"ஆமாம்! அதனால் என்னப்பா, அது என்னுடைய கடமை. இதற்குப்
போய் நன்றி எல்லாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை " என்று சொன்னேன்.

அதற்கு வந்த ஆள் சொன்னார்: -" அதற்கு இல்லை சார்! அன்னைக்குச் சட்டைப் பையில் ஒரு நூறு ரூபாய் நோட்டு வச்சிருந்தேன். அதக் காணோம்! அதான் உங்களக் கேட்டுட்டுப் போகலாம்ன்னு வந்தேங்கிறான்!?"

"நிச்சயமாக அல்லாஹ் உங்கள் தோற்றங்களையோ, உங்கள் பொருட்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையும், உங்கள் செயல்களையுமே பார்க்கிறான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

- ஆல்பர்ட்.

No comments: