Friday, September 21, 2007

அண்ணல் நபிகள் நடந்த பாதையில்...! (9)-

" தன் குடும்பத்தார், தன் செல்வம், தன் அண்டைவீட்டார் ஆகியோர் விசயத்தில்ஒரு மனிதன் செய்யும் தவறுகளுக்குத் தொழுகை, தர்மம் ஆகியன பரிகாரம் ஆகின்றன. ''-திருக்குரான்.

பால்காரர் வந்துவிட்டார்.....!

அபூபக்கர் சித்திக்!

மக்கா நகரின் மகத்தான மனிதர்!!
இறைத் தூதர் முகம்மது நபி (ஸல் ) அவர்களின் இதயம் கவர்ந்த இனிய நண்பர்; அன்பும் பண்பும் ஒருங்கே அமையப்பெற்ற பெருந்தகையாளர் ஆவார்.

செல்வந்தர் என்ற கர்வமோ, அகம்பாவமோ மருந்துக்கும் இல்லாத பேராளர்!
ஏழை எளியோர்க்கு எப்போதும் உதவுகின்ற பேராளர்!

அபூபக்கர் சித்தீக் அவர்களின் இல்லத்துக்கு அருகே வசித்தவர்கள்
ஏழை எளியவர்களாகவும் முதியவர்களாகவும் அனாதைகளாகவும் இருந்தனர்; அவர்களின் அன்றாடத் தேவைகளைத் தனது பணியாட்களைக் கொண்டு நிறைவேற்றியிருக்கலாம்.

ஆனால் அபுபக்கரோ தானே தினமும் சென்று அவர்களின் சுய தேவைகளை நிறைவேற்றி வந்தார். எப்படி என்றால், சிலருக்கு மாவு அரைத்துக் கொடுப்பார். சிலருக்குத் தானே ரொட்டி சுட்டுக் கொடுப்பார்.

சிலருக்கு வேண்டிய மளிகைப் பொருட்களை வாங்கி வந்து கொடுப்பார்.

வயதான மூதாட்டி (வயதானால்தான் மூதாட்டி என்று உடனே

யாரும் வரிந்து கட்டிகொண்டு வந்துவிடவேண்டாம்!?)
ஒருவருக்கு ஆடு ஒன்று இருந்தது. மூதாட்டியின் வீட்டிற்குக் காலையிலும் மாலையிலும் அபூபக்கர் சென்று பால் கறந்து
கொடுத்து வருவது உட்படப் பல வேலைகளைத் தானே செய்து
உதவி வந்தார்.

நபி அவர்கள் மரணமெய்திய பிறகு மக்கள் அபூபக்கர் அவர்களையே தங்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்தார்கள். அதாவது அரசுத் தலைவராக ( கலீ·பாவாக ) தேர்ந்தெடுத்தனர்.

இந்தச் செய்தி அபூபக்கரின் இல்லத்துக்கு அருகில் வசித்தவர்களுக்குத் தெரியவந்தபோது ஒருபுறம் மகிழ்ச்சி அடைந்தாலும், மறுபுறம் மனக் கவலையுங் கொண்டனர். இனிமேல், அபூபக்கர் அரசுப் பணிகளில் மூழ்கிவிடுவார், நம்மை எங்கே கவனிக்கப் போகிறார்? அதற்கு அவருக்கு நேரமும் கிடைக்காதே என்பதுதான் அவர்களின் கவலைக்குக் காரணமாக இருந்தது.

ஆட்சித்தலைவர் பொறுப்பேற்ற பிறகும் அபூபக்கர் தம் அண்டை அயலாரை மறக்கவில்லை; வழக்கம் போல அபூபக்கர்

அதிகாலையில் முதல் வேலையாக மூதாட்டி வீட்டிற்குச்
சென்றார். மூதாட்டியின் வீட்டிற்கு முன் நின்றுகொண்டிருந்த
சிறுமி ஒருத்தி வேகமாக வீட்டிற்குள் ஓடி,

" பாட்டீ...பால்காரர் வந்துவிட்டார் " என்று பெருங் குரல் கொடுத்துக்கொண்டே ஓடினாள். பாட்டிக்கு மட்டுமல்ல,
அபூபக்கரின் வழக்கமான சேவைகளைப் பெறுகின்ற
எல்லோருக்கும் மிக்க மகிழ்ச்சி ஏற்பட்டது.

இனிமேல் கிடைக்காது அவரின் சேவை என்றெண்ணியிருந்த அவர்களுக்கு மகிழ்வு ஏற்படாதா என்ன?

அபூபக்கர் சம்பவத்தை எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரிடம் சொன்னேன். அவர் அரசாங்கத்தில் ஒரு பெரிய அதிகாரியாக

இருப்பவர்.

"இந்தக்காலத்தில் சாதாரண நிலையிலிருந்த ஒருவருக்குப் பெரிய பதவி கிடைத்தால் பழசை மறக்காமல் செய்வது என்பது அபூர்வம் என்று சொன்னேன்.

அதற்கு நண்பர் தன்னோட சோகமான அனுபவத்தை என்னிடம் சொன்னார். அபூபக்கர் காலம் அந்தக்காலம்!

இந்தக்காலத்தில் நல்லது என்று எண்ணி யாருக்காவது உதவி
செய்தால் நாம்தான் வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டியதாகிவிடுகின்றது என்றார்.

அவரோட அனுபவம் என்ன என்று விசாரித்தேன்.


அவரும் நடந்ததைச் சொன்னார்.

ஒரு நாள் என்னைப் பார்க்கவேண்டும் என்று ஒரு ஆள் வந்தார்.
வந்த ஆள் கேட்டார், "சார், போன மாசம் வந்த பெரிய வெள்ளத்தில் நான் மாட்டிக்கிட்டு தத்தளிச்சப்ப என்னைக் காப்பாத்திக் கரை சேத்தது நீங்கதானா சார், " என்று கேட்டார்.

"ஆமாம்! அதனால் என்னப்பா, அது என்னுடைய கடமை. இதற்குப்
போய் நன்றி எல்லாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை " என்று சொன்னேன்.

அதற்கு வந்த ஆள் சொன்னார்: -" அதற்கு இல்லை சார்! அன்னைக்குச் சட்டைப் பையில் ஒரு நூறு ரூபாய் நோட்டு வச்சிருந்தேன். அதக் காணோம்! அதான் உங்களக் கேட்டுட்டுப் போகலாம்ன்னு வந்தேங்கிறான்!?"

"நிச்சயமாக அல்லாஹ் உங்கள் தோற்றங்களையோ, உங்கள் பொருட்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையும், உங்கள் செயல்களையுமே பார்க்கிறான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

- ஆல்பர்ட்.

அண்ணல் நபிகள் நடந்த பாதையில்...! (8)

"அண்டை வீட்டாளர்களின் உரிமைகள் என்னவென்பது உங்களுக்குத் தெரியுமா? அண்ணல் நபிகளிட்ட பட்டியல் இதோ....
உங்கள் அண்டை வீட்டார் உதவி கேட்டால் உதவுங்கள். ஆறுதல் தேவைப்படும்போது ஆறுதல் அளியுங்கள்; அவருக்குத் தக்க சமயத்தில்
கடன் கொடுங்கள்; அவர் துயரப்பட்டு நிற்கும்போது அவரின் துயரைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அவர் நோய் வாய்ப்படும்போது நலம் விசாரியுங்கள்; அவர் மரணமடைய நேரிட்டால் இறுதிச் சடங்குகளில் மனமுவந்து கலந்துகொள்ளுங்கள்; அவர் நல்லது செய்தால் பாராட்டுங்கள். வாழ்த்துங்கள்; அவருக்குத் துன்பம் நேரும்போது அவர் துயர் களைய முற்படுங்கள்; அவருக்குக் காற்று கிடைக்காதவாறு உங்கள் சுவரை அவர் அனுமதியின்றி உயரமாக எழுப்ப வேண்டாம்; அவருக்குத் தொல்லைகள் ஏதுமில்லாமல் நடந்துகொள்ளுங்கள்; - எம்பெருமானார் நபிகள் நாயகம்.

சூரியக் கதிர்கள் இரவின் மடியில் சற்றே தலை சாய்த்துத் துயிலத் துவங்கிய சமயமது! தம் தொழுகையை நிறைவேற்றிவிட்டு பள்ளிவாயிலை விட்டு எம்பெருமானார் வெளியே வருகின்றார்கள்!

எம்பெருமானாரைச் சுற்றிலும் ஒரு கூட்டம் சூழ்ந்துகொள்ள, அந்த அற்புதப் பொழுதில் எம்பெருமானார் போதனைகளைச் செவிமடுத்துக் கொண்டிருந்தனர், கூடியிருந்தோர்!

எம்பெருமானார் முகம்மது நபி (ஸல்) அவர்கள், உதிர்க்கின்ற நல் முத்துக்களை சிந்தாமல் சிதறாமல் செவிகளில் வாங்கிக்கொண்டிருந்த நேரத்தில்தான் அந்தச் சம்பவம் நிகழத் துவங்குகின்றது!


கந்தலான ஆடை, கலைந்த கேசம், பஞ்சடைந்த கண்கள், ஒட்டிய வயிறு, எலும்புக்கூடு ஒன்று நடந்து வருவது போல் ஒருவர் தள்ளாடியபடியே அண்ணல் நபிகள் அமர்ந்திருந்த கூட்டத்தை நோக்கி வருகின்றார்!

நேராக எம்பெருமானிடம் சென்று, சொல்லுகின்றார்.

அவர் நா அசைகின்றது; வார்த்தைகளோ வெளிவரவில்லை;
கைகளைத் தூக்கிச் சைகை செய்ய முனைகின்றார்.
கை உயரே எழும்ப மறுக்கின்றது; அவர் என்ன சொல்ல
வருகின்றார் என்று புரியாமல் அங்கிருந்த பலரும் குழப்பத்தோடு அவரையும் நபிகளையும் மாறிமாறிக் கவனிக்கின்றனர்.

ஆனால் நபிகள் நாயகமோ வறுமையின் கோரப் பிடிகளில் சிக்கித் தவிக்கின்ற அந்தமனிதனை வாட்டும் நோய் என்ன என்பதை அறிந்து கொண்டார். நபிகள் நாயகம், உடனே அருகிலிருந்த ஒருவரை அழைத்துத் தம் வீட்டிற்குச் சென்று அந்த மனிதருக்கு உணவளிக்கும் பொருட்டு எதாவது வாங்கி வரும்படிக் கட்டளையிடுகின்றார்கள்;

சற்று நேரத்தில் திரும்பி வந்த அந்த மனிதர் வீட்டில் உணவு ஏதும் மீதம் இல்லை என்பதைத் தெரிவிக்கின்றார். நபிகள் நாயகம் அவரைத் தமது மற்ற மனைவியர் இல்லங்களுக்கும் சென்று இருக்கும் உணவை விரைந்து பெற்று வரும்படி பணிக்கின்றார்கள்!
அங்கிருந்தும் திரும்பி வந்த அவர், அருந்துவதற்கு தண்ணீர் மட்டுமே இருப்பதாகவும் உணவுப் பதார்த்தங்கள் ஏதும் மீந்திருக்கவில்லை என்பதை நபிகளிடம் சொல்லுகின்றார். ஏழ்மையில் இனிமை கண்ட ஏந்தல் எம்பெருமானார் இல்லங்களில் உணவைச் சேமித்து வைக்கின்ற பழக்கமோ, வழக்கமோ இருந்ததில்லையாதலால், தம்மைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களை நோக்கிச் சொல்லுகின்றார்,


"உங்களில் யார் இந்த மனிதருக்கு உணவு அளிக்கின்றாரோ அவருக்கு இறைவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்..!" என்றார்கள்.


நபிகள் சொல்லி முடிக்கும் முன்பாகத் துள்ளி எழுந்தார் அபூதல்ஹா என்பவர்!

"உங்கள் அன்புக் கட்டளையை நிறைவேற்ற நான் தயாராக இருக்கின்றேன்," என்றார் மெத்தப்பணிவோடு!


நபிகளின் அனுமதி கிடைத்ததும் எலும்புக்கூடாயிருந்த அந்த மனிதரைக் கைத்தாங்கலாகத் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றார், அபூதல்ஹா!

இல்லத்தை அடைந்ததும் தம் இல்லாளிடம் (மனைவியிடம்) கேட்கின்றார். சாப்பிடுவதற்கு என்ன இருக்கின்றது? இந்த மனிதருக்கு நாம் உணவு படைத்தாகவேண்டும், என்கிறார்.

அவரின் உள்ளம் அறிந்த உள்ளத்தாள் உள்ளதை உள்ளவாறே உரைக்கின்றாள்.

"இன்று நம் இல்லில் குழந்தைகளுக்கு மட்டுமே உண்பதற்கு உள்ளது. தாங்கள் என்ன செய்யச் சொல்கின்றீர்களோ செய்யச் சித்தமாயிருக்கின்றேன்" என்கிறார் அபூதல்ஹாவின் உள்ளம் கவர்ந்த உள்ளத்தரசி!


குழந்தைகளைச் சமாதானம் செய்து தூங்கவைத்துவிடு.

உணவருந்துமிடத்தில் எல்லாவற்றையும் தயாராக வைத்துவிட்டுக் கைவிளக்கை சற்றே மங்கலாக இருக்குமாறு வைத்துவிடு. அவரோடு நாமும் சாப்பிடுவது போல பாவனை செய்து சமாளித்துக் கொள்வோம், என்கிறார் அபூதல்ஹா!

அபூதல்ஹாவின் மனையாளும் அவ்வாறே உணவை எடுத்து வைத்துவிட்டு விளக்குத் திரியைச் சரி செய்வது போல மங்கச் செய்துவிடுகின்றார். விருந்தினருக்குப் பரிமாறிவிட்டுத் தாங்களும் உணவருந்துவது போலப் பாசாங்கு செய்ய விருந்தாளியாக
வந்தவரோ வயிறார உண்டுவிட்டு நன்றி கூறி விடை பெற்றார்.

அன்று அபூதல்ஹாவின் குடும்பமே இராப்பட்டினி !

விருந்தாளியாக வந்தவர் மீண்டும் நபிகள் நாயகத்தைச் சந்தித்துத்
தாம் திருப்தியாக உணவருந்த ஏற்பாடு செய்தமைக்கு நன்றி தெரிவித்துப் போனார்.

அபூதல்ஹாவின் ஏழ்மை நிலை அறிந்தவர்கள் அவரின் விருந்தோம்பும் தன்மைகுறித்து சிலாகித்துப் பேசிக்கொண்டனர். ஆனால் அபூதல்ஹா விருந்தாளிக்கு உணவளித்துவிட்டுப் பசியோடு இரவைக் கழித்ததை அவர்கள் எவரும் அறியார், எம்பெருமானாரைத் தவிர!

மறுநாள் அபூதல்ஹா நபிகள் நாயகத்தைச் சந்தித்தபோது, " நேற்று இரவு நீங்களும் உங்கள் உள்ளத்தாளும் நடந்துகொண்ட விதம் குறித்து இறைவன் மிக மகிழ்ச்சி அடைந்தான், என்று கூறி அபூதல்ஹாவைப் பாராட்டுகிறார்.


"தாங்களே தேவையுள்ளவர்களாக இருந்தாலும் கூட பிறருக்கு முன்னுரிமை வழங்குகின்றார்கள்" என்ற அருட்குரானின் திருவசனத்தின் பிரதிபலிப்பாக அபூதல்ஹா தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.


ம்ம்ம்.. இந்தக் காலத்தில் எல்லோர் இல்லங்களிலும் இப்படி உள்ளத்தரசிகள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?


என்னுடன் பணிபுரியும் ஒரு நண்பர். மாலை மணி ஐந்து எப்போது அடிக்கும் என்று காத்திருந்தது போல இருந்துவிட்டு 5 மணி ஆனதும் மனிதர் அரக்கப் பரக்க வீட்டுக்குக் கிளம்பிவிடுவார்.

"அப்படி என்ன அவசரம்?", என்று ஒரு நாள் கேட்டேன். " என் மனைவி எனக்காகக் காப்பி குடிக்காமல் காத்துக் கொண்டிருப்பாள், அதான்" என்றார்.


"உங்க பேரில் அவ்வளவு மரியாதையா? உங்க மனைவிக்கு என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டேன்.


"அப்படியெல்லாம் இல்லைங்க..... நான் போய்த்தான் காப்பி போட்டு அவளுக்கும் கொடுத்துவிட்டு நானும் குடிப்பது வழக்கம்...!?" என்கிறார்.

விபசாரியான ஒரு பெண் ஒரு கிணற்றின் விளிம்பில் தன் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள் அந்த நாயை தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக்கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி கிணற்று நீரை இறைத்து அதற்கு கொடுத்தாள் ஆகவே அது பிழைத்து கொண்டது. அவள் ஒர் உயிருக்குக் காட்டிய இந்த கருணையின் காரணத்தினால் அவளுக்கு பாவமன்னிப்பு வழங்கப்பட்டது. -அபூஹுரைரா (ரலி)

- ஆல்பர்ட்

அண்ணல் நபிகள் நடந்த பாதையில்...! (7)

''என்னுயிரின் பாதுகாவலனும் பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருள்களின் பாதுகாவலனுமாகிய இறைவா! மனிதர் அனைவரும் ஒருவருக்கொருவர் உடன்பிறந்தோரே என்று நான் உறுதி கூறுகிறேன்''-எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?"

ஒரு இஸ்லாமியப் பெரியவர்! அவர் பெயர் இஸ்மாயில் இராவுத்தர்!

அவர் ஏழை. அதனாலே அவர் ஒரு சிறிய குடிசை வீட்டில் வாழ்ந்தார். ஒருநாள் இராத்திரி. நல்ல மழை பெஞ்சுகிட்டிருந்துச்சு. அந்தப் பெரியவரும் அவர் மனைவியும் அந்த குடிசைக்குள்ளே தூங்கிக்கிட்டிருந்தாங்க.

அந்த நேரம் பார்த்து யாரோ திடீர் என்று கதவைத் தட்டுற மாதிரிச் சத்தம் கேட்டுச்சு. அந்தப் பெரியவர் முழிச்சுக்கிட்டார். மனைவியை எழுப்பினார்.

"வெளியே யாரோ வழிப்போக்கர்... நமக்குத் தெரியாத நண்பர் வந்திருக்கார் போல தெர்¢கிறது... கதவைத் திறக்கிறேன்! நீ போய் அந்தப் படுதாவைப் போர்த்துக்கொண்டு அந்தச் சுவர் ஓரமா இருந்துக்க" ன்னார்.


அதற்கு அந்த அம்மா..."உள்ள இடமே இல்லயே... நம்ம ரெண்டு பேருக்கே இங்கே இடம் பத்தாதே... அப்படி இருக்கும்போது இன்னும் ஒரு ஆள் எப்படி உள்ள இருக்க முடியும்?" -ன்னு கேட்டாங்க.


அதற்கு அவர் சொன்னார்."இது ஏழையோட குடிசை...இதில எத்தன பேர் வந்தாலும் எடம் உண்டு!" என்று பதில் சொன்னார்.


"நான் யதார்த்தமாகப் பேசுறேன். நீங்களோ தத்துவமா பேசுறீங்க!"
என்று அந்தம்மா சொன்னார்கள்.

அதற்கு மறுபடியும் அவர் சொன்னார்: -"மனதிலே இடம் இருந்தால் இந்தக் குடிசையையே அரண்மனை மாதிரி நம்மாலே உணர முடியும். உள்ளம் குறுகியிருந்தா ஒரு பெரிய அரண்மனை கூட சின்னதாத்தான் தெரியும்.

நம் வீட்டு வாசல் தேடி வந்திருக்கின்ற ஒரு மனிதனை எப்படி நாம் போங்க என்று சொல்ல முடியும்? இதுவரைக்கும் இந்தக் குடிசையிலே நாம ரெண்டு பேர் படுத்திருந்தோம். இந்த இடத்தில் நிச்சயமா மூன்று பேர் படுக்க முடியாது! ஆனா குறைந்தது மூன்று பேர் உக்காரலாம்!

அதனால நாம எல்லோரும் உட்கார்ந்தால் இன்னும் ஒருவருக்கு இங்கே எடம் கிடைக்கும்!" என்றார். அதன் பிறகு அந்தப் பெரியவர் கதவைத் திறந்தார்... அந்த ஆள் உடம்பு முழுவதும் நனைந்து போய் நின்னுக்கிட்டிருந்தார். கதவைத் திறந்ததும் உள்ளே வந்தார். ரெண்டு பேரும் உக்கார்ந்து பேச ஆரம்பித்தார்கள்!

கொஞ்ச நேரம் கழித்து மேலும் ரெண்டு பேர் வந்து கதவைத் தட்டினார்கள். உடனே அந்தப் பெரியவர்: "வேறே யாரோ வந்திருக்காங்க போல இருக்கே... போய் கதவைத் திறங்க!" என்று சொன்னார்.
கொஞ்ச நேரத்துக்கு முன்பு உள்ளே வந்த ஆசாமி பெரியவரிடம் சொன்னான்.


"கதவைத் திறப்பதா... இங்க எடமே இல்லையே!"-என்றான். கொஞ்ச நேரத்துக்கு முன்னால் இவன் வெளியிலே நின்றுகொண்டிருந்தான்...இந்தப் பெரியவரின் நல்ல மனசினாலேதான். நமக்கு உள்ளே இடம் கிடைத்தது என்பதை மறந்து விட்டான்.

எதற்குக் கதவைத் திறக்கணும்? வேண்டாமே'-என்றான்.


"அன்புதான் உங்களுக்கு இடம் கொடுத்தது... அந்த அன்பு இன்னும் இருக்கிறது... அது உங்களோட முடிஞ்சு போகல்லை... தயவு செய்து கதவை திறந்துவிடுங்க..என்றார் பெரியவர்.

நாம் இப்போது கொஞ்சம் விலகித் தானே உட்கர்ந்திருக்கின்றோம்... இனிமே, கொஞ்சம் நெருங்கி உட்காரலாம். சரியாப் போய்டும்!" என்றார் அந்தப் பெரியவர்.

கதவைத் திறந்தாங்க.

அந்த ரெண்டு பேரும் உள்ளே வந்தார்கள்.ஒரு வழியாகச் சமாளித்து அமர்ந்து கொண்டார்கள்.


சிறிது நேரம் சென்றது!யாரோ கதவை மீண்டும் தட்டி ஒலியெழுப்புகின்ற சத்தம் கேட்டது.

அந்தப் பெரியவர், கதவு ஓரமாக உட்கார்ந்திருந்த ஆளைப்பார்த்துச் சொல்கின்றார்..."கதவைத் திறங்க... யாரோ இன்னுமொரு புது நண்பர் வந்திருக்கார்!" - என்றார்.

அந்த ஆள் கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்க்கின்றார். அங்கே... ஒரு கழுதை உடம்பு முழுக்க நனைந்து குளிரிலே நடுங்கிக் கொண்டிருந்ததைப்பார்க்கிறார்.
பார்த்துவிட்டு, வேகமாகக் கதவைத் தாளிட்டுவிட்டு...... "இது கழுதைங்க.... அதுக்காக நாம் திறந்து விட வேண்டிய அவசியமில்லை...." என்றான்!


இங்கே மிருகங்களைக்கூட மனிதர்களாக நடத்தித்தான் எனக்குப் பழக்கம்! தயவு செய்து கதவைத் திறந்து விடுங்க...!" என்றார்.


"இடம் எங்கே இருக்கிறது?" என்று எல்லாருமாச் சேந்து கத்தினாங்க.அதற்கு அவர் சொன்னார், "இங்கே நிறைய இடம் இருக்கு. உட்காருவதற்குப் பதிலாக நாம் எல்லோரும் எழுந்து நின்று கொள்ளலாம் கவலைப்படாதீர்கள்!

அப்படித் தேவைப்பட்டால் நான் வெளியிலே போய் இருந்து கொள்கிறேன்!" என்றார் பெரியவர்.

"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?"என்று சொன்னார் அய்யன் திருவள்ளுவப் பெருந்தகை. அது இதுதான்.


" தாங்களே தேவையுள்ளவர்களாக இருந்தாலும்கூட தங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை வழங்குகின்றார்கள்...." என்று அருட்குரான் அறிவிக்கிறது; அருட்குரானின்வழிநடப்பவர் இந்தப் பெரியவர்!

வாழ்க்கையிலே அமைதியான நேரம் எது தெரியுமா?

எந்த விதமான நிபந்தனைகளும் இல்லாமல் அன்பு செலுத்துகின்ற நேரம் இருக்கிறதேஅதைவிட அமைதியான நேரம் வேறே எதுவுமில்லை என்கிறார் ஒரு பெரியவர்! (ஓஷோ)

நம்ம ஆள் ஒருத்தன்:


"எங்க வீட்டுக்கு அடிக்கடி விருந்தினர் வருவது உண்டு சார்.
எவ்வளவு விருந்தாளி வந்தாலும் கதவை திறந்து விட்டுட்டு மரியாதையா நான் வெளியிலே போயிருவேன் சார்!" என்றான்.

"ஏன் அப்படிச் செய்கிறாய்? என்று கேட்டேன். "நான் வீட்டுக்கு உள்ளே இருந்தால் அவங்களுக்கு எல்லாம் சாப்பாடு வேறே போட வேண்டியிருக்குமே,அதானாலே வெளியிலே போயிடறேன்!". என்றான்.

நபி (ஸல்) அவர்கள் வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் முஸ்லிம்களின் இதயங்களில் உபகாரம் செய்ய வேண்டுமென ஆர்வத்தை வளர்த்தார்கள். (ஸன்னன் அபூ தாவூத்)

- ஆல்பர்ட்

Wednesday, September 19, 2007

அண்ணல் நபிகள் நடந்த பாதையில்...! (6)

அண்ணல் நபிகள் நடந்த பாதையில்...! (6)

"தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்!" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அபு அனிபா என்று ஒரு பெரியவர் இருந்தார். இஸ்லாமியப் பெரியவர். அவர் ஒரு நெசவாளர். மிகவும் ஏழ்மையான நிலைமையில் இருந்தார்.

நாள்தோறும் அவர், தானே தனது கையால் நூல் நூற்று நெசவு செய்வார். துணிகளைத் தயார் பண்ணுவார். அதையெல்லாம் தோளில் போட்டுக்கொண்டுதெருத் தெருவாகப் போய் விற்பனை செய்வது அவரின் வழக்கம்.

அதில் வரக்கூடிய சொற்ப வருவாயை வைத்துகொண்டு அவர் தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். அவர் ஒரு நாள் ஒரு பாலைவனப் பகுதி வழியாகப் போய்க் கொண்டிருந்தார். அவருடன் இன்னும் இரண்டு நண்பர்களும் போய்க் கொண்டிருந்தார்கள்!

வழியிலே ஒரு ஆள் பேரீச்சம்பழம் விற்றுக் கொண்டிருந்தான்.
'எப்படி விலை? என்று விசாரித்தார்.
"காசுக்குப் பத்துபழம்" என்றான் அவன். அந்த ஊர் காசு!

"சரி! ஒரு காசுக்கு பழம் கொடு! அப்படியே சருகில் வைத்துக் கட்டிக்கொடுக்கும்படியும் தாம் நடந்து செல்லும் வழியிலே சாப்பிட்டுக்கொள்ள ஏதுவாக இருக்கும்! என்றார் அந்தப் பெரியவர்.

அதே மாதிரி அந்த ஆளும் ஒரு உலர்ந்த சருகில் பழத்தை வைத்துக் கட்டிக் கொடுத்தான். அதை வாங்கிக் கொண்டு இவரும் மற்ற இரண்டு பேரும் போய்க் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் போய்க்கொண்டிருந்தது ஒரு பாலைவனப்பகுதி இல்லையா? அதனாலே எங்கேயாவது தண்ணீர் கிடைக்கின்ற இடமாகப் பார்த்து உட்கார்ந்து பழத்தைச் சாப்பிடலாம் என்று பேசிக்கொண்டே போகிறார்கள்.
வழியிலே ஒரு நீர் நிலை தெரிந்தது! அங்கே போய் மூன்று பேரும் வசதியான இடமாகப் பார்த்து அமர்ந்தார்கள். பெரியவர் பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பத்து பழம்தானே இருக்க வேண்டும்? ஆனால் ஒரு பழம் கூடுதலாக
அதில் இருந்தது!

அதைப் பார்த்தவுடனே பெரியவர் பதறிப் போய்விட்டார்.

ஒரு காசுக்கு 10 பழம்தானே அவர் சொன்னார். கைத் தவறுதலாக அந்த பழ வியாபாரி ஒரு பழத்தைக் கூடுதலாக வைத்துவிட்டாரே! இது அவருக்கு நஷ்டமாச்சே! இப்ப என்ன செய்வது என்று யோசித்தார்.

"சரி... திரும்பிப் போய் அந்தப் பழவியாபாரியை சந்தித்து கூடுதலாக இருக்கும் ஒரு பழத்தை கொடுத்துவிட்டு வந்துடுவோம்!" என்று புறப்பட்டார்.
அருகிலிருந்த நண்பர்கள், அவர் சொன்னதைக் கேட்டுச் சிரித்தார்கள்! (ஏன்? நாமாக இருந்தாலும் அதைத்தானே செய்திருப்போம்!)

"என்னங்க இது? வேடிக்கையா இருக்கிறது!

ஒரே ஒரு பேரீச்சம் பழம் கூட இருக்கிறது என்பதற்காக அதை திருப்பிக் கொடுப்பதற்காக யாராவது திரும்பவும் மூணுகல் தொலைவு திரும்பி நடப்பார்களா?

இது தேவைதானா?" என்று கேட்டார்கள். பெரியவர் அவர்கள் சொன்னதை ஏற்றுக்கொள்ளவில்லை.


" ஒரு வியாபாரத்தில் நாம் காசு கொடுத்து அதற்குச் சரியா ஒரு பொருளை வாங்குகின்றோம். அதுதான் நியாயம். அதிகப்படியா எதுவும் குடுத்தா அது விலக்கப்பட்ட பொருள். அது நம்மை சேரக்கூடாது. அபஹாரமானது!" என்று அவர்களூக்கு விளக்கம் சொல்லிவிட்டு விடுவிடுவென்று தாம் வந்த பாதையிலேயே நடக்க ஆரம்பித்தார்.

அந்த வியாபாரியைத் தேடிப் பிடித்து கூடுதலாக அவர் கை தவறிப்போய் வைத்ததைக் கொடுப்பதற்காகவே திரும்பவும் அவரைத்தேடி வந்ததாகச் சொல்லி அந்த ஒரு பழத்தைத் திருப்பிக் கொடுத்தார்.


ஆனால், அந்த வியாபாரி என்ன சொன்னார் தெரியுமா?

"ஐயா! அந்த ஒரு பழத்தை நான் தெரியாமல் ஒன்றும் கொடுக்கவில்லை!

உங்க தோற்றத்தைப் பார்த்ததும் எனக்கு உங்கள் மேல் ஒரு
மரியாதை ஏற்பட்டது. அதனாலேதான் ஒரு பழத்தை அதிகமா
வைத்துக் கட்டிக்கொடுத்தேன்.

நீங்க இவ்வளவு தூரம் வந்து இதைக் கொடுக்க வேண்டுமா? நீங்களே அதை வைத்துக் கொள்ளுங்கள்!" என்று சொன்னார், அந்த வியாபாரி.


ஆனால் பெரியவரோ அதற்குச் சம்மதிக்கவில்லை!

வணிகத்திலே - வியாபாரத்திலே - வாங்குகிறவர் ஒருத்தர்.
விற்கிறவர் ஒருத்தர். ரெண்டு பேரும் இவ்வளவுக்கு இவ்வளவு என்று
ஒரு உடன்பாட்டுக்கு வர்றாங்க. அதன்படி நடந்து கொள்கின்றார்கள் அதுதான் வியாபாரம்.

அந்த உடன்பாட்டுக்கு ஒத்துப் போகின்றதுதான் நியாயம். அந்த நியாயம் தவறி நாம் நடந்து கொள்ளக்கூடாது என்று சொல்லிவிட்டு பழத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டு வந்த வழியே திரும்ப நடக்க ஆரம்பித்தார்.
நேர்மை-நியாயம் இதற்க்கெல்லாம் இலக்கணம் அந்தப் பெரியவர்!


இந்தக் காலத்தில் எல்லாம் நாம் அப்படியா நடந்து கொள்கின்றோம்?
இப்படி நம் நாட்டில் நடந்தால் எப்படி இருக்கும்? அப்புறம் எதற்கு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் எல்லாம் தேவைப்படப்போகிறது?

நீங்களே கொஞ்சம் நல்லா யோசித்துப் பாருங்களேன். " கொசுறு " இல்லை என்றால் இப்போதெல்லாம் வியாபாரமே நடப்பது இல்லை.


அம்பது ரூபாய்க்கு காய்கறி வாங்கினாலும் அம்பது பைசாவுக்கு கறிவேப்பிலை வாங்க மனசில்லாமல் யோவ் பெரிசு ஒரு இணுக்கு கறுவப்பிலையை போடுன்னு பையை அகலத் திறந்து இல்ல காட்டிக்கிட்டு நிக்கிறோம்

அதுமட்டுமில்லை... வாங்குகிறவர் விற்கின்றவரை எப்படி ஏமாற்றுவது என்று பார்க்கின்றார். விற்கின்றவர் வாங்குகின்றவரை எப்படி ஏமாற்றுவது என்று பார்க்கின்றார். சாமர்த்தியசாலிகள் பிழைத்துக் கொள்கின்றார்கள்!


ஒருவர் அப்படித்தான் மாம்பழம் வாங்கினார்.

'ஒரு பழம் ஒரு ரூபாய்! ' என்றார் கடைக்காரர்.

"பத்து ரூபாய்க்குப் பழம் குடுங்க" என்றார் இவர். அவர் பத்துப் பழம் கொடுத்தார்.

இவர் அடித்துப் பிடித்துப் பேசி ஒரு பழம் அதிகமாவே வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டார். வந்ததுக்கப்புறம் 'பாவம் அந்தக் கடைக்காரர்' என்று நிரம்ப வருத்தப்பட்டார்.

"நீங்கள்தானே அடித்துப் பிடித்து கட்டாயப்படுத்தி ஒரு பழம் அதிகமா வாங்கினீங்க... இப்ப நீங்களே வருத்தப்பட்டா எப்படி?" என்று வீட்டுக்கார அம்மா கேட்டாங்க.

" நான் அதுக்காக வருத்தப்படவில்லை... நான் அந்த வியாபாரியிடம் கொடுத்தது செல்லாத நோட்டு... பாவம் எப்படி அதை மாற்றுவாரோ, என்று எண்ணியே வருத்தப்படுறேன்" என்றார் இவர்.

இதே நேரத்தில் அந்தக் கடைக்காரரும் வருத்தப்பட்டார்;
பாவம், அந்தப் புளிப்பான பழத்தை யார் தலையில்
கட்டலாம் என்று பாத்தேன், வசமாச் சிக்கினான்
அந்த ஆள்..! எப்படித்தான் அந்தப் பழத்தைச்
சாப்புடப் போறானோ, என்று...!

"ஹலால் எனும் அனுமதிக்கப்பட்டது தெளிவானது; ஹராம் எனும் விலக்கப்பட்டதும்
தெளிவானது; அவ்விரண்டிற்குமிடையே சந்தேகத்திற்கிடமான காரியங்கள் உள்ளன.
பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைவிட்டு விடுகிறவர் பாவம் என்று தெளிவாகத்
தெரிவதை நிச்சயம்விட்டு விடுவார்; பாவம் எனச் சந்தேம்ப்படுபவற்றைச் செய்யத்
துணிகிறவர் தெளிவான பாவங்களிலும் வீழ்ந்து விடக் கூடும். பாவங்கள்
அல்லாஹ் போட்ட வேலிகளாகும். வேலியைச் சுற்றி மேய்கிறவர் அதற்குள்ளும்
சென்று விடக்கூடும்" என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.

Tuesday, September 18, 2007

அண்ணல்நபிகள் நடந்த பாதையில்...! ( 5 )

"உங்களுடைய தேவைக்குப் போக மீதமுள்ளவற்றை தருமமாக செலவு செய்யுங்கள்" - எம்பெருமானார் நபிகள் நாயகம்.

சிக்கனமாயிரு... கருமியாயிராதே....!

நபிகள் நாயகத்தின் போதனைகளில் இதுவும் ஒன்று.

ஒரு சமயம்...

எம்பெருமானார், நபிகள் நாயகம் அவர்களைத் தேடிக்கொண்டு ஒரு பெரியவர் வந்தார். வந்த பெரியவரை அமரவைத்து என்ன காரியமாக வந்தீர்கள் என்று கேட்கிறார்.

"எங்கள் ஊரில் பள்ளிவாசல் கிடையாது... தொழுகைக்குப் பக்கத்து ஊருக்குப் போக வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கின்ற நிலையை மாற்ற வேண்டும். எல்லோருமாகச் சேர்ந்து கொஞ்சம் வரி மாதிரிப் போட்டு பணம் வசூல் செய்து பள்ளி வாசல் வேலையைத் துவக்கிவிட்டோம்.

ஆனால், போதிய பணம் இல்லாமல் பாதியோடு வேலை அப்படியே நிற்கிறது. அதை எப்படியும் கட்டியாகணும். நீங்கதான் அதற்கு ஒரு வழி சொல்ல வேண்டும்", என்று கேட்டுக்கொண்டார்.

அதற்கு நபிகள் நாயகம் அந்தப் பெரியவரைப் பார்த்துச் சொன்னார்,
"அருகிலுள்ள ஊரில் ஒரு செல்வந்தர் இருக்கிறார்... அவருடைய பெயர், விபரம் எல்லாம் தருகிறேன்.

நீங்கள்அவரிடம் போய் பள்ளிவாசல் கட்டுவதற்கு உதவவேண்டும் என்று கேளுங்கள்; உங்கள் வேலை சுலபமாகவே முடிந்துவிடும், " என்று சொன்னார்கள் எம்பெருமானார்.


எம்பெருமானார் சொன்னதைக் கேட்ட பின்னும் சற்றுத் தயக்கமாக நின்றார், அந்தப் பெரியவர். அவரது தயக்கத்தைப் பார்த்த எம்பெருமானார் அவர்கள், "உங்கள் தயக்கம் எனக்குப் புரிகிறது நீங்கள் அவரிடம் போய்க் கேளுங்கள், அவர் நிச்சயம் கொடுப்பார் " என்றார்.

அதற்குப் பிறகு பெரியவர், எம்பெருமானார் அவர்கள் குறிப்பிட்ட அந்தப் பணக்காரர் வசிக்கின்ற ஊரைத் தேடிப் போனார்.

அந்தப் பணக்காரரையும் பார்த்தார்.

பணக்காரரைப் பார்த்ததும் பெரியவருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி!

பெரியவர் அதிர்ச்சிக்குக் காரணம் இல்லாமல் இல்லை.

தாம் பார்க்கப் போகின்ற பணக்காரர் பெரிய கருமி என்றும் எச்சில் கையால் காக்கையைக்கூட விரட்டாதவர் என்ற அளவில் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தார்.

அப்படிக் கேள்விப்பட்டது எவ்வளவு உண்மை என்பதைத்தான் அந்தப் பணக்காரரைப் பார்த்தபோது தெரிந்து கொண்டார்.

பார்த்த மாத்திரத்தில் எப்படி அப்படி ஒரு முடிவுக்கு வந்தார்?

பெரியவர் பணக்காரரைப் பார்க்கப்போன நேரத்தில், அந்தப் பணக்காரர், ஒருத்தரை தூணில் கட்டிவைத்து அடித்துக் கொண்டிருந்தார்.

அதைப்பார்த்த பெரியவர், அங்கே நின்றுகொண்டிருந்தவர்களில் ஒருவரிடம், "எதுக்காக அந்த மனிதரை அப்படி அடிக்கிறார்?" என்று கேட்டார்.

அதற்கு அங்கிருந்தவர் சொன்னார், "அய்யா அவங்க, அந்த ஆளைக் கடைக்கு அனுப்பிப் பருப்பு வாங்கி வரச் சொல்லியிருக்கின்றார். அந்த ஆள் பருப்பு வாங்கிவரும்போது பத்துப் பருப்பு கீழே சிந்திச் சிதறவிட்டுவிட்டாராம். அதுக்காக பத்து அடி அடிக்கிறார்," என்று விளக்கம் சொல்லியிருக்கிறார்.

ஒரு பருப்புக்கு, ஒரு அடி வீதம் பத்து அடி என்று கணக்குப் பார்த்து அடிக்கின்ற இந்தக் கஞ்சப் பேர்வழி எங்கே பள்ளிவாசல் கட்டப் பணம் தரப்போகின்றார்? இந்த நேரம் போய் நாம் பணம் கேட்டால் நமக்கு என்ன நடக்குமோ என்று அங்கிருந்து தலை தப்பினால் போதும் என்று நடையைக் கட்டிவிட்டார்.

அங்கே எடுத்த ஓட்டம் நேரே நபிகள் முன்னால் வந்து நின்றார், பெரியவர். அவரைப்பார்த்து நபிகள் அவர்கள் கேட்கிறார்கள்,"பணக்காரர் என்ன கொடுத்தார்?"

"கொடுத்தார், கொடுத்தார் நல்லாவே கொடுத்தார்...அடி, உதை என்று ஆரம்பித்து நடந்ததை விபரமாகச் சொல்லி அப்படிப்பட்டவரிடம் என்னை அனுப்பினீர்களே?!", என்று சொல்லி நிறுத்தினார்.

எம்பெருமானார் அமைதியாகச் சொன்னார், "மறுபடியும் அந்தப் பணக்காரரைப் போய் பார்த்துக் கேளுங்கள், " என்று சொல்கிறார்.

பெரியவருக்கு எம்பெருமானார் சொல்லைத் தட்டயியலாம,
மீண்டும் அந்தப் பணக்காரரைப் போய் பார்க்கக் கிளம்பிச் சென்றார்.

இந்த முறை பெரியவர் பணக்காரரைப் போய் பார்த்தபோது மேலும் அதிர்ந்து போனார். அவருக்கு எம்பெருமானார் மீதே கோபம் வந்தது.

அப்படிக் கோபம் வர என்ன காரணம் என்கிறீர்களா?

இந்த முறையும் அந்தப் பணக்காரர் ஒரு ஆளை ஒரு மரத்தில் கட்டி வைத்து சாட்டையால் அடித்துக்கொண்டிருந்தார்.

அங்கிருந்தவரிடம் பெரியவர், "ஏன் இப்படி மாட்டை அடிக்கிற மாதிரி அடிக்கின்றார்? காரணம் என்ன?" என்று கேட்டார்.

"அந்த ஆளைக் கடையில் போய் எண்ணெய் வாங்கிவரச் சொல்லியிருக்கின்றார், அந்த ஆள் எண்ணெய் வாங்கி வரும்போது பத்துச் சொட்டு எண்ணெயை கீழே சிந்தி விட்டாராம், அதனால் பத்து சவுக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறார், " என்றார் அங்கிருந்தவர்.

பள்ளிவாசல் கட்டப் பணம் கேட்க வந்த நம்ம பெரியவருக்கு நபிகள் பேச்சைக் கேட்டு வந்தது தப்பாப்போச்சு; இந்தக் கருமியிடம் பணம் கேட்டு பள்ளிவாசல் கட்டுவதைவிட பள்ளிவாசல் கட்டுகின்ற எண்ணத்தையே விட்டுவிடுவது நல்லது என்ற முடிவுக்கு கிட்டத்தட்ட வந்து விட்டார்.

இந்தக் கருமியிடம் பணம் கேட்டு அவரும் பத்துரூபாய் நன்கொடை என்று கொடுத்துவிட்டு பள்ளிவாசலை சரியாக கட்டவில்லை என்று ரூபாய்க்கு ஒரு அடியோ உதை என்று கொடுத்தால் அதை வாங்குவது நாம்தான் என்றெண்ணிய பெரியவர், கருமியிடம் பணம் கேட்பதை கைவிட்டுவிட்டு பேசாமல் நபிகள் முன்னால் வந்து நின்றார்.

"செல்வந்தர் என்ன கொடுத்தார்?" என்று எம்பெருமானார் கேட்கின்றார்கள்.

"சவுக்கடிதான்.... ", என்று சொல்லி நடந்த விபரத்தையும் அந்தக் கருமியிடம் பணம் கேட்கவேண்டாம் என்று முடிவெடுத்துத் திரும்பியதாகச் சொல்கின்றார்.

இந்த முறை எம்பெருமானார் " மறுபடியும் நீங்கள் அவரிடம் போய்க் கேளுங்கள்! " என்று உத்தரவிடும் தொனியில் சொல்கின்றார்கள்.

எம்பெருமானாரின் கட்டளையை மீற முடியாத பெரியவர் மறுபடியும் அந்தப் பணக்காரரைப் பார்க்கப்போகின்றார்.

பெரியவர் பணக்காரர் வீட்டுக்குள் நுழையும்போது சிறிது நின்று யோசித்தார். சரி வருவது வரட்டும் என்று துணிச்சலை வரவழைத்துக் கொண்டு போனார்.

நல்லவேளையாக அங்கே யாரும் அடிபடவில்லை; ஆனால் அந்தப்பணக்காரர் வீட்டுக்குள் யாரிடமோ சத்தமாக திட்டிப் பேசிக்கொண்டிருந்தார். எம்பெருமானாரின் கட்டளை நினைவில் எழ, பெரியவர் துணிந்து அவரை அணுகி தாம் வந்த காரியத்தைப் பற்றிச் சொல்லி உங்களால் முடிந்ததை தந்து உதவ வேண்டுமென்று மிகப் பணிவாகக் கேட்டுக்கொண்டார், பெரியவர்.

"பள்ளி வாசலைக் கட்டிமுடிக்க எவ்வளவு செலவு செய்வதாக உத்தேசித்திருக்கின்றீர்கள்?" என்று அந்தச் செல்வந்தர் கேட்டார்.

"பள்ளிவாசல் கட்டி முடிக்க பத்தாயிரம் ரூபாய் தேவைப்படும். நீங்க உங்களால் முடிந்ததைக் கொடுத்தீர்களானால் மீதியை மத்தவங்களிடம் நன்கொடையா வாங்கி பள்ளி வேலையை முடித்திடுவோம்," என்றார் பெரியவர்.

அதுக்கு அந்தப் பணக்காரர் என்ன சொன்னார் தெரியுமா?

என்ன சொல்லீருப்பார்ன்னு நினைக்கிறீங்க? கொஞ்சம் யூகிச்சுப் பாருங்களேன்!

சொல்ல வந்ததைச் சொல்லும்வோய் என்றுயாரோ சத்தம் போடுறது கேக்குது!?

"இவ்வளவு காலம் உங்கள் ஊரில் பள்ளிவாயில் இல்லாமல் இருந்ததே தவறு. இதில் இன்னமும் பலபேர்களிடம் போய் நன்கொடை அது... இது என்று காலம் தள்ளுவது நல்லதல்ல; பள்ளிவாயில் கட்டத் தேவையான பத்தாயிரத்தையும் நானே தருகின்றேன்.

இந்த மாதிரி ஒரு நல்ல காரியத்திற்கு உதவாத பணம் என்னிடம் இருந்து என்ன ஆகப் போகின்றது?" என்று சொன்னவர் சற்றும் தாமதிக்காமல் உள்ளே சென்று பத்தாயிரம் ரூபாயை எடுத்து வந்து பெரியவரிடம் கொடுத்தார்.

பெரியவருக்கு நடப்பது கனவா? நனவா? என்று குழம்பிய நிலையில் எம்பெருமானார் முன் வந்து விபரத்தைச் சொல்கின்றார். விபரம் சொன்னதோடு நிற்காமல் நபி அவர்களிடம் கேட்கின்றார்.

"பத்துப் பருப்பு சிந்தியதற்கும், பத்துச் சொட்டு எண்ணெய் சிந்தியவருக்கும் அடியும் உதையும் கொடுத்தார்; அப்படிப்பட்டவர் பள்ளிவாசல் கட்ட எதாவது கொடுங்கள் என்றால் பத்தாயிரத்தை சுளையாகத் தூக்கிக் கொடுக்கின்றாரே இவரை கருமி என்பதா? கொடைவள்ளல் என்று சொல்வதா?" என்று தன் ஆச்சரியம் விலகாமல் கேட்கின்றார் பெரியவர்.

பெரியவர் சுவற்றில் அடித்த பந்து போல திரும்பத் திரும்ப வந்து நின்ற போதெல்லாம் நபியவர்கள், 'போய் அவரிடம் கேளுங்கள்' என்றுதான் சொன்னாரேயொழிய வேறு எதுவும் சொல்லாவில்லை. ஆனால் இப்போது விளக்கம் சொல்கின்றார்.

"கருமித்தனம்ங்கறது வேற! சிக்கனம்ங்கறது வேற!! அந்த ஆள் கருமி கிடையாது. சிக்கனத்தைக் கையாளுபவர்; அவர் சிக்கனமாய் இருந்து சேர்த்து வைத்ததால்தான் அந்தப் பணம் பள்ளிவாசல் கட்டப் பயன்படுகிறது. எனவே சிக்கனமாக இருப்பவரை கருமி என்று எண்ணாதீர்கள்", என்று சொன்னார்கள்.

(நம்மாளுகள்ள பலபேர் இப்படித்தான் சிக்கனமா இருக்காங்களோ!!)

எம்பெருமானார் சொன்ன அந்த வைர வார்த்தைகள்தான் கருமித்தனத்துக்கும் சிக்கனத்துக்கும் உள்ள இடைவெளியை நமக்குப் புலப்படவைக்கின்றது.

இந்தச் செய்தியை நீங்கள் படித்துவிட்டு உங்கள் வீட்டம்மாவிடம் சொன்னாலும் சொல்லலாம்; அல்லது யார் மூலமாவது இந்தச் செய்தி காற்று வாக்கில் பல குடும்பத் தலைவிகளின் காதிலும் விழுந்திருக்கலாம்!

குடும்பத் தலைவர்கள் மேல எனக்கு அனுதாபம் அதிகமா இருக்கிறதால
ஒன்றைச் சொல்ல வேண்டியது அவசியம்ன்னு நெனைக்கேன்....

இனிமேலும் நீங்கள் கடைக்குப் போய் பருப்போ இல்லை எண்ணெய்யோ வாங்கி வருகின்ற சந்தர்ப்பம் ஏற்படலாம்!?

அப்படி வாங்கி வர்ற‌ வழியில் எதாவது தப்பித் தவறி சிந்திட்டா
இவ்வளவு சிந்திப் போய்ட்டதுன்னு வெகுளித்தனமாக வீட்டில் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். ஏன்னா ஒரு நேரம் போல் ஒரு நேரம் இருக்காது....!??????

இவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.

''அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு'' என்று எச்சரிப்பீராக! அல்குர்ஆன் 9:34 அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். ''இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்!'' (என்று கூறப்படும்) அல்குர்ஆன் 9:35

ஆல்பர்ட்.

Monday, September 17, 2007

அண்ணல்நபிகள் நடந்த பாதையில்...! ( 4 )

''பிறருடைய உயிருக்கோ சொத்துக்கோ தீங்கு விளைவிக்காதவனே இறை நம்பிக்கையாளனாவான்.'' -எம்பெருமானார் நபிகள் நாயகம்.

அண்ணனும் தம்பியும்!


இரண்டு சிறுவர்கள். அவங்க, ரெண்டு பேரும் சகோதரர்கள்.
அந்த ரெண்டு பேருக்குள்ள ஏதோ ஒரு சின்ன மனத்தாங்கல்...
அதோட விளைவு என்ன ஆச்சு...ரெண்டு பேரும் பேசிக்கறதை
நிறுத்திட்டாங்க...

பிள்ளைங்க ரெண்டு பேரும் பேசிக்கறதில்லேங்கறது தெரிஞ்சதும்
அவங்க அம்மாவுக்கு ரொம்ப வருத்தமா போச்சு. என்ன இது,
இந்தப் பிள்ளைங்க இப்படி இருக்கறாங்களே...ன்னு நினைச்சி ரொம்ப வருத்தப்பட்டாங்க.

அந்த அம்மா யாரு தெரியுமா?

அவங்கதான் அன்னை பாத்திமா?

அந்தப் பிள்ளைங்களோட பாட்டனார் யாரு?
நபிகள் நாயகம்!
இந்தப் பிள்ளைங்களைப் பேச வைக்கறது எப்படி...?

அந்தத் தாய் என்ன பண்ணினாங்க?

பிள்ளைங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு ஒண்ணா வச்சுக்கிட்டு...
அவங்க பாட்டனார் நபிகள் நாயகம் அவர்களின் பொன்மொழி
ஒன்றைச் சொல்லிக்காட்டுறாங்க!


அது என்ன பொன்மொழி...?

'ஒரு முசுலிம் மற்றொரு முசுலிமுடன்
மூன்று நாட்களுக்கு மேல் பேசாமே இருந்தா அது அவனைக் கொலை செய்வதற்கு ஒப்பாகும்!'
- அப்படிங்கறதுதான் அண்ணல் நபி அவர்கள் மொழிந்த பொன்மொழி.

இதை அந்த அம்மையார் தன்னுடைய பிள்ளைங்ககிட்டே சொல்லிக்காட்டறாங்க.

அந்த ரெண்டு பிள்ளைங்க யார் யாரு தெரியுமா?

மூத்தவர் ஹஸன்.

இளையவர் ஹுஸைன். தாயார் சொன்னதைக் கேட்டதும் இளையவர் ஹுஸைன் இப்ப பேச ஆரம்பிச்சார்.

"அம்மா! இப்படிப் பேசாமலிருக்கிற இரண்டு பேரில் எவர் முதலில் சலாம் சொல்கிறாரோ அவருக்கே அதிகப் பலன் உண்டு... என்று அண்ணல் நபி அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

அதை நான் நன்கறிவேன். அதனால்தான் அந்தப் பலன் அண்ணனுக்கு கிடைக்கட்டும் என்கின்ற எண்ணத்திலேதான்,
நான் முதலில் பேசாமல் இருக்கின்றேன்!" என்றார்.

இதைக் கேட்டதும் மூத்தவர் ஹஸன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிகின்றது. உடனே தம்பியைப் பார்த்து 'சலாம்' சொல்கின்றார்.

அவரை கட்டித் தழுவி இப்படிப்பட்ட தம்பி கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்லி மேலும் புளகாங்கிதமடைகின்றார்.

தன் பிள்ளைகளின் அறிவையும்... அரிய பண்பையும் பார்த்து அங்கே அந்தத்தாய் மெய்ம்மறந்து.... ஈன்ற பொழுதை விடப் பெரிதும் மகிழ்ந்து நின்றார்கள்!

அன்னை பாத்திமாவின் பிள்ளைகள் அப்படி!


அது மாதிரி எல்லாரும் நடந்துகொண்டால் போதுமே...
சகோதரர்கள் இடையே எழுகின்ற கருத்து வேறுபாடுகளை
நீடிக்க விடக்கூடாது.

சகோதரர்கள் என்று மட்டுமில்லை, நண்பர்கள், உறவினர்கள்
எல்லோருமே தங்களுக்குள் எழுகின்ற பிணக்குகளை, நட்பின்
விரிசல்களை, தங்கள் அன்பில் விழுந்த கீறல்களை
நீடித்துக்கொண்டே செல்ல ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது.

அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு மேல் ஒருவருக்கொருவர்
பேசாமல் இருக்கக்கூடாது. சகோதரப் பாசத்துக்கு இன்னும் ஒரு உதாரணத்தை இங்குச் சொல்வது இன்னும் பொருத்தமாக
இருக்கும் என்று எண்ணுகின்றேன்.

அது ஒரு கல்விச்சாலை. அங்கே வகுப்புகள் நடந்து
கொண்டிருக்கின்றது.
ஒரு வகுப்பறையில் மெளல்வி சகாவத் உசேன் பாடங்களைப் போதித்துக் கொண்டிருக்கின்றார். அவருடைய போதனையை
இரண்டு மாணவர்கள் உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள்; ஒருவர் சவுகத் அலி! மற்றொருவர், முகம்மதலி!

முன்னவர் மூத்தவர். பின்னவர் இளையவர்.

சகோதரர்கள் இருவரும் மிக ஒற்றுமையானவர்கள். ஒருவருக்கொருவர் சிறப்பானவர் என்று அளவிட்டுவிட முடியாத அளவுக்குச் சிறந்த
அன்பாளர்கள்! பண்பாளர்கள்!!

பீபி அம்மா பெற்ற பிள்ளைகளல்லவா? மெளல்வி சகாவத் உசேன் திடீரென்று பாடம் நடத்திக் கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு சவுக்கத் அலியையும் முகம்மதலியையும் சற்றே உற்று நோக்குகின்றார்.


கள்ளம்கபடில்லாத பாசமும் நேசமும் நிறைந்த சாதுவாய் அமர்ந்திருந்த அந்தச் சகோதரர்களை மற்ற மாணவர்களுக்கு அடையாளம் காட்ட எண்ணுகின்றார்.

மெளல்வி சகாவத் உசேன் இப்படித் துவங்கினார் தனது சீண்டலை!

" பிறந்தால் நாயாகப் பிற.... இளையவனா மட்டும் பிறக்காதே!
அதே மாதிரி.... பிறந்தால் கழுதையாகப் பிற.... மூத்தவனா மட்டும் பிறக்காதே! ...." என்று சொல்லி நிறுத்தினார்.


எல்லா மாணவர்களையும் ஒரு நோட்டம் விட்டுவிட்டு ஒரு சின்ன இடைவெளிக்குப் பின் மேற்கொண்டு சொல்கின்றார். அப்படிப்பார்த்தா.....
இங்கே மூத்தவன் கழுதையாகின்றான்; இளையவன் நாயாகின்றான்....." என்று சொல்லி முடிப்பதற்குள் முகம்மதலி வெகுண்டெழுகின்றார்.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்கிறார்களே அது போல முகம்மதலி எழுந்ததும் சக மாணவர்கள் அச்சத்தோடு இமை மூடாது அவரை நோக்குகின்றனர்.

முகம்மதலியை நாய் என்று சொல்லாமல் ஆசிரியர் சொல்லிவிட்டாரே,

அதற்கு முகம்மதலி என்ன சொல்லப் போகிறாரோ என்று தான் அனைத்து மாணவர்களும் எண்ணினர். ஆனால் முகம்மதலியோ,

"அய்யா, என்னை வேண்டுமென்றால் நாய் என்று சொல்லுங்கள்.
நான் பொறுத்துக் கொள்வேன். ஆனால் என் அண்ணை மட்டும்
கழுதை என்று சொல்லாதீர்கள். அதை என்னால் கொஞ்சம் கூட
அனுமதிக்க முடியாது," என்றார்.

முகம்மதலியின் இந்தக் குமுறலைக் கேட்டு மெளல்வி சகாவத் உசேனே அசந்து போய்விட்டாராம்.

சகோதரப் பாசம் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்!

இந்தக் காலத்தில் எல்லாம் சகோதரப் பாசம் எங்க அப்படியிருக்கிறது?


காவல் நிலையத்தில் ஒரு ஆள் புகார் கொடுக்க வந்தார். அங்க இருந்த நிலைய ஆய்வாளர், "என்னய்யா உன்னோட புகார்?" என்று கேட்டார். அதற்கு அவன் சொன்னான்,
"அய்யா, நாங்க அண்ணன் தம்பி ஐந்துபேர். ஆனால் நாங்க எங்களுக்கென்று இருக்கின்ற சின்ன அறையில் ஒன்றாகவே இருக்கின்றோம். அதில் ஒன்றும் எங்களுக்குள் சிக்கல் இல்லை; ஆனால் ஒருத்தன் ஒன்பது நாய் குட்டி வளர்க்கின்றான்.

இன்னொருத்தன் இருபது பூனைக்குட்டி வளர்த்து வருகின்றான்.

மூன்றாவது அண்ணன் மூன்று முயல் குட்டியும், நாலாவது அண்ணன்

நாலு குரங்கும் வைத்திருக்கின்றார்கள். அதனால சிறிய இடத்தில் காற்றுக்கே வழியில்லாமற் போய்விட்டது. மிகவும் புழுக்கமாகயிருக்கிறது.
இதற்கு அய்யா தான் ஒரு நல்ல வழி செய்யவேண்டும், " என்று
சொன்னான்.
ஆய்வாளர் கேட்டார், "நீங்க தங்கியிருக்கின்ற அறைகளில் சன்னல்கள் இருக்கா?"
" ஓ... ஒன்றுக்கு நான்கு சன்னல்கள் இருக்கிறதே," என்று சொன்னான்.
"அப்படியென்றால் சன்னல்களைத் திறந்து வைக்க வேண்டியதுதானே!? என்றார் ஆய்வாளர்.
அதுக்கு புகார் கொடுக்க வந்தவன் சொன்னான். அய்யா, அது முடியாதுங்க. சன்னல்களைத் திறந்து வைத்தால் நான் வளர்த்து வருகின்ற அம்பது புறாக்களும் பறந்து வெளியே போய் விடுமே..." என்றான்!?


ஆல்பர்ட்

அண்ணல்நபிகள் நடந்த பாதையில்...! ( 3 )

''என் இறைவா! பகல் முழுவதும் உண்பதிலிருந்தும் பிற இன்பங்களிலிருந்தும் நான் இந்த மனிதனைத் தடுத்தேன்;
அவனும் அவற்றிலிருந்து விலகியிருந்தான். எனவே
என் இறைவா!
இந்த மனிதனின் விஷயத்தில் என் பரிந்துரையை ஏற்றுக்கொள்!''
-எம்பெருமானார் நபிகள் நாயகம்..


"ஹராம்......!

பதினோறாம் நூற்றாண்டுலே ஒரு புகழ்பெற்ற இறை நேசச் செல்வர் வாழ்ந்து வந்தார்.

அவர் பேரு அப்துல்லா ஹிஸ் ஸவ்மயி. (ரஹ்) இப்போது சோவியத் ரஷ்யாவுலே உள்ள 'ஜீலான்'ங்கற நகரத்தோட புறநகர்ப் பகுதியிலே
'நீப்'புன்னு ஒரு ஊர். அங்கேதான் அவர் இருந்தார்.

அவருக்கு ஒரு ஆப்பிள் தோட்டம் இருந்துது. தஜ்லா நதி ஓரத்துலே! அந்தத் தோட்டத்துலே அவரு ஒருநாள் உலாவிக்கிட்டிருந்தார். அந்த சமயத்துலே இருபது வயசுள்ள அழகான இளைஞர் ஒருத்தர் அவரு முன்னாடி வந்து நின்னார்.

"என்னை நீங்க மன்னிக்கணும்"ன்னார். இவருக்கு ஒண்ணும் புரியலே!

"யாரப்பா நீ?

"நீ என்ன கெடுதல் பண்ணினே? நான் எதுக்காக உன்னை மன்னிக்கணும்?" -ன்னு கேட்டார்.

"ஐயா! என் பேரு அபுசாலிக் மூசா! இங்கேயிருந்து நாலு கல் தொலைவுலே இதே "தஜ்லா" நதி ஓரத்துலே தான் நான்
இருக்கேன். நேத்து மத்தியானம் எனக்கு நல்ல பசி... அந்த
நேரம் ஒரு ஆப்பிள் பழம் நதியிலே மிதந்து வந்துது...
அவசரத்துலே அதை எடுத்து சாப்பிட்டுட்டேன். சாப்பிட்டதுக்கு அப்புறம்தான் அப்படி செஞ்சது பெரிய தவறுங்கறதை
உணர்ந்தேன். ஒரு பொருளுக்கு உரியவர்கள் யாரோ அவங்க அனுமதியில்லாமே அந்தப் பொருளை உண்பது 'ஹராம்' ஆகும்.

'ஹராம்' ன அந்தப் பழம் என் வயத்துக்குள்ளே போனதுலேயிருந்து எனக்கு நிம்மதியில்லே! ராத்திரி பூரா தூங்கவே முடியலே!
காலையிலே எழுந்திரிச்சதும் இந்த நதி ஓரமா பார்த்துக்கிட்டே வந்தேன். உங்க தோட்டத்தைப் பார்த்தேன். ஒரு மரத்தோட கிளை தண்ணியைத் தொட்டுக்கிட்டிருக்கிறதைப் பார்த்தேன்.

அதனாலே நான் சாப்பிட்ட பழம் இங்கே இருந்துதான்
வந்திருக்கணும் அந்தப் பழத்துக்கு உரியவர் நீங்கதான்.
'நீங்க என்னை மன்னிச்சாதான் நான் உண்ட பழம்
'ஹலால்' ஆகும். குற்றம் நிவர்த்தியாகும். தயவு பண்ணி மன்னிக்கணும்!"ன்னு கண்கலங்க கேட்டுக்கிட்டார்.

இதைக் கேட்ட 'ஸவ்மயி' ஆச்சரியத்தோட அந்த இளைஞரை கூர்ந்து கவனிச்சார்.

" இந்த அளவுக்கு நேர்மையான ஒரு நல்ல மனுஷனை விட்டுடப்புடாது...!'ன்னு மனசுக்குள்ளே முடிவு பண்ணினார்.
நிமிர்ந்து அந்த இளைஞரைப் பார்த்தார்.

"இதற்கு நீ, நான் தரும் தண்டனையை ஏத்துக்கத்தான் வேணும்!"ன்னார்.

"எதுவா யிருந்தாலும் ஏத்துக்கத் தயார்!"ன்னார் அவர்.

இறை நேசச் செல்வர் அப்படி என்ன தண்டனை கொடுத்தார்?


===="தனது கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிடச் சிறந்த உணவு ஏதுமில்லை. " என்கிறார் - நபிகள் நாயகம் (ஸல்). அதனால நீ செய்த பாவத்துக்கு பரிகாரம் தேடணும்ன்னு நீ நெனச்சா நாஞ் சொல்றபடி நீ நடக்கணும்", என்று சொல்லிவிட்டுச் சொன்னார். ====

"நீ செய்த காரியத்துக்குத் தண்டனையா பன்னிரண்டு வருஷ காலம் நீ இங்கே பணிவிடைகள் செய்யணும்!"ன்னார்.

"பணிவிடை செய்யறத பாக்கியமா நினைக்கிறேன்"னு சொல்லீட்டு மகிழ்ச்சியோட அந்த தண்டனையை ஏத்துக் கிட்டார்.

பன்னிரண்டு வருஷம் முடிஞ்சிது... அந்த 12 வருஷ காலத்துலே அந்த இளைஞரோட வயசும் தகுதியும் வளர்ந்துது...! கடைசியிலே அந்தப் பெரியவர் அந்த இளைஞரைக் கூப்பிட்டார்.

"இதோ பாருப்பா... இன்னையோட உன் பணி விடைக்காலம் பன்னிரெண்டு வருஷம் முடிஞ்சிது. ஆனா தண்டனை இதோட முடிஞ்சுட்டதா நினைக்காதே; அது இன்னும் முடியலே! கடைசியா இன்னும் ஒரு தண்டனை பாக்கியிருக்கு... அதை நீ ஏத்துக்கணும்!"ன்னார்.

"எதுவாயிருந்தாலும் ஏத்துக்கறதுக்கு சித்தமாயிருக்கேன்!"னார் இவர்.

"எனக்கு ஒரு மகள் இருக்கா... அவளுக்கு ரெண்டு கண்ணும் தெரியாது. ரெண்டு காதும் கேக்காது, ரெண்டுகாலும் செயல்படாது அவளை நீ கல்யாணம் பண்ணிக்கணும்!"ன்னார் பெரியவர்.

இதைக் கொஞ்சமும் இவர் எதிர்பார்க்கலே... ஒரு நிமிஷம் திகைச்சார். அடுத்த நிமிஷம்.........

"சரி! இதையும் நான் மனப்பூர்வமா ஏத்துக்கறேன்!"னார்.

இறைநேசச் செல்வர் " ஸவ்மயி " அவர்களின் புதல்வி பாத்திமாவுக்கும் இளைஞர் அபுசாலிக் மூசாவுக்கும் அடுத்த சில தினங்கள்லே முறைப்படி திருமணம் நடந்தது.


திருமணத்துக்குப் பிறகு மணமகளை பார்த்த அந்த இளைஞர்
திகைச்சுப் போயிட்டார். ஏன்னா அந்தப் பெரியவர் சொன்னதுக்கு நேர்மாறா இருந்தார் பாத்திமா. உடல் ஊனம் எதுவுமில்லே. ரொம்ப அழகாயிருந்தாங்க. மறுநாள் 'ஸவ்மயி' அபுசாலிகைக் கூப்பிட்டு இதுக்கு விளக்கம் சொன்னார்.

"என் மகளுக்கு கண்ணு தெரியாதுன்னு சொன்னேன். எந்த வித தீய காட்சிகளும் அவள் கண்ணுக்குத் தெரியாதுன்னு அர்த்தம்.

காது கேட்காதுன்னு சொன்னேன். தீய விஷயங்களை அவள் கேட்கமாட்டாள்ன்னு அர்த்தம்.

கால்கள் செயல்படாதுன்னு சொன்னேன். வீட்டைவிட்டு தீமையான இடங்களுக்கு அவள் போக மாட்டாள்ன்னு அர்த்தம்ன்னார்.

"12 வருஷத்துக்கு முன்னாடி உன்னை முதல்முறையா பார்த்தப்பவே உம்மை என் சீடராக மானசீகமா ஏத்துக்கிட்டேன்!"ங்கற விவரத்தை சொன்னார்.

இந்த இளைஞர் அபுசாலி பிற்காலத்துலே ஒரு பெரிய ஆன்மீக மேதையா உயர்ந்தார். அந்தத் தம்பதிகளின் 60-வது வயசுலே ஒரே ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைதான் ஆன்மீகப் பேரரசர் முகயித்தீன் அப்துல் காதர் ஜீலானி (ரலி). முகையத்தீன் ஆண்டகை!

இறைநேசச் செல்வர்களுடைய வாழ்க்கைதான் இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டணும்.

நாமள்ளாம் அப்படியா இருக்கோம்.

எனக்கு ஒரு சிநேகிதன்... அவன் சொன்னான்...

"டேய்! என்னுடைய மாமனார்கூட, தன்னோட பொண்ணை எனக்கு திருமணம் பண்ணிக் குடுக்கறதுக்கு முன்னாடி ஒரு செய்தியைச் சொன்னார். அது 'பொய்'ன்னு அப்புறமாதான் தெரிஞ்சிது!"ன்னார்.

"என்ன சொன்னார்?"ன்னு கேட்டேன்.

"எம் பொண்ணு மாசத்துக்கு ஒரு தடவை ஏதாவது...... கோவம் வந்து...... கையிலே கிடைக்கறதை எடுத்து உங்க மேலே எறிவா! நீங்கதான் அனுசரிச்சி நடந்துக்கணும்ன்னார்" அப்படின்னான்.

"அப்படி அவர் சொன்னது பொய்யா?"ன்னு கேட்டேன்.

"ஆமாம்! மாசம் ஒரு தடவைன்னு அவர் சொன்னது பொய்.

தெனம் ஒரு தடவை அப்டி செய்யறா?" அப்படின்னான்:-)))


ஆல்பர்ட்.

அண்ணல்நபிகள் நடந்த பாதையில்...! (2)

"ஒற்றுமையோடு இருக்கறது, நல்ல காரியங்களைச் செய்யறது, தர்மம் புரிவது, சலாம் சொல்ல முந்திக் கொள்வது, நோயாளியைச் சென்று காண்பது, நல்லவரா கெட்டவாரா என்று பாராமல் பிரேத ஊர்வலத்தில் கலந்து கொள்வது, முஸ்லீமா முஸ்லீம் அல்லாதவரா என்று பாராமல் அயலாருடன் அன்புடன் நடந்து கொள்வது. முதியவர்களுக்கு மரியாதை செய்வது, மன்னிப்பது, சண்டை சச்சரவுகளைத் தீர்த்து வைப்பது, கோபத்தை அடக்குவது, விலக்கப்பட்டதைத் தவிர்ப்பது, உறவினர்களிடம் அன்பாய் நடந்து கொள்வது, கர்வம் கொள்ளாமல் இருப்பது....இதெல்லாம் தான் நற்பண்புகள்....."
- எம்பெருமானார் நபிகள் நாயகம்.


ஒரு ஊர்லே....

இமாம் ஒருத்தர் இருந்தார். அவர் துணி வியாபாரம் செஞ்சிக்கிட்டிருந்தார்.

பல வெளியூர்கள்லே இருந்தெல்லாம் புதுத்துணி
வகைகள் அவர் கடைக்கு வரும்.புதுப்புது ரகம் எல்லாம்
வரவழைப்பார். விற்பனை செய்வார். இது அவருடைய தொழில்.
அதனால் அவர் கடையில் வியாபாரம் எப்போதும் சுறுசுறுப்பாவே நடக்கும்.

ஒரு நாள் அவரோட கடைக்கு ஒரு வயசான அம்மா வந்தாங்க. அந்தம்மாவின் மொகத்துல ஏழ்மையின் ரேகை படர்ந்திருந்தது.
வேர்க்க விறுவிறுக்க, மேல் மூச்சு கீழ் மூச்சுவாங்க வந்தாங்க!
அவங்க கையில ஒரு பழைய பை!

அந்தப் பழைய பையில இருந்து ஒரு பழைய பட்டுச் சேலையை
வெளிய எடுத்தாங்க.அந்தச் சேலையோ ரொம்பப் பழசு!
அதை அந்த இமாம் கிட்டே காட்டி, "ஐயா... இந்தப் பழைய
சேலையை நீங்க விலைக்கு வாங்கிக்க முடியமா?" ன்னு கேட்டாங்க.

அந்தக் கடையிலே வேலை செய்யற ஊழியர் இதை வேடிக்கையா
பார்த்தார். ஏன்னா அப்படி எல்லாம் பழைய சேலையை எதுவும்
வாங்கி விக்கிறதில்ல, இமாம்.

சரி... இமாம் என்ன சொல்றார் பார்க்கலாம்-ன்னு அவரையே கவனிச்சார்.இமாம் அந்த மூதாட்டியை ஒரு தடவை ஏற
இறங்கப் பார்த்தார். அப்புறம் கேட்டார்.

"அம்மா...இந்தச் சேலைக்கு எவ்வளவு தொகை வேணும்?" ன்னு
கேட்டார்.


"இதுக்கு நூற்றியிருபது திர்காம் வேணும்!" ன்னாங்க அந்த அம்மா.

இதைக் கேட்ட இமாம் லேசா சிரிச்சிக்கிட்டே தன்னுடைய
ஊழியரைப் பார்த்தார்.

ஊழியரோ அந்த மூதாட்டியைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்.

இமாம் என்ன செய்திருப்பார்? மூதாட்டி கேட்ட பணம் கிடைத்ததா?

உங்கள் யூகம் சரியா?

யூகிக்க எல்லாம் நேரம் ஏதுங்கிறீங்களா?


சரி..சரி...தொடர்ந்து படியுங்கள்....

"இந்த அம்மாவுக்கு ஒரு 400 திர்ஹம் கொடுத்தனுப்பு!" ங்கறார்
அவர்.

ஊழியர் இமாமிடம் மெதுவா கேக்கறார்.

"நாமதான் பழசு பட்டு எதுவும் வாங்குறதில்ல...இருந்தும்
ஏன் இதுக்குப் போய் இவ்வளவு பணம் கொடுக்கணும்?"
அதுவும் அந்த அம்மா கேக்குறதுக்கு மேல கொடுக்கணு

மாங்கறார், அந்தப் பழைய புடவையைப் பார்த்துகிட்டே!

இப்ப அந்த இமாம் சொல்றார்:

"பேசாமே நான் சொன்னபடி செய்,
போ! நீ அந்தத் துணியைப் பார்க்கிறே!
நான் அந்த ஏழையின் வறுமையைப் பார்க்கிறேன்!" அப்படின்னார்.


அதுக்கப்புறம் அந்த ஊழியர் மறுவார்த்தை பேசல!

பணத்தைக் கொண்டாந்து அந்த அம்மாகிட்டே கொடுத்துட்டார்.

அந்த அம்மா மனசு நிறைஞ்சுது! இமாமை மனசார வாழ்த்திட்டுச்
சலாம் சொல்லிட்டு அங்கிருந்து கெளம்பினாங்க!


வறுமைக்கு ஏது விலை?

அது எல்லோருக்கும் புரியாது!

பெரியவர்களுக்குத்தான் புரியும்.

அது புரிஞ்சதுனாலேதான் அந்தப்
பெரியவர் அப்படி நடந்துகிட்டார்.


நற்பண்புகள் யாவை? அப்படின்னு எம்பெருமானார் நபிகள் நாயகம் கிட்டே கேட்டாங்களாம். அதுக்கு அவர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா?

" ஒற்றுமையோடு இருக்கறது, நல்ல காரியங்களை செய்யறது,
தர்மம் புரிவது, சலாம் சொல்ல முந்திக் கொள்வது, நோயாளியைச்
சென்று காண்பது, நல்லவரா கெட்டவாரா என்று பாராமல் பிரேத ஊர்வலத்தில் கலந்து கொள்வது, முஸ்லீமா முஸ்லீம் அல்லாதவரா
என்று பாராமல் அயலாருடன் அன்புடன் நடந்து கொள்வது.

முதியவர்களுக்கு மரியாதை செய்வது, மன்னிப்பது, சண்டை
சச்சரவுகளைத் தீர்த்து வைப்பது, கோபத்தை அடக்குவது,
விலக்கப்பட்டதைத் தவிர்ப்பது, உறவினர்களிடம் அன்பாய்
நடந்து கொள்வது, கர்வம் கொள்ளாமல் இருப்பது....
இதெல்லாம் தான் நற்பண்புகள்....." அப்படின்னார் நபிகள்
நாயகம்.

இப்படிப்பட்ட நற்பண்புகள்லே ஒண்ணுதான் அந்த இமாம் அந்த
மூதாட்டிக்குச் செய்த உதவி. நமக்கு வேண்டியப்பட்டவர்கள்லே
இப்படிப்பட்ட பண்பாளர்களைப் பார்க்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு!

ஒரு கடைக்காரர்..

அவர் கடையிலே இல்லாத நேரம் பார்த்து ஒரு ஆள் வந்தான்.
வேலைக்கார பையனைப் பார்த்து. ஒரு கோழி இருக்கு, விலைக்கு வாங்கிக்கறீங்களா?ன்னு கேட்டிருக்கான்.

எவ்வளவுன்னு கேட்டிருக்கான் அவன். பத்து ரூபாதான்னான்
இவன்.
விலை ரொம்ப 'சீப்பா' யிருக்கேன்னு நினைச்சிக்கிட்டே
'சரி கோழியை கொடு' ன்னிருக்கார்.

அவன் உடனே ஒரு பேப்பரை பையிலேயிருந்து எடுத்து கொடுத்திக்கான்.அவன் 'கோழி எங்கே" ன்னான். இவன்,
"அது அந்த பேப்பர்லே போட்டிருக்கு பாரு!" ன்னான்.

அவன் பார்த்தான்.அதிலே கோழி படம் போட்டிருக்கு.
"சரி.... இந்தா பத்து ருவா" ன்னு ஒரு சீட்டைக் கொடுத்தான்.
இவன் அதை வாங்கிப் பார்த்தான்.பார்த்தா அதுலே பத்து
ரூபான்னு எழுதியிருந்தது. பேசாமே
வாங்கிக்கிட்டுப்போயிட்டான்.

இது நடந்து கொஞ்ச நேரம் கழிச்சி கடை முதலாளி திரும்பி வந்தார்.

கடையிலே இருந்த பையன் நடந்த விவரத்தை சொன்னான்.
கடைசியிலே நானும் ஒரு சீட்டுலே பத்து ரூவான்னு எழுதிக்
கொடுத்து அனுப்பிட்டேன்னான்.இதைக்கேட்டதும் அந்தக்
கடைக்காரர் பளார்ன்னு அறைஞ்சுட்டார் அந்தப் பையனை!
அவனுக்கு ஒண்ணும் புரியலே....

"நான் என்ன தப்பு பண்ணினேன் முதலாளி? நா ரூபா கூட குடுக்கல சீட்டுலதான எழுதிக்கொடுத்தேன்" ன்னான்.
"பத்து ரூவான்னு ஏண்டா சீட்டுலே எழுதிக்கொடுத்தே இப்ப அந்த சீட்டு வேஸ்ட் தானே..அதை வாயாலேயே சொல்லிருக்கலாமேடா!" அப்படின்னார்.


ஆல்ப‌ர்ட்.

Friday, September 14, 2007

அண்ணல்நபிகள் நடந்த பாதையில்...! (1)

அண்ணல்நபிகள் நடந்த பாதையில்...!(1)

நட்புக்கு இலக்கணமான நண்பர்.


துன்பம் என்று வருகின்ற போது தூரப்போகும் நண்பர்கள் உண்மையான நண்பர்களா? மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளாவிட்டாலும் துன்பத்தை, துக்கத்தை பகிர்ந்துகொள்ள முன் வருபவரே உண்மையான நண்பராக ஒருவருக்கு திகழுவார்.

மக்கா நகரில் இஸ்லாத்தின் மகத்துவங்களை எடுத்துச் சொல்லிவந்தார் நபிகள் நாயகம்(ஸல்). விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் மட்டுமே புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். ஏற்றுக் கொள்ளாதவர்கள் நபிகள் நாயகத்திற்கு விவரிக்க இயலாத துன்பங்களையும் தொல்லைகளையும் விளைவித்தனர்.

நபிகளுக்கெதிராக பகைவர் கூட்டம் உருவானது. அவரை ஒழித்துக் கட்ட முடிவு செய்து ஒரு கூட்டம் புறப்பட்டது. தகவலறிந்த நபிகள் நாயகம் தலைமறைவாக இருக்க வேண்டி வந்தது.

இறைக் கட்டளையின்படி மக்காவிலிருந்து மதீனா செல்ல முடிவெடுத்தார்கள் நபிகள் நாயகம். பகைவர்களின் கண்களிலிருந்து தப்பிக்க எண்ணி, இரவோடிரவாக யாரும் அறியாமல் மக்காவை விட்டு கிளம்ப எண்ணிய நபிகள் நாயகம் அவர்களுக்குத் துணையாக அவரின் இனிய நண்பர் அபூபக்கர் சென்றார்.

எதிரிகள் நடமாட்டம் இல்லாத பகுதிகள் வழியாக அபூபக்கர் நபிகள் நாயகத்தை அழைத்துச் சென்றார். அப்படி அவர் அழைத்துச் சென்றபோது, நபிகள் நாயகத்திற்கு முன்புறமாகக் கொஞ்ச நேரமும், பின்புறம் கொஞ்சநேரமும் ஓட்டமும் நடையுமாகச் சென்றார். பின்னர் நபிகள் நாயகத்தின் வலப்பக்கமாக கொஞ்ச நேரமும், இடப்பக்கம் கொஞ்ச நேரமும் ஓட்டமும் நடையுமாகப் போனார்.

வழி நெடுகிலும் இதேபோல நபிகள் நாயகத்திற்கு அரணாக முன்பாகவும், பின்புறமாகவும், இடவலப் பக்கங்களிலுமாக மாறிமாறி அபூபக்கர் சென்றார். நண்பர் இப்படி மாறி, மாறி ஓடிச் செல்வதைக் கண்ட நபிகள் நாயகம்,

"அபூபக்கரே, சிலசமயம் என் முன்பாக ஓடுகிறீர். சிலசமயம் என் பின்னால் வருகின்றீர்கள். திடீரென்று வலப்புறமாகவும் பிறகு இடப்புறமாகவும் மாறிமாறி வருகின்றீர்கள்? ஏன் இப்படிச் செய்கின்றீர்கள்?" என்று வினவினார்.

அதற்கு மறுமொழியளித்த சித்திக் அபூபக்கர்,"இறைத்தூதரே!
எம் உயிரினும் மேலானவரே!

நபிகள் நாயகமே! நான் அப்படி நடக்கக் காரணம், நீங்கள் இந்த வழியாகத்தான் வருகிறீர்கள் என்பதை எதிரிகள் ஒருவேளை அறிந்து உங்களைத் தாக்க ஒளிந்திருப்பார்களோ என்று உங்களுக்கு முன்பாகச் செல்கிறேன்.

ஒருவேளை நம்மைப் பின்தொடர்ந்து வந்து உங்களைத் தாக்கிவிட்டால் என்ன செய்வது என்று பின்னால் வருகிறேன்.

ஒருவேளை எதிரிகள் பாதையின் வலப்புறம் மறைந்திருப்பார்களோ என்ற எண்ணம் எழும்போது வலப்பக்கமாக வருகிறேன்.

இடப்பக்கம் மறைந்திருந்து எதிரிகள் தாக்கினால் என்ன செய்வது
என்று எண்ணி இடப்புறமாக நடந்து வருகிறேன்," என்றுரைத்தார்.

இதைக் கேட்ட நபிகள், "நீரல்லவா எனது உண்மையான நண்பர்," என்று சொல்லி அபூபக்கரைக் கட்டித் தழுவிக்கொண்டார்.

இப்போதும் சில நண்பர்கள் இருக்கிறார்கள்.

ஒரு துறவி சிரமத்தை விட்டு தன் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறினார். கொஞ்ச தூரம் சென்றிருப்பார்.
ஒருவன் மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடிவந்து,
"சாமீ நீங்க பாட்டுக்கு கெளம்பீட்டீங்க, வழியில திருட்டுப்பயம்
அதிகம்; நான் உங்க துணைக்கு வருவேன்" என்றான்.

"ஒனக்கு எதுக்குப்பா சிரமம்ன்னார்", துறவி.

"வருஷக் கணக்குல பழகினதுக்கு நான் இது கூடச் செய்யலைன்னா? எப்படி?", என்று துறவியின் முன்னால் கொஞ்ச நேரமும், பின்னால கொஞ்ச நேரம் என்று மாறிமாறி நடந்து வந்தான் அந்த ஆள்!

"எதுக்குப்பா, இப்படி சிரமப்படுற? என் முன்னாடியும் பின்னாடியும் வந்து ஏன் கஷ்டப்படுறே?", என்றார் துறவி.

"நான், எதுக்கு முன்னாடி ஓடுறேன்னா தூரத்துல திருடங்க வர்றாங்களான்னு பாக்கிறதுக்கு; ஒருவேளை பின்னாடி வந்து உங்க மூட்டை முடிச்சை பறிச்சுட்டுப் போயிட்டா என்னா செய்யிறதுன்னு பின்னாடி வர்றேன்னான் அந்த ஆள்"

"எவ்வளவோ பேர் என்னோட ஆசிரமத்துக்கு வந்து போய் பழகியிருந்தாலும் ஒன்ன மாதிரி ஒரு ஆள் கெடைச்சதுக்கு நான் அதிர்ஷ்டம் செஞ்சுருக்கணும்", என்றார்ர் துறவி.

"அவங்களுக்கெல்லாம் உங்ககிட்ட வெலை உயர்ந்த பொருள் இருக்குன்னு தெரியாதே", என்றான் அந்த ஆள்!

"என்னிடம் அப்படி என்ன பணங்காசு இருக்கு? மடியில கனமும் இல்ல; வழியில பயமும் இல்ல", என்றார் துறவி.

"என்ன இப்படிச் சொல்லீட்டீங்க? மஞ்சச் சுருக்குப் பையில ஒரு வைரமாலை வச்சிருக்கீங்களே, அது வேற யாரு கையிலயும் சிக்கியிறக் கூடாது பாருங்க...அதாங்கிறான்..."

நட்பு மிக‌,
ஆல்ப‌ர்ட்.

புனித நோன்பின் அருமை....!

இசுலாமியச் சகோதரர்கள் தங்கள்புனித நோன்பை
இன்று துவங்குகிறார்கள்.

சகோதரர்கள் நோன்புக்காலத்தில் எண்ணிய
நல்லதெலாம் பெறவும் எல்லையிலா
இறையருள் பெறவும் வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.

ஏற்கனவே இணைய உலகிலும் இதழ்களிலும் பிரசுரிக்கப்பட்ட
என் இரமதான் கட்டுரைகளை இங்கு முன்னிடுகிறேன்.

ஏற்கனவே படித்தவர்கள்என்னை மன்னியுங்கள்;
படிக்காதவர்கள்படித்து இன்புறுங்கள்; உங்களின்
பின்னூட்டங்களைஅளித்தால் என் குறைகளை
களைய இதை ஒரு வாய்ப்பாகக் கொள்வேன்.
நன்றிகள்.
அன்பு மிக,
ஆல்பர்ட்,
விஸ்கான்சின்,
அமெரிக்கா.


இரம்ஜான் நோன்பின் அருமை....!

இநாளை முதல் ரம்ஜான் பிறை காணப்பட்டு உலகின் பெரும்பாலான நாடுகளில் நோன்பு தொடங்கும்.
நமது இசுலாமியச் சகோதரர்கள் ஒரு மாதம் நோன்பு மேற்கொள்வார்கள். பகல் முழுவதும் நோன்பிருந்து மாலை நேரத்தில் நோன்பு திறந்து தொழுகைக்குப் பின்னர் உண்பார்கள். நோன்பு திறந்ததும் பள்ளி வாசல்களில்ஏழைகளுக்கு உணவு தருவார்கள். ஒரு வகையில் அன்னதானம் போல் என்று வைத்துக்கொள்ளலாம்.
நம் முன்னோர்கள் மிகச் சிறந்த பழக்க வழக்கங்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். தேர் திருவிழா, சாஸ்த்திரங்கள் சம்பிராதாயங்கள் விரதங்கள்... அதாவது நோன்பு, என்று ஏற்படுத்திச் சென்றுள்ளனர்.
கொஞ்சம் பொறுமையா யோசிச்சுப் பாத்தா ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும். வருஷம் பூராவும் காடு கழனின்னு இருக்குறவங்க ஒரு சில நாளைத் தேர்ந்தெடுத்து தேர் திருவிழான்னு கொண்டாடி தங்களைப் புதுப்பித்துக் கொள்கிற நிகழ்வாகத்தான் பண்டிகை காலம் என்று ஒதுக்கி சந்தோஷித்து இருந்திருக்கிறார்கள்.
ஒரு சாஸ்த்திரம் இல்ல சம்பிரதாயத்தை எடுத்துக் கொண்டால் அதுக்கெல்லாம் ஒரு காரண காரியமிருக்கும்.
சும்மா வேடிக்கைக்காகவோ விளையாட்டாவோ அவங்க செய்யல; இது மதத்துக்கு மதம் வேறுபடுதே ஒழிய அடிப்படைக் காரணங்கள் பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கும்;
ரம்சான், ரம்ஜான், ரமதான், ரமலான்,ரமழான் இப்ப‌டி இட‌த்துக்கு இட‌ம் ஒவ்வொரு வித‌மாக‌ அழைத்தாலும் இசுலாமிய‌ர்க‌ள் நாட்காட்டியின்ப‌டி இது ஒரு மாத‌ம்! ச‌ன‌வ‌ரி, பிப்ர‌வ‌ரி போன்று! ஒன்ப‌தாவ‌து மாத‌மாக‌ வ‌ருவ‌துதான் இர‌ம்சான் மாத‌ம்!

இரமலான் நோன்பு என்பது ஒழுக்கத்தைக் கடைபிடிக்கும் பயிற்சி. இந்த காலகட்டத்தில் மனம் கட்டுப்பாட்டுடன் இருக்கிறது. வியாபாரத்தில் இருப்பவர்கள், தங்கள் மனதை அளவிடவும் ஒரு சரியான சந்தர்ப்பமாக அமைகிறது.


ஆல்ப‌ர்ட்.