Monday, September 17, 2007

அண்ணல்நபிகள் நடந்த பாதையில்...! ( 4 )

''பிறருடைய உயிருக்கோ சொத்துக்கோ தீங்கு விளைவிக்காதவனே இறை நம்பிக்கையாளனாவான்.'' -எம்பெருமானார் நபிகள் நாயகம்.

அண்ணனும் தம்பியும்!


இரண்டு சிறுவர்கள். அவங்க, ரெண்டு பேரும் சகோதரர்கள்.
அந்த ரெண்டு பேருக்குள்ள ஏதோ ஒரு சின்ன மனத்தாங்கல்...
அதோட விளைவு என்ன ஆச்சு...ரெண்டு பேரும் பேசிக்கறதை
நிறுத்திட்டாங்க...

பிள்ளைங்க ரெண்டு பேரும் பேசிக்கறதில்லேங்கறது தெரிஞ்சதும்
அவங்க அம்மாவுக்கு ரொம்ப வருத்தமா போச்சு. என்ன இது,
இந்தப் பிள்ளைங்க இப்படி இருக்கறாங்களே...ன்னு நினைச்சி ரொம்ப வருத்தப்பட்டாங்க.

அந்த அம்மா யாரு தெரியுமா?

அவங்கதான் அன்னை பாத்திமா?

அந்தப் பிள்ளைங்களோட பாட்டனார் யாரு?
நபிகள் நாயகம்!
இந்தப் பிள்ளைங்களைப் பேச வைக்கறது எப்படி...?

அந்தத் தாய் என்ன பண்ணினாங்க?

பிள்ளைங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு ஒண்ணா வச்சுக்கிட்டு...
அவங்க பாட்டனார் நபிகள் நாயகம் அவர்களின் பொன்மொழி
ஒன்றைச் சொல்லிக்காட்டுறாங்க!


அது என்ன பொன்மொழி...?

'ஒரு முசுலிம் மற்றொரு முசுலிமுடன்
மூன்று நாட்களுக்கு மேல் பேசாமே இருந்தா அது அவனைக் கொலை செய்வதற்கு ஒப்பாகும்!'
- அப்படிங்கறதுதான் அண்ணல் நபி அவர்கள் மொழிந்த பொன்மொழி.

இதை அந்த அம்மையார் தன்னுடைய பிள்ளைங்ககிட்டே சொல்லிக்காட்டறாங்க.

அந்த ரெண்டு பிள்ளைங்க யார் யாரு தெரியுமா?

மூத்தவர் ஹஸன்.

இளையவர் ஹுஸைன். தாயார் சொன்னதைக் கேட்டதும் இளையவர் ஹுஸைன் இப்ப பேச ஆரம்பிச்சார்.

"அம்மா! இப்படிப் பேசாமலிருக்கிற இரண்டு பேரில் எவர் முதலில் சலாம் சொல்கிறாரோ அவருக்கே அதிகப் பலன் உண்டு... என்று அண்ணல் நபி அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

அதை நான் நன்கறிவேன். அதனால்தான் அந்தப் பலன் அண்ணனுக்கு கிடைக்கட்டும் என்கின்ற எண்ணத்திலேதான்,
நான் முதலில் பேசாமல் இருக்கின்றேன்!" என்றார்.

இதைக் கேட்டதும் மூத்தவர் ஹஸன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிகின்றது. உடனே தம்பியைப் பார்த்து 'சலாம்' சொல்கின்றார்.

அவரை கட்டித் தழுவி இப்படிப்பட்ட தம்பி கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்லி மேலும் புளகாங்கிதமடைகின்றார்.

தன் பிள்ளைகளின் அறிவையும்... அரிய பண்பையும் பார்த்து அங்கே அந்தத்தாய் மெய்ம்மறந்து.... ஈன்ற பொழுதை விடப் பெரிதும் மகிழ்ந்து நின்றார்கள்!

அன்னை பாத்திமாவின் பிள்ளைகள் அப்படி!


அது மாதிரி எல்லாரும் நடந்துகொண்டால் போதுமே...
சகோதரர்கள் இடையே எழுகின்ற கருத்து வேறுபாடுகளை
நீடிக்க விடக்கூடாது.

சகோதரர்கள் என்று மட்டுமில்லை, நண்பர்கள், உறவினர்கள்
எல்லோருமே தங்களுக்குள் எழுகின்ற பிணக்குகளை, நட்பின்
விரிசல்களை, தங்கள் அன்பில் விழுந்த கீறல்களை
நீடித்துக்கொண்டே செல்ல ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது.

அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு மேல் ஒருவருக்கொருவர்
பேசாமல் இருக்கக்கூடாது. சகோதரப் பாசத்துக்கு இன்னும் ஒரு உதாரணத்தை இங்குச் சொல்வது இன்னும் பொருத்தமாக
இருக்கும் என்று எண்ணுகின்றேன்.

அது ஒரு கல்விச்சாலை. அங்கே வகுப்புகள் நடந்து
கொண்டிருக்கின்றது.
ஒரு வகுப்பறையில் மெளல்வி சகாவத் உசேன் பாடங்களைப் போதித்துக் கொண்டிருக்கின்றார். அவருடைய போதனையை
இரண்டு மாணவர்கள் உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள்; ஒருவர் சவுகத் அலி! மற்றொருவர், முகம்மதலி!

முன்னவர் மூத்தவர். பின்னவர் இளையவர்.

சகோதரர்கள் இருவரும் மிக ஒற்றுமையானவர்கள். ஒருவருக்கொருவர் சிறப்பானவர் என்று அளவிட்டுவிட முடியாத அளவுக்குச் சிறந்த
அன்பாளர்கள்! பண்பாளர்கள்!!

பீபி அம்மா பெற்ற பிள்ளைகளல்லவா? மெளல்வி சகாவத் உசேன் திடீரென்று பாடம் நடத்திக் கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு சவுக்கத் அலியையும் முகம்மதலியையும் சற்றே உற்று நோக்குகின்றார்.


கள்ளம்கபடில்லாத பாசமும் நேசமும் நிறைந்த சாதுவாய் அமர்ந்திருந்த அந்தச் சகோதரர்களை மற்ற மாணவர்களுக்கு அடையாளம் காட்ட எண்ணுகின்றார்.

மெளல்வி சகாவத் உசேன் இப்படித் துவங்கினார் தனது சீண்டலை!

" பிறந்தால் நாயாகப் பிற.... இளையவனா மட்டும் பிறக்காதே!
அதே மாதிரி.... பிறந்தால் கழுதையாகப் பிற.... மூத்தவனா மட்டும் பிறக்காதே! ...." என்று சொல்லி நிறுத்தினார்.


எல்லா மாணவர்களையும் ஒரு நோட்டம் விட்டுவிட்டு ஒரு சின்ன இடைவெளிக்குப் பின் மேற்கொண்டு சொல்கின்றார். அப்படிப்பார்த்தா.....
இங்கே மூத்தவன் கழுதையாகின்றான்; இளையவன் நாயாகின்றான்....." என்று சொல்லி முடிப்பதற்குள் முகம்மதலி வெகுண்டெழுகின்றார்.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்கிறார்களே அது போல முகம்மதலி எழுந்ததும் சக மாணவர்கள் அச்சத்தோடு இமை மூடாது அவரை நோக்குகின்றனர்.

முகம்மதலியை நாய் என்று சொல்லாமல் ஆசிரியர் சொல்லிவிட்டாரே,

அதற்கு முகம்மதலி என்ன சொல்லப் போகிறாரோ என்று தான் அனைத்து மாணவர்களும் எண்ணினர். ஆனால் முகம்மதலியோ,

"அய்யா, என்னை வேண்டுமென்றால் நாய் என்று சொல்லுங்கள்.
நான் பொறுத்துக் கொள்வேன். ஆனால் என் அண்ணை மட்டும்
கழுதை என்று சொல்லாதீர்கள். அதை என்னால் கொஞ்சம் கூட
அனுமதிக்க முடியாது," என்றார்.

முகம்மதலியின் இந்தக் குமுறலைக் கேட்டு மெளல்வி சகாவத் உசேனே அசந்து போய்விட்டாராம்.

சகோதரப் பாசம் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்!

இந்தக் காலத்தில் எல்லாம் சகோதரப் பாசம் எங்க அப்படியிருக்கிறது?


காவல் நிலையத்தில் ஒரு ஆள் புகார் கொடுக்க வந்தார். அங்க இருந்த நிலைய ஆய்வாளர், "என்னய்யா உன்னோட புகார்?" என்று கேட்டார். அதற்கு அவன் சொன்னான்,
"அய்யா, நாங்க அண்ணன் தம்பி ஐந்துபேர். ஆனால் நாங்க எங்களுக்கென்று இருக்கின்ற சின்ன அறையில் ஒன்றாகவே இருக்கின்றோம். அதில் ஒன்றும் எங்களுக்குள் சிக்கல் இல்லை; ஆனால் ஒருத்தன் ஒன்பது நாய் குட்டி வளர்க்கின்றான்.

இன்னொருத்தன் இருபது பூனைக்குட்டி வளர்த்து வருகின்றான்.

மூன்றாவது அண்ணன் மூன்று முயல் குட்டியும், நாலாவது அண்ணன்

நாலு குரங்கும் வைத்திருக்கின்றார்கள். அதனால சிறிய இடத்தில் காற்றுக்கே வழியில்லாமற் போய்விட்டது. மிகவும் புழுக்கமாகயிருக்கிறது.
இதற்கு அய்யா தான் ஒரு நல்ல வழி செய்யவேண்டும், " என்று
சொன்னான்.
ஆய்வாளர் கேட்டார், "நீங்க தங்கியிருக்கின்ற அறைகளில் சன்னல்கள் இருக்கா?"
" ஓ... ஒன்றுக்கு நான்கு சன்னல்கள் இருக்கிறதே," என்று சொன்னான்.
"அப்படியென்றால் சன்னல்களைத் திறந்து வைக்க வேண்டியதுதானே!? என்றார் ஆய்வாளர்.
அதுக்கு புகார் கொடுக்க வந்தவன் சொன்னான். அய்யா, அது முடியாதுங்க. சன்னல்களைத் திறந்து வைத்தால் நான் வளர்த்து வருகின்ற அம்பது புறாக்களும் பறந்து வெளியே போய் விடுமே..." என்றான்!?


ஆல்பர்ட்

No comments: