Friday, September 14, 2007

அண்ணல்நபிகள் நடந்த பாதையில்...! (1)

அண்ணல்நபிகள் நடந்த பாதையில்...!(1)

நட்புக்கு இலக்கணமான நண்பர்.


துன்பம் என்று வருகின்ற போது தூரப்போகும் நண்பர்கள் உண்மையான நண்பர்களா? மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளாவிட்டாலும் துன்பத்தை, துக்கத்தை பகிர்ந்துகொள்ள முன் வருபவரே உண்மையான நண்பராக ஒருவருக்கு திகழுவார்.

மக்கா நகரில் இஸ்லாத்தின் மகத்துவங்களை எடுத்துச் சொல்லிவந்தார் நபிகள் நாயகம்(ஸல்). விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் மட்டுமே புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். ஏற்றுக் கொள்ளாதவர்கள் நபிகள் நாயகத்திற்கு விவரிக்க இயலாத துன்பங்களையும் தொல்லைகளையும் விளைவித்தனர்.

நபிகளுக்கெதிராக பகைவர் கூட்டம் உருவானது. அவரை ஒழித்துக் கட்ட முடிவு செய்து ஒரு கூட்டம் புறப்பட்டது. தகவலறிந்த நபிகள் நாயகம் தலைமறைவாக இருக்க வேண்டி வந்தது.

இறைக் கட்டளையின்படி மக்காவிலிருந்து மதீனா செல்ல முடிவெடுத்தார்கள் நபிகள் நாயகம். பகைவர்களின் கண்களிலிருந்து தப்பிக்க எண்ணி, இரவோடிரவாக யாரும் அறியாமல் மக்காவை விட்டு கிளம்ப எண்ணிய நபிகள் நாயகம் அவர்களுக்குத் துணையாக அவரின் இனிய நண்பர் அபூபக்கர் சென்றார்.

எதிரிகள் நடமாட்டம் இல்லாத பகுதிகள் வழியாக அபூபக்கர் நபிகள் நாயகத்தை அழைத்துச் சென்றார். அப்படி அவர் அழைத்துச் சென்றபோது, நபிகள் நாயகத்திற்கு முன்புறமாகக் கொஞ்ச நேரமும், பின்புறம் கொஞ்சநேரமும் ஓட்டமும் நடையுமாகச் சென்றார். பின்னர் நபிகள் நாயகத்தின் வலப்பக்கமாக கொஞ்ச நேரமும், இடப்பக்கம் கொஞ்ச நேரமும் ஓட்டமும் நடையுமாகப் போனார்.

வழி நெடுகிலும் இதேபோல நபிகள் நாயகத்திற்கு அரணாக முன்பாகவும், பின்புறமாகவும், இடவலப் பக்கங்களிலுமாக மாறிமாறி அபூபக்கர் சென்றார். நண்பர் இப்படி மாறி, மாறி ஓடிச் செல்வதைக் கண்ட நபிகள் நாயகம்,

"அபூபக்கரே, சிலசமயம் என் முன்பாக ஓடுகிறீர். சிலசமயம் என் பின்னால் வருகின்றீர்கள். திடீரென்று வலப்புறமாகவும் பிறகு இடப்புறமாகவும் மாறிமாறி வருகின்றீர்கள்? ஏன் இப்படிச் செய்கின்றீர்கள்?" என்று வினவினார்.

அதற்கு மறுமொழியளித்த சித்திக் அபூபக்கர்,"இறைத்தூதரே!
எம் உயிரினும் மேலானவரே!

நபிகள் நாயகமே! நான் அப்படி நடக்கக் காரணம், நீங்கள் இந்த வழியாகத்தான் வருகிறீர்கள் என்பதை எதிரிகள் ஒருவேளை அறிந்து உங்களைத் தாக்க ஒளிந்திருப்பார்களோ என்று உங்களுக்கு முன்பாகச் செல்கிறேன்.

ஒருவேளை நம்மைப் பின்தொடர்ந்து வந்து உங்களைத் தாக்கிவிட்டால் என்ன செய்வது என்று பின்னால் வருகிறேன்.

ஒருவேளை எதிரிகள் பாதையின் வலப்புறம் மறைந்திருப்பார்களோ என்ற எண்ணம் எழும்போது வலப்பக்கமாக வருகிறேன்.

இடப்பக்கம் மறைந்திருந்து எதிரிகள் தாக்கினால் என்ன செய்வது
என்று எண்ணி இடப்புறமாக நடந்து வருகிறேன்," என்றுரைத்தார்.

இதைக் கேட்ட நபிகள், "நீரல்லவா எனது உண்மையான நண்பர்," என்று சொல்லி அபூபக்கரைக் கட்டித் தழுவிக்கொண்டார்.

இப்போதும் சில நண்பர்கள் இருக்கிறார்கள்.

ஒரு துறவி சிரமத்தை விட்டு தன் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறினார். கொஞ்ச தூரம் சென்றிருப்பார்.
ஒருவன் மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடிவந்து,
"சாமீ நீங்க பாட்டுக்கு கெளம்பீட்டீங்க, வழியில திருட்டுப்பயம்
அதிகம்; நான் உங்க துணைக்கு வருவேன்" என்றான்.

"ஒனக்கு எதுக்குப்பா சிரமம்ன்னார்", துறவி.

"வருஷக் கணக்குல பழகினதுக்கு நான் இது கூடச் செய்யலைன்னா? எப்படி?", என்று துறவியின் முன்னால் கொஞ்ச நேரமும், பின்னால கொஞ்ச நேரம் என்று மாறிமாறி நடந்து வந்தான் அந்த ஆள்!

"எதுக்குப்பா, இப்படி சிரமப்படுற? என் முன்னாடியும் பின்னாடியும் வந்து ஏன் கஷ்டப்படுறே?", என்றார் துறவி.

"நான், எதுக்கு முன்னாடி ஓடுறேன்னா தூரத்துல திருடங்க வர்றாங்களான்னு பாக்கிறதுக்கு; ஒருவேளை பின்னாடி வந்து உங்க மூட்டை முடிச்சை பறிச்சுட்டுப் போயிட்டா என்னா செய்யிறதுன்னு பின்னாடி வர்றேன்னான் அந்த ஆள்"

"எவ்வளவோ பேர் என்னோட ஆசிரமத்துக்கு வந்து போய் பழகியிருந்தாலும் ஒன்ன மாதிரி ஒரு ஆள் கெடைச்சதுக்கு நான் அதிர்ஷ்டம் செஞ்சுருக்கணும்", என்றார்ர் துறவி.

"அவங்களுக்கெல்லாம் உங்ககிட்ட வெலை உயர்ந்த பொருள் இருக்குன்னு தெரியாதே", என்றான் அந்த ஆள்!

"என்னிடம் அப்படி என்ன பணங்காசு இருக்கு? மடியில கனமும் இல்ல; வழியில பயமும் இல்ல", என்றார் துறவி.

"என்ன இப்படிச் சொல்லீட்டீங்க? மஞ்சச் சுருக்குப் பையில ஒரு வைரமாலை வச்சிருக்கீங்களே, அது வேற யாரு கையிலயும் சிக்கியிறக் கூடாது பாருங்க...அதாங்கிறான்..."

நட்பு மிக‌,
ஆல்ப‌ர்ட்.

No comments: