Wednesday, September 19, 2007

அண்ணல் நபிகள் நடந்த பாதையில்...! (6)

அண்ணல் நபிகள் நடந்த பாதையில்...! (6)

"தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்!" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அபு அனிபா என்று ஒரு பெரியவர் இருந்தார். இஸ்லாமியப் பெரியவர். அவர் ஒரு நெசவாளர். மிகவும் ஏழ்மையான நிலைமையில் இருந்தார்.

நாள்தோறும் அவர், தானே தனது கையால் நூல் நூற்று நெசவு செய்வார். துணிகளைத் தயார் பண்ணுவார். அதையெல்லாம் தோளில் போட்டுக்கொண்டுதெருத் தெருவாகப் போய் விற்பனை செய்வது அவரின் வழக்கம்.

அதில் வரக்கூடிய சொற்ப வருவாயை வைத்துகொண்டு அவர் தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். அவர் ஒரு நாள் ஒரு பாலைவனப் பகுதி வழியாகப் போய்க் கொண்டிருந்தார். அவருடன் இன்னும் இரண்டு நண்பர்களும் போய்க் கொண்டிருந்தார்கள்!

வழியிலே ஒரு ஆள் பேரீச்சம்பழம் விற்றுக் கொண்டிருந்தான்.
'எப்படி விலை? என்று விசாரித்தார்.
"காசுக்குப் பத்துபழம்" என்றான் அவன். அந்த ஊர் காசு!

"சரி! ஒரு காசுக்கு பழம் கொடு! அப்படியே சருகில் வைத்துக் கட்டிக்கொடுக்கும்படியும் தாம் நடந்து செல்லும் வழியிலே சாப்பிட்டுக்கொள்ள ஏதுவாக இருக்கும்! என்றார் அந்தப் பெரியவர்.

அதே மாதிரி அந்த ஆளும் ஒரு உலர்ந்த சருகில் பழத்தை வைத்துக் கட்டிக் கொடுத்தான். அதை வாங்கிக் கொண்டு இவரும் மற்ற இரண்டு பேரும் போய்க் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் போய்க்கொண்டிருந்தது ஒரு பாலைவனப்பகுதி இல்லையா? அதனாலே எங்கேயாவது தண்ணீர் கிடைக்கின்ற இடமாகப் பார்த்து உட்கார்ந்து பழத்தைச் சாப்பிடலாம் என்று பேசிக்கொண்டே போகிறார்கள்.
வழியிலே ஒரு நீர் நிலை தெரிந்தது! அங்கே போய் மூன்று பேரும் வசதியான இடமாகப் பார்த்து அமர்ந்தார்கள். பெரியவர் பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பத்து பழம்தானே இருக்க வேண்டும்? ஆனால் ஒரு பழம் கூடுதலாக
அதில் இருந்தது!

அதைப் பார்த்தவுடனே பெரியவர் பதறிப் போய்விட்டார்.

ஒரு காசுக்கு 10 பழம்தானே அவர் சொன்னார். கைத் தவறுதலாக அந்த பழ வியாபாரி ஒரு பழத்தைக் கூடுதலாக வைத்துவிட்டாரே! இது அவருக்கு நஷ்டமாச்சே! இப்ப என்ன செய்வது என்று யோசித்தார்.

"சரி... திரும்பிப் போய் அந்தப் பழவியாபாரியை சந்தித்து கூடுதலாக இருக்கும் ஒரு பழத்தை கொடுத்துவிட்டு வந்துடுவோம்!" என்று புறப்பட்டார்.
அருகிலிருந்த நண்பர்கள், அவர் சொன்னதைக் கேட்டுச் சிரித்தார்கள்! (ஏன்? நாமாக இருந்தாலும் அதைத்தானே செய்திருப்போம்!)

"என்னங்க இது? வேடிக்கையா இருக்கிறது!

ஒரே ஒரு பேரீச்சம் பழம் கூட இருக்கிறது என்பதற்காக அதை திருப்பிக் கொடுப்பதற்காக யாராவது திரும்பவும் மூணுகல் தொலைவு திரும்பி நடப்பார்களா?

இது தேவைதானா?" என்று கேட்டார்கள். பெரியவர் அவர்கள் சொன்னதை ஏற்றுக்கொள்ளவில்லை.


" ஒரு வியாபாரத்தில் நாம் காசு கொடுத்து அதற்குச் சரியா ஒரு பொருளை வாங்குகின்றோம். அதுதான் நியாயம். அதிகப்படியா எதுவும் குடுத்தா அது விலக்கப்பட்ட பொருள். அது நம்மை சேரக்கூடாது. அபஹாரமானது!" என்று அவர்களூக்கு விளக்கம் சொல்லிவிட்டு விடுவிடுவென்று தாம் வந்த பாதையிலேயே நடக்க ஆரம்பித்தார்.

அந்த வியாபாரியைத் தேடிப் பிடித்து கூடுதலாக அவர் கை தவறிப்போய் வைத்ததைக் கொடுப்பதற்காகவே திரும்பவும் அவரைத்தேடி வந்ததாகச் சொல்லி அந்த ஒரு பழத்தைத் திருப்பிக் கொடுத்தார்.


ஆனால், அந்த வியாபாரி என்ன சொன்னார் தெரியுமா?

"ஐயா! அந்த ஒரு பழத்தை நான் தெரியாமல் ஒன்றும் கொடுக்கவில்லை!

உங்க தோற்றத்தைப் பார்த்ததும் எனக்கு உங்கள் மேல் ஒரு
மரியாதை ஏற்பட்டது. அதனாலேதான் ஒரு பழத்தை அதிகமா
வைத்துக் கட்டிக்கொடுத்தேன்.

நீங்க இவ்வளவு தூரம் வந்து இதைக் கொடுக்க வேண்டுமா? நீங்களே அதை வைத்துக் கொள்ளுங்கள்!" என்று சொன்னார், அந்த வியாபாரி.


ஆனால் பெரியவரோ அதற்குச் சம்மதிக்கவில்லை!

வணிகத்திலே - வியாபாரத்திலே - வாங்குகிறவர் ஒருத்தர்.
விற்கிறவர் ஒருத்தர். ரெண்டு பேரும் இவ்வளவுக்கு இவ்வளவு என்று
ஒரு உடன்பாட்டுக்கு வர்றாங்க. அதன்படி நடந்து கொள்கின்றார்கள் அதுதான் வியாபாரம்.

அந்த உடன்பாட்டுக்கு ஒத்துப் போகின்றதுதான் நியாயம். அந்த நியாயம் தவறி நாம் நடந்து கொள்ளக்கூடாது என்று சொல்லிவிட்டு பழத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டு வந்த வழியே திரும்ப நடக்க ஆரம்பித்தார்.
நேர்மை-நியாயம் இதற்க்கெல்லாம் இலக்கணம் அந்தப் பெரியவர்!


இந்தக் காலத்தில் எல்லாம் நாம் அப்படியா நடந்து கொள்கின்றோம்?
இப்படி நம் நாட்டில் நடந்தால் எப்படி இருக்கும்? அப்புறம் எதற்கு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் எல்லாம் தேவைப்படப்போகிறது?

நீங்களே கொஞ்சம் நல்லா யோசித்துப் பாருங்களேன். " கொசுறு " இல்லை என்றால் இப்போதெல்லாம் வியாபாரமே நடப்பது இல்லை.


அம்பது ரூபாய்க்கு காய்கறி வாங்கினாலும் அம்பது பைசாவுக்கு கறிவேப்பிலை வாங்க மனசில்லாமல் யோவ் பெரிசு ஒரு இணுக்கு கறுவப்பிலையை போடுன்னு பையை அகலத் திறந்து இல்ல காட்டிக்கிட்டு நிக்கிறோம்

அதுமட்டுமில்லை... வாங்குகிறவர் விற்கின்றவரை எப்படி ஏமாற்றுவது என்று பார்க்கின்றார். விற்கின்றவர் வாங்குகின்றவரை எப்படி ஏமாற்றுவது என்று பார்க்கின்றார். சாமர்த்தியசாலிகள் பிழைத்துக் கொள்கின்றார்கள்!


ஒருவர் அப்படித்தான் மாம்பழம் வாங்கினார்.

'ஒரு பழம் ஒரு ரூபாய்! ' என்றார் கடைக்காரர்.

"பத்து ரூபாய்க்குப் பழம் குடுங்க" என்றார் இவர். அவர் பத்துப் பழம் கொடுத்தார்.

இவர் அடித்துப் பிடித்துப் பேசி ஒரு பழம் அதிகமாவே வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டார். வந்ததுக்கப்புறம் 'பாவம் அந்தக் கடைக்காரர்' என்று நிரம்ப வருத்தப்பட்டார்.

"நீங்கள்தானே அடித்துப் பிடித்து கட்டாயப்படுத்தி ஒரு பழம் அதிகமா வாங்கினீங்க... இப்ப நீங்களே வருத்தப்பட்டா எப்படி?" என்று வீட்டுக்கார அம்மா கேட்டாங்க.

" நான் அதுக்காக வருத்தப்படவில்லை... நான் அந்த வியாபாரியிடம் கொடுத்தது செல்லாத நோட்டு... பாவம் எப்படி அதை மாற்றுவாரோ, என்று எண்ணியே வருத்தப்படுறேன்" என்றார் இவர்.

இதே நேரத்தில் அந்தக் கடைக்காரரும் வருத்தப்பட்டார்;
பாவம், அந்தப் புளிப்பான பழத்தை யார் தலையில்
கட்டலாம் என்று பாத்தேன், வசமாச் சிக்கினான்
அந்த ஆள்..! எப்படித்தான் அந்தப் பழத்தைச்
சாப்புடப் போறானோ, என்று...!

"ஹலால் எனும் அனுமதிக்கப்பட்டது தெளிவானது; ஹராம் எனும் விலக்கப்பட்டதும்
தெளிவானது; அவ்விரண்டிற்குமிடையே சந்தேகத்திற்கிடமான காரியங்கள் உள்ளன.
பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைவிட்டு விடுகிறவர் பாவம் என்று தெளிவாகத்
தெரிவதை நிச்சயம்விட்டு விடுவார்; பாவம் எனச் சந்தேம்ப்படுபவற்றைச் செய்யத்
துணிகிறவர் தெளிவான பாவங்களிலும் வீழ்ந்து விடக் கூடும். பாவங்கள்
அல்லாஹ் போட்ட வேலிகளாகும். வேலியைச் சுற்றி மேய்கிறவர் அதற்குள்ளும்
சென்று விடக்கூடும்" என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.

No comments: