Friday, September 21, 2007

அண்ணல் நபிகள் நடந்த பாதையில்...! (8)

"அண்டை வீட்டாளர்களின் உரிமைகள் என்னவென்பது உங்களுக்குத் தெரியுமா? அண்ணல் நபிகளிட்ட பட்டியல் இதோ....
உங்கள் அண்டை வீட்டார் உதவி கேட்டால் உதவுங்கள். ஆறுதல் தேவைப்படும்போது ஆறுதல் அளியுங்கள்; அவருக்குத் தக்க சமயத்தில்
கடன் கொடுங்கள்; அவர் துயரப்பட்டு நிற்கும்போது அவரின் துயரைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அவர் நோய் வாய்ப்படும்போது நலம் விசாரியுங்கள்; அவர் மரணமடைய நேரிட்டால் இறுதிச் சடங்குகளில் மனமுவந்து கலந்துகொள்ளுங்கள்; அவர் நல்லது செய்தால் பாராட்டுங்கள். வாழ்த்துங்கள்; அவருக்குத் துன்பம் நேரும்போது அவர் துயர் களைய முற்படுங்கள்; அவருக்குக் காற்று கிடைக்காதவாறு உங்கள் சுவரை அவர் அனுமதியின்றி உயரமாக எழுப்ப வேண்டாம்; அவருக்குத் தொல்லைகள் ஏதுமில்லாமல் நடந்துகொள்ளுங்கள்; - எம்பெருமானார் நபிகள் நாயகம்.

சூரியக் கதிர்கள் இரவின் மடியில் சற்றே தலை சாய்த்துத் துயிலத் துவங்கிய சமயமது! தம் தொழுகையை நிறைவேற்றிவிட்டு பள்ளிவாயிலை விட்டு எம்பெருமானார் வெளியே வருகின்றார்கள்!

எம்பெருமானாரைச் சுற்றிலும் ஒரு கூட்டம் சூழ்ந்துகொள்ள, அந்த அற்புதப் பொழுதில் எம்பெருமானார் போதனைகளைச் செவிமடுத்துக் கொண்டிருந்தனர், கூடியிருந்தோர்!

எம்பெருமானார் முகம்மது நபி (ஸல்) அவர்கள், உதிர்க்கின்ற நல் முத்துக்களை சிந்தாமல் சிதறாமல் செவிகளில் வாங்கிக்கொண்டிருந்த நேரத்தில்தான் அந்தச் சம்பவம் நிகழத் துவங்குகின்றது!


கந்தலான ஆடை, கலைந்த கேசம், பஞ்சடைந்த கண்கள், ஒட்டிய வயிறு, எலும்புக்கூடு ஒன்று நடந்து வருவது போல் ஒருவர் தள்ளாடியபடியே அண்ணல் நபிகள் அமர்ந்திருந்த கூட்டத்தை நோக்கி வருகின்றார்!

நேராக எம்பெருமானிடம் சென்று, சொல்லுகின்றார்.

அவர் நா அசைகின்றது; வார்த்தைகளோ வெளிவரவில்லை;
கைகளைத் தூக்கிச் சைகை செய்ய முனைகின்றார்.
கை உயரே எழும்ப மறுக்கின்றது; அவர் என்ன சொல்ல
வருகின்றார் என்று புரியாமல் அங்கிருந்த பலரும் குழப்பத்தோடு அவரையும் நபிகளையும் மாறிமாறிக் கவனிக்கின்றனர்.

ஆனால் நபிகள் நாயகமோ வறுமையின் கோரப் பிடிகளில் சிக்கித் தவிக்கின்ற அந்தமனிதனை வாட்டும் நோய் என்ன என்பதை அறிந்து கொண்டார். நபிகள் நாயகம், உடனே அருகிலிருந்த ஒருவரை அழைத்துத் தம் வீட்டிற்குச் சென்று அந்த மனிதருக்கு உணவளிக்கும் பொருட்டு எதாவது வாங்கி வரும்படிக் கட்டளையிடுகின்றார்கள்;

சற்று நேரத்தில் திரும்பி வந்த அந்த மனிதர் வீட்டில் உணவு ஏதும் மீதம் இல்லை என்பதைத் தெரிவிக்கின்றார். நபிகள் நாயகம் அவரைத் தமது மற்ற மனைவியர் இல்லங்களுக்கும் சென்று இருக்கும் உணவை விரைந்து பெற்று வரும்படி பணிக்கின்றார்கள்!
அங்கிருந்தும் திரும்பி வந்த அவர், அருந்துவதற்கு தண்ணீர் மட்டுமே இருப்பதாகவும் உணவுப் பதார்த்தங்கள் ஏதும் மீந்திருக்கவில்லை என்பதை நபிகளிடம் சொல்லுகின்றார். ஏழ்மையில் இனிமை கண்ட ஏந்தல் எம்பெருமானார் இல்லங்களில் உணவைச் சேமித்து வைக்கின்ற பழக்கமோ, வழக்கமோ இருந்ததில்லையாதலால், தம்மைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களை நோக்கிச் சொல்லுகின்றார்,


"உங்களில் யார் இந்த மனிதருக்கு உணவு அளிக்கின்றாரோ அவருக்கு இறைவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்..!" என்றார்கள்.


நபிகள் சொல்லி முடிக்கும் முன்பாகத் துள்ளி எழுந்தார் அபூதல்ஹா என்பவர்!

"உங்கள் அன்புக் கட்டளையை நிறைவேற்ற நான் தயாராக இருக்கின்றேன்," என்றார் மெத்தப்பணிவோடு!


நபிகளின் அனுமதி கிடைத்ததும் எலும்புக்கூடாயிருந்த அந்த மனிதரைக் கைத்தாங்கலாகத் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றார், அபூதல்ஹா!

இல்லத்தை அடைந்ததும் தம் இல்லாளிடம் (மனைவியிடம்) கேட்கின்றார். சாப்பிடுவதற்கு என்ன இருக்கின்றது? இந்த மனிதருக்கு நாம் உணவு படைத்தாகவேண்டும், என்கிறார்.

அவரின் உள்ளம் அறிந்த உள்ளத்தாள் உள்ளதை உள்ளவாறே உரைக்கின்றாள்.

"இன்று நம் இல்லில் குழந்தைகளுக்கு மட்டுமே உண்பதற்கு உள்ளது. தாங்கள் என்ன செய்யச் சொல்கின்றீர்களோ செய்யச் சித்தமாயிருக்கின்றேன்" என்கிறார் அபூதல்ஹாவின் உள்ளம் கவர்ந்த உள்ளத்தரசி!


குழந்தைகளைச் சமாதானம் செய்து தூங்கவைத்துவிடு.

உணவருந்துமிடத்தில் எல்லாவற்றையும் தயாராக வைத்துவிட்டுக் கைவிளக்கை சற்றே மங்கலாக இருக்குமாறு வைத்துவிடு. அவரோடு நாமும் சாப்பிடுவது போல பாவனை செய்து சமாளித்துக் கொள்வோம், என்கிறார் அபூதல்ஹா!

அபூதல்ஹாவின் மனையாளும் அவ்வாறே உணவை எடுத்து வைத்துவிட்டு விளக்குத் திரியைச் சரி செய்வது போல மங்கச் செய்துவிடுகின்றார். விருந்தினருக்குப் பரிமாறிவிட்டுத் தாங்களும் உணவருந்துவது போலப் பாசாங்கு செய்ய விருந்தாளியாக
வந்தவரோ வயிறார உண்டுவிட்டு நன்றி கூறி விடை பெற்றார்.

அன்று அபூதல்ஹாவின் குடும்பமே இராப்பட்டினி !

விருந்தாளியாக வந்தவர் மீண்டும் நபிகள் நாயகத்தைச் சந்தித்துத்
தாம் திருப்தியாக உணவருந்த ஏற்பாடு செய்தமைக்கு நன்றி தெரிவித்துப் போனார்.

அபூதல்ஹாவின் ஏழ்மை நிலை அறிந்தவர்கள் அவரின் விருந்தோம்பும் தன்மைகுறித்து சிலாகித்துப் பேசிக்கொண்டனர். ஆனால் அபூதல்ஹா விருந்தாளிக்கு உணவளித்துவிட்டுப் பசியோடு இரவைக் கழித்ததை அவர்கள் எவரும் அறியார், எம்பெருமானாரைத் தவிர!

மறுநாள் அபூதல்ஹா நபிகள் நாயகத்தைச் சந்தித்தபோது, " நேற்று இரவு நீங்களும் உங்கள் உள்ளத்தாளும் நடந்துகொண்ட விதம் குறித்து இறைவன் மிக மகிழ்ச்சி அடைந்தான், என்று கூறி அபூதல்ஹாவைப் பாராட்டுகிறார்.


"தாங்களே தேவையுள்ளவர்களாக இருந்தாலும் கூட பிறருக்கு முன்னுரிமை வழங்குகின்றார்கள்" என்ற அருட்குரானின் திருவசனத்தின் பிரதிபலிப்பாக அபூதல்ஹா தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.


ம்ம்ம்.. இந்தக் காலத்தில் எல்லோர் இல்லங்களிலும் இப்படி உள்ளத்தரசிகள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?


என்னுடன் பணிபுரியும் ஒரு நண்பர். மாலை மணி ஐந்து எப்போது அடிக்கும் என்று காத்திருந்தது போல இருந்துவிட்டு 5 மணி ஆனதும் மனிதர் அரக்கப் பரக்க வீட்டுக்குக் கிளம்பிவிடுவார்.

"அப்படி என்ன அவசரம்?", என்று ஒரு நாள் கேட்டேன். " என் மனைவி எனக்காகக் காப்பி குடிக்காமல் காத்துக் கொண்டிருப்பாள், அதான்" என்றார்.


"உங்க பேரில் அவ்வளவு மரியாதையா? உங்க மனைவிக்கு என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டேன்.


"அப்படியெல்லாம் இல்லைங்க..... நான் போய்த்தான் காப்பி போட்டு அவளுக்கும் கொடுத்துவிட்டு நானும் குடிப்பது வழக்கம்...!?" என்கிறார்.

விபசாரியான ஒரு பெண் ஒரு கிணற்றின் விளிம்பில் தன் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள் அந்த நாயை தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக்கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி கிணற்று நீரை இறைத்து அதற்கு கொடுத்தாள் ஆகவே அது பிழைத்து கொண்டது. அவள் ஒர் உயிருக்குக் காட்டிய இந்த கருணையின் காரணத்தினால் அவளுக்கு பாவமன்னிப்பு வழங்கப்பட்டது. -அபூஹுரைரா (ரலி)

- ஆல்பர்ட்

No comments: