Friday, June 13, 2008

அண்ணல் நபிகள் நடந்த பாதையில்...! (10)

"வசதியுள்ள நிலையிலும், வசதியற்ற நிலையிலும்
செலவழிப்பார்கள்; மேலும் சினத்தை
அடக்கிக்கொள்வார்கள்....மேலும் மக்களின்
தவறுகளை மன்னித்து விடுவார்கள்.. இத்தகைய
உயர்ந்த பண்பினரை இறைவன் நேசிக்கின்றான்..." -அருட்குரான்.

மதீனா நகரே விழாக் கோலம் பூண்டிருந்தது போன்று இருந்தது. காரணம், அந்தநகரில் மார்க்க மேதைகளும், அறிஞர் பெருமக்களும், சமுதாயத்தின் பிரபலமான பெரியோர்களும், அரசு அதிகாரிகள் என்று அவ்வளவு பேர்களும் ஓரிடத்தில் குழுமியிருந்ததுதான் காரணம். அவர்கள் குழுமியிருந்த இடம் பெரும் மாளிகை! அந்த அரண்மனை போன்ற மிகப்பெரிய மாளிகையில் விருந்து தடபுடலாக நடந்து கொண்டிருக்கின்றது.

விருந்தினர்களோடு விருந்தினராக அந்த மாளிகைக்குச் சொந்தக்காரரும் உணவருந்த அமர்ந்திருந்தார். விருந்தினர்களுக்கு அவருடைய இல்லப் பணிப்பெண் பரிமாறிக்கொண்டிருந்தாள். சோள ரொட்டி, கறிக்குழம்பு, பேரித்தம் பழம் போன்றவற்றைக் கொண்டு வந்து பரிமாறுவது அவளின் வேலையாக இருந்தது. அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்துவிட்டது!?

பாத்திரம் கீழே விழுந்த சத்தமும், பணிப்பெண்ணின் அலறலும் விருந்தினர்கள் அனைவரையும் ஒருங்கே ஈர்த்தது. விருந்தினர்களின் பார்வைகள் ஒட்டுமொத்தமாகக் குவிந்திருந்தது அந்த வீட்டு உரிமையாளர் மீது!
ஆம்! பணிப்பெண் கையில் பிடித்திருந்த கறிக்குழம்புப் பாத்திரம் கைதவறி விழுந்த அதிர்ச்சியில் அலறியது அந்தப் பணிப்பெண்தான். சுடச்சுடக் குழம்பும் கறியும் கொட்டியது அந்த உரிமையாளரின் முகத்தில்!

அவரின் முகத்திலும் தாடியிலும், தூய வெண்ணிற ஆடையிலும் கொட்டி வழிந்து கொண்டிருந்தது. அந்தக் கறிகுழம்பின் சூடும், காரத்தன்மையும் அவரின் முகம், மூக்கு என்று எரிந்து கொண்டிருந்தது. அதைத் துடைத்துக் கொண்டிருந்த பணிப்பெண்ணைச் சுட்டெரிப்பது போல அவர் பார்த்தார். அந்தப் பணிப்பெண்ணின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோட, தம் இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு அழத்துவங்கி விட்டாள். விருந்து ஸ்தம்பித்தது! அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்று விருந்தினர்கள் திகைத்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஒரே அமைதி!

அந்த நேரத்தில்.....அமைதியைக் கிழித்துக்கொண்டு அந்தப் பணிப்பெண் அருட் குரானின் திருவசனத்தை ஓத ஆரம்பித்தாள். பயம், துக்கம், பீதி, குற்ற உணர்வுகளால் அவளது குரல் தழுதழுத்தது. அப்படி அவள் குரல் நடுங்கி ஓதியபோதிலும் உச்சரிப்பு குன்றாமல் வெகு நேர்த்தியாக ஓத ஆரம்பித்தாள். "இறைவனிடமிருந்து வழங்கப்படும் மன்னிப்பு மற்றும் சுவனத்தின் பக்கம் செல்லும் பாதையில் விரைந்து செல்லுங்கள். அது வானங்கள், பூமியின் அளவிற்கு விரிவானது. மேலும் அது இறை அச்சமுடையோருக்காகத் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது...." ஏற்ற இறக்கங்களோடு நிதானமாக ஓதத் துவங்கினாள்.

அது, அந்தச் சூழலையே மாற்றிவிட்டது. உரிமையாளரின் முகத்திலிருந்த சுட்டெரிக்கும் பார்வை மறைந்தது. சாந்தம் மெல்ல, மெல்ல அவரின் முகத்தில் குடியேறியது. அவர் தன் கண்களை மூடிக்கொண்டு பணிப்பெண் ஓதுவதை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கலானார். " .... அவர்கள் எத்தகையோர் எனில் வசதியுள்ள நிலையிலும், வசதியற்ற நிலையிலும் செலவழிப்பார்கள்; மேலும் சினத்தை அடக்கிக்கொள்வார்கள்...." பணிப்பெண் இவ்வாறு ஓதிக்கொண்டிருக்கும்போது திடீரென்று ஒரு குரல் கணீரென்று கேட்டது.

" நான் எனது கோபத்தை அடக்கிக்கொண்டேன்.... உரிமையாளர் தன் எரிச்சல் மறைந்த நிலையில் சொன்னார். பணிப்பெண் அதன்பிறகும் ஓதினாள்...." மேலும் மக்களின் தவறுகளை மன்னித்து விடுவார்கள்...."

" நான் உன்னை மன்னித்துவிட்டேன்.... அவர் உரக்கக் கூவினார். கூடியிருந்த விருந்தினர்கள் முகத்தில் மலர்ச்சி! சிரிக்க மறந்த முகங்கள் புன்னகை பூத்தன! பணிப்பெண் முகத்தில் பரவசம்! அந்தப் பரவசத்தில் தொடர்ந்து ஓதுகின்றாள். ".... இத்தகைய உயர்ந்த பண்பினரை இறைவன் நேசிக்கின்றான்..."

பணிப்பெண் ஓதி முடிக்கவில்லை. சிலிர்த்தெழுந்தார் அவர்! " போ... உன்னை நான் விடுதலை செய்துவிட்டேன். சுதந்திரமாக நீ செல்லலாம்; என்றார். அது மட்டுமல்ல அந்தப் பணிப்பெண்ணுக்கு ஏராளமான வெகுமதிகளைக் கொடுத்து அனுப்பினார். அங்கிருந்த விருந்தினர் முகங்கள் உவகையால் மகிழ்ச்சி பொங்கிப் பூத்தது. சந்தோச சாம்ராஜ்யத்தில் மிதப்பது போன்று பணிப்பெண் உணர்ந்தார்.

இப்பவும் கூட சிலர் இருக்காங்க... எப்டீங்கிறீங்களா? ஆடம்பரமான விருந்து நடந்து கொண்டிருந்தது. சமுதாயத்தில் உள்ள பெரும்புள்ளிகள் எல்லாம் அங்கிருந்தனர். அந்த விருந்தை நடத்துபவர் அரசியல்வாதியிலிருந்து, அதிகாரவர்க்கம் வரை செல்வாக்கு படைத்தவர்; ஆளும்கட்சியில் பெரும் பொறுப்பு வகிப்பவர். தடபுடலாய் விருந்து நடந்து கொண்டிருந்தது. சீருடை அணிந்த வேலைக்காரர்கள் உணவு பரிமாறிக்கொண்டிருந்தார்கள். விருந்துச் சாப்பாட்டை ஒரு கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். விருந்தில் கடைசியாக நெய் மணக்கும் பாயாசம் பரிமாறப்பட்டது. அப்போதுதான், அந்தச் சத்தம் கேட்டது; எல்லோரும் திடுக்கிட்டு சத்தம் வந்த திசையில் திரும்பிப் பார்த்தார்கள். கண்ணைப் பறிக்கும் வெள்ளுடையிலிருந்த ஒரு பிரமுகர் முகத்திலிருந்து பாயாசம் வழிந்து சட்டை வேட்டி எல்லாம் பாயாசமாய்க் காட்சியளிக்க பணியாள் "அய்யோ கை தவறி....நடந்து போச்சு... மன்னிச்சுருங்கய்யா" என்று சொல்லி முகத்தை துடைத்துக் கொண்டிருந்தான்.

இதைக் கவனித்த விருந்தை ஏற்பாடு செய்தவர், தாம் சாப்பிடுவதை விட்டுவிட்டு அந்தப் பிரமுகரை நோக்கி விரைந்து சென்றார். எல்லோரும், என்ன நடக்கப் போகுதோ என்று ஒருவித அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

"ஏண்டா, அறிவு கெட்டவனே, ஒனக்கு கண்ணில்ல.. இப்படியா... மொதல்ல நீ, வெளிய போ...யாருப்பா... அங்க.. இவங்களை அழைச்சிட்டு உள்ள போய் புது துணி குடுத்து மாத்திக்க ஏறப்பாடு செய்" என்று இரைந்தார்.

" சரி...சரி.. பாவம்...கை தவறி விழுந்துருச்சு... நீங்க போய் சாப்புடுங்க" என்று முகத்திலிருந்த பாயாசத்தை ஆயாசமாய் துடைத்துக்கொண்டே சொன்னார் அந்த ஆள்!

விருந்து எல்லாம் முடிந்தது, வந்தவங்கள்ளாம் கெளம்பினாங்க. விருந்து கொடுத்த அந்த மனிதரும் அவருக்கு வேண்டப்பட்ட ஒருத்தரும் மட்டும் அங்க இருந்தாங்க. எங்க அவன்? கூப்புடு.... என்று கூப்பாடு போட்டார் அந்தப் பெரிய மனிதர்.

"அய்யா.... தெரியாம... கைதவறி நடந்து போச்சு மன்னிச்சுருங்க அய்யா....என்றவாறே, சரி நம்ம சீட்டுக் கிழிஞ்சுது இன்னையோட என்ற முடிவோட வந்தான், அந்தப் பணியாள்.

"சரி..சரி.. கை தவறி விழுந்ததுக்கு நீ, என்ன பண்ணுவே, எல்லாருக்கும் முன்னாடிதிட்டிட்டனேன்னு வருத்தப்படாதே இந்தா...இதச் செலவுக்கு வச்சுக்க... ஒருவாரம் லீவு..ஊருக்குப் போயிட்டுவா?"என்று ஆயிரம் ரூபாயை நீட்டினார். பணியாள் ரூபாயை வாங்கிக்கொண்டு.

"அப்ப வர்றனுங்க", என்று சொல்லிக் கிளம்பினான் முகமெல்லாம் சந்தோசம் சுடர்விட!

பெரியமனிதருக்கு அருகிலிருந்தவர், "என்னாங்க கூப்புட்டு சீட்டைக் கிழிச்சு வூட்டுக்கு அனுப்பப் போறீங்கன்னு நெனைச்சேன். செலவுக்கு கைநெறையா காசும் குடுத்து அனுப்புறீங்களே. உங்க பெருந்தன்மையே.. பெருந்தன்மைங்க..." என்றார்.

"அட, நீ வேற... அந்தாளு என்னை எதிர்த்துப் பேசுற முக்கியமான எதிர்கட்சியாளு. எனக்கு கூப்புட இஷ்டமே இல்லை; ஒருவகையில கூப்புட்டு மூக்கறுத்தமாதிரி இப்டியானதுல எனக்கு உள்ளூர சந்தோசம்.... அதான் இவனுக்கு ஒருவார லீவும் பணமும் குடுத்தேன்" அப்டீங்கிறார்...!?

No comments: