Friday, June 13, 2008

அண்ணல் நபிகள் நடந்த பாதையில்...! (12)

ரம்ஜான்.... ரமதான்...ரமலான் என்றழைக்கப்படும் புனித மாதம் எத்தகையது என்பது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்துரைக்கும்போது....
" ரமதான் மாதம் எத்தகைய தென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழி காட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறரோ அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப் பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்குச் சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் நோன்பில் விடுபட்டுப் போனதைப் பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழிக் காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான், " என்கிறார்.


ஒரு தேர்! அந்தத் தேர்லே 5 குதிரை பூட்டியிருக்கு! அந்தத் தேர் போய்ச் சேரவேண்டிய இடத்துக்குப் பத்திரமா போய்ச் சேரணும்ன்னா, 5 குதிரையும் ஒரே வேகத்துலே போகணும்! ஒரே திசையிலே போகணும். ஒவ்வொண்ணும் ஒவ்வொரு திசையிலே போனாலும் ஆபத்து!


ஒவ்வொண்ணும் ஒவ்வொரு வேகத்துலே போனாலும் ஆபத்து! அதுசரி... எங்கே இருக்கு அந்தத் தேர்?ன்னு கேக்கறீங்களா? நம்ம சரீரம்தான் அந்தத் தேர். ஐம்புலன்கள்ன்னு சொல்றோமே மெய், வாய், கண், மூக்கு, செவி அது ஐந்தும் 5 குதிரைகள். அது அஞ்சும் ஒரே திசையிலே போகணும். அதை மறந்துட்டு, கை ஒண்ணு செய்ய, வாய் ஒண்ணு பேச, கண் ஒண்ணு பாக்க.. இப்படி இருந்தா வாழ்க்கை என்னத்துக்கு ஆவும்? வாழ்க்கையை நெறிப்படுத்துவதற்கான ஒரு முயற்சி தான் நோன்பு.


நோன்பு நோற்கும் காலங்களில் இசுலாமியச் சகோதரர்கள் மனதை கஷ்டப்படுத்திக் கொண்டு அதிகாலையில் எழுந்திருக்கிறார்கள்; வருடத்திற்கு 30 நாட்கள் அவர்கள் இவ்வாறு செய்வது, நோன்பு அல்லாத காலங்களிலும் நுரையீரலை புதுப்பிக்க வைக்கும் என்ற நல்ல தத்துவத்தின் அடிப்படையில்தான் நோன்பு ஆரம்பிக்கப்படுகிறது.


பதினோரு மாதங்கள் வரை முறையில்லாமல், ஆசை தீர உண்டதனால் களைத்துப் போயிருக்கும் வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்ற உறுப்புகளுக்கு, ஒரு மாதத்திற்கு மட்டும் வழக்கமான நேரத்திற்குள் ஏதும் உண்ணுவதோ, பருகுவதோ இல்லாமல், ஆசைகளையும், இச்சைகளையும் கட்டுப்படுத்துவதன் மூலம் உடல் மீண்டும் புத்துணர்ச்சி பெறுவதற்கும், நோய் நொடிகளின்றி வாழவும் வழிவகுப்பது தான், இம் மாதத்தில் நோற்கும் 30 நாள் நோன்பு ஆகும்!


ஒரு நாளில் 10 தடவைக்கும் மேல் டீ, காபி, மற்றும் பானங்கள் அருந்துபவர்கள் இருக்கிறார்கள்; ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை சிகரெட், பீடி என்று புகைப்பவர்களும் இருக்கிறார்கள்; சதா வெற்றிலை பாக்கை வாயில் குதப்புவர்களும் இருக்கிறார்கள்; நேரங்காலம் இல்லாமல் வயிறு புடைக்க உணவை உண்பவர்களும் இருக்கிறார்கள். இந்தப் பழக்கத்தை, ஆண்டிற்கு ஒரு முறை 30 நாட்கள் நோன்பு இருப்பதன் மூலம் உடலானது முறையற்ற பழக்கங்களுக்கு ஆட்படாமலும், நோய்களின்பால் ஈர்க்கப்படாமலும் நல்ல வழியில் இயக்கம்பெற இந்த நோன்பு அத்தியாவசியமாகிறது.


பதினோரு மாதங்கள், மேற்கூறிய வரைமுறையற்ற பழக்கங்களில் சிக்கியுள்ள மனிதனின் உடல், நச்சுப் பொருள்களால் நிரப்பப்படுகின்றன. வரைமுறையற்ற பழக்கங்கள் மனதுக்கு
சந்தோஷத்தைக் கொடுத்தாலும் அவைகள் உடலுக்கு கெடுதலையும் தீங்கையும் விளை விக்கின்றன. நோன்பு மேற்கொள்ளும் 30 நாட்களிலும் பகல் நேரம் முழுவதும், நோன்பு நோற்பது கஷ்டங்கள் கொடுத்தாலும், அவைகள் உடலுக்கும் மனதிற்கும் நன்மையானவற்றை, நாம் அறியாமலேயே உண்டாக்குகின்றன.


மனிதன், நாள் முழுவதும் சுவாசித்தாலும், நுரையீரல் அதிகப்படியாக இஇயங்கும் நேரம் அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணிவரை உள்ள 2 மணி நேரமேயாகும். தூங்கும்பொழுது ஐம்புலன்களும் முழுமையாக இஇயங்காமல் இருக்கும். அப்பொழுது நுரையீரல் இயங்குவதைவிட, விழித்திருக்கும்பொழுது இயங்கும் சுவாச இயக்கமானது, நுரையீரலை நல்ல முறையில் புதுப்பிக்கிறது. அதிகாலையில் பல ஆஸ்துமா நோயாளி கஷ்டப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம், அவர்களை ஆஸ்துமா ஏன் எழுப்பிவிடுகிறது? காரணம் அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை நுரையீரல் சரியாக இயங்கமுடியாததாலும் ஐம்புலன்களும் விழித்திருந்தால்தான் நுரையீரல் நன்கு இயங்கமுடியும் என்று இயற்கை கருதுவதாலும்தான்.
இரவு தூக்கத்தின்போது, வயிற்றில் உள்ள உணவு நன்கு ஜீரணமாகி சிறுகுடலுக்கு சென்றுவிடுகிறது. காலை உணவு (ஸஹர்) இந்த நேரத்தில் எடுத்துக்கொள்வதன் மூலம் வழக்கமான உண்ணும் நேரங்களை திசை திருப்பப்படுகிறது.


இந்த மாற்றத்தின் மூலம் வயிறு, தன்னுடைய பழகிப்போன நேரத்திலிருந்து விலக ஒரு சந்தர்ப்பம் ஏற்படுகிறது. தேவையில்லாமல் பசித்தல், அதிகமாக பசித்தல், அடிக்கடி பசித்தல் போன்ற தன்மைகள் மாற்றப்படுகின்றன. காலை உணவையும், மதிய உணவையும் உண்ணாமல் இருக்கும்பொழுது நாம் அதிகாலை (ஸஹர்) உண்ட உணவை வயிறு நன்கு ஜீரணித்துவிடு கிறது. வயிற்றில் அமிலங்களை சுரக்கும் சுரப்பிகள், தன் அதிகப்படியான அமிலச் சுரப்பிலிருந்து விடுபடுகின்றன, வயிற்றில் ஏற்படும் இந்த மாற்றம் இஇந்த தாக்கம்......குடல், ஜீரண உறுப்புகள் அனைத்தையும் நன்கு இயங்கும் முறையில் மாற்றுகின்றன.


நோன்பு இல்லாத காலங்களில் அதிகப்படியாக உண்டு, நன்கு ஜீரணிக்கப்படாமல் உடலில் தேங்கியுள்ள கசடுகள், கழிவுப் பொருட்கள் எல்லாம் மெல்ல நீக்கப்படுகின்றன. கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. அதிகாலை (ஸஹர்) உணவை, யாருக்கும் குமட்டல் ஏதுமின்றி நன்றாக சாப்பிடமுடியாமல், அவர்களின் வயிறு, குடல் நன்றாக இருக்கிறது என்று பொருள். யாருக்கு சாப்பிடமுடியாமல், மயக்கம் ஏற்படுவதுபோலவும், வாந்தி வருவது போலவும், இருக்கிறதோ, அவர்களுக்கு பித்தம் அதிகமாகி உள்ளது; குடல், ஜீரண உறுப்புகள் கெட்டுப்போய் இருக்கின்றன என்று அர்த்தம். இந்த நோய்களைத் தீர்ப்பதற்காகவேதான் நாம் நோன்பை மேற்கொள்கிறோம். நோன்பு இருக்கும் நேரத்தில் உணவு பழக்கங்களை நல்ல முறையில் கடைபிடிப்பதால் வயிறு உப்புசம், ஏப்பம், மயக்கம், மலச்சிக்கல் போன்ற உபாதைகளிலிருந்து நிரந்தரமாக விடுபடுகின்றது.


நோன்பு நோற்பதற்கு முக்கிய காரணமே ஆசைகளிலிருந்தும் இச்சைகளிலிருந்தும் நாம் விடுதலை பெறவேண்டும்; மேலும், உடலையும் மனதையும் நோயின்றி வைத்துக் கொள்ள வேண்டும் என்னும் அடிப்படைக் கொள்கைக்காகத்தான்.

அண்ணல் நபிகள் நடந்த பாதையில்...! (11)

நோன்புக் காலங்களில் உண்ணும் முறைபற்றி நபிகள் நாயகம் (ஸல்) தெளிவுபடச் சொல்லியிருக்கிறார்.
" அதிகாலை நேரம் என்ற வெள்ளை நூல் இரவு என்ற கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளி வாசலில் தனித்து இருக்கும் போது, உங்கள் மனைவி யருடன் கூடாதீர்கள்.
இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளைத் தாண்ட முற்படாதீர்கள்; இவ்வாறே கட்டுப்பாடுடன் தங்களைக் காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.... என்கிறார்.

காலையிலிருந்து, நோன்பு திறக்கும் (இ·ப்தார்) வரையில் அடக்கி வைத்திருக்கும் ஆசையை நோன்பு திறந்து உணவு உண்ணும் நேரத்தில், கட்டுக்கடங்காமல் விட்டுவிடுவது, நோன்பிற்கான அடிப்படைக் காரணத்தையே தகர்த்துவிடும். அளவுக்கதிகமான பசியும், தாகமும் இருப்பது இயற்கை.

அதைக் கீழ்க்கண்ட முறையில் கடைபிடிப்பது பல அஜீரணக் கோளாறுகளிலிருந்தும் உடலை நீண்ட காலத்திற்கு காப்பாற்றும்.
நோன்பு திறக்கும்பொழுது பல அமிலங்கள் சுரந்து வயிற்றில் நிறைந்து நிற்கும், வாயில் உள்ள கசடுகளையும், குடல்கள், வயிற்றில் உள்ள கசடுகளையும் நீக்கும் தன்மை கொண்டது, தேன்.
மேலும் வயிற்றில் நிறைந்துள்ள அமிலத்தின் தன்மையை மாற்றி வயிறு உப்புசம், ஏப்பம், விக்கல், வயிற்று எரிச்சல் போன்றவற்றை தவிர்க்கும் சக்திவாய்ந்தது.

1. பேரீச்சம்பழத்தை, தேனுடன் நனைத்து நன்கு மென்று சாப்பிடுவது நல்லது.
2. எலுமிச்சம் பழச்சாற்றில், இனிப்புக்கு ஏற்றவாறு தேனும், தண்ணீரும் கலந்து மெல்ல மெல்ல பருகுவது நல்லது (ஐஸ் சேர்க்கக்கூடாது, சீனி சேர்க்கக் கூடாது)
3. தேநீர், காபி போன்றவற்றை சுத்தமாக தவிர்க்கவேண்டும். (நோன்பு திறக்கும் நேரத்தில்)
4. எலுமிச்சம் பழச்சாற்றை விரும்பாதவர்கள், சாத்துக்குடி, அன்னாசி பழச்சாற்றை தேனுடன் கலந்து ஜூஸ் செய்து சாப்பிடலாம்.
5. இளநீர் மிக நன்மை தரும். இதுவும் வயிற்றிலுள்ள நச்சுக்களை நீக்கும், இந் நச்சுக்கள் சிறுநீராக மாறி வெளியேறிவிடும்.
6. புகை பிடிப்பதன் மூலமாகவோ, ஐஸ் மற்றும் குளிர்பானங்கள், சோடா, கோலா போன்ற வாயு அதிகமுள்ள பானங்களின் மூலமாகவோ நோன்பு திறப்பது மிகவும் ஆபத்து. வயிற்றில் உள்ள அமிலத்தை மேலும் அதிகமாக சுரக்கச்செய்து உடல் நலத்தையே பாழடித்துவிடும்.
7. எந்த பானங்களையும் உபயோகிக்கலாம், ஆனால் வாயு நிரம்பியதாகவோ, ஐஸ் சேர்க்கப் பட்டதோகவே, சீனி சர்க்கரை சேர்த்ததாகவோ இருக்கக்கூடாது, இனிப்புக்கு தேன் ஒன்றே போதுமானது.
8. சூடான பானங்களில் நோன்பு திறக்க விரும்புபவர்கள் காய்கறி சூப், கோழி சூப், ஆட்டு சூப் போன்ற வகைகளை உபயோகிக்கலாம், இதில் மிளகாய் இல்லாமல், சிறிதளவு மிளகு சேர்த்து உபயோகித்தல் நலம் பயக்கும்.
9. எண்ணெயில் பொரித்த உணவு வகைகள் (பஜ்ஜி, வடை, சமோசா) வைத்து நோன்பு திறக்காதீர்கள், சாப்பிடும்போது உபயோகியுங்கள்.
மேற்கூறிய பானங்களில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு பருகிவிட்டு 1/2 மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை உணவு உண்ணாமல் இருக்க வேண்டும், அப்பொழுதுதான் வயிறு தன் அமிலத்தை முழுவதும் வெளியேற்றும், இவ்வாறு சிறிது இடைவெளிக்குப் பிறகு உண்ணுவதால் உணவு நன்கு ஜீரணிக்கப்படும்.

வயிற்று உபாதைகள் இல்லாமலும், மயக்கம், தளர்ச்சி, சோர்வு இல்லாமலும் உடலை நல்ல முறையில் வைத்திடும், அதிகமாக காரம் உள்ள உணவையும், வயிறுமுட்ட உண்ணுதலையும் தவிர்ப்பதன் மூலமாகவும், மெதுவாக சாப்பிடுவதன் மூலமாகவும் மேலும் உடல் நலத்தை வலுப்படுத்த முடியும்.
அதிகமாக சாப்பிடவேண்டும் என்ற‌ எண்ணம் உள்ளவர்கள் அந்த உணவை 2 வேளைகளாகப் பிரித்து 7 முதல் 7.30க்குள் ஒரு வேளை உணாகவும் 10 முதல் 10.30க்குள் இன்னொரு வேளையாகவும் பாதிப்பாதியாக உண்ணலாம். உணவைப் பார்க்கும்போதெல்லாம் சாப்பிட்டுக் கொண்டிருப்பது அடுத்த நாள் காலை (ஸஹர்) வேளைச் சாப்பாட்டைப் பாதிக்கும்.

ஆசையினால் வயிறுமுட்ட உண்டுவிட்டு திக்குமுக்காடுபவர்கள் சிறுக சிறுக வெந்நீரை அருந்துவது ஜீரணத்திற்கு ஏற்ப வயிற்றை பதப்படுத்திவிடும். ஐஸ் தண்ணீர், டீ, காபி குடிப்பது வயிற்றை பதப்படுத்துவது போல் தோன்றினாலும் உடலுக்குத் தீங்கை விளைவிக்கும்.

இவ்வாறு நோன்பு நோற்கும் கலையை வளர்த்துக்கொண்டால் இரவு நேர வணக்கத்தில் (தராவிஸ்) சோர்வு, தூக்கம், மயக்கம் போன்றவைகளின் தாக்கம் அதிகமாக இராது, அடுத்த நாள் ஸஹர் வேளையில், தாமாகவே பசி எடுக்க ஆரம்பிக்கும். காலையில் தூக்கம் அதிகமாக வராது, உடல் மெலிவு ஏற்பட்டு தெம்பும் பிறக்கும்.

ஏழை எளியவர்கள் வறியவர்கள் இவங்க மேலேஅனுதாபம் கொள்ள கத்துக்குடுக்குது. நோன்பு இருக்கறதுனாலே மருத்துவ ரீதியாவே பல மாறுதல்கள் உடம்புலே ஏற்படுது. ரத்த அழுத்தத்தை அது குறைக்குதாம். ரத்தக் கட்டியை கரைக்கிற சக்தியை ரத்தத்துலே அதிகப்படுத்துது. Myocardial infraction ஆலே ஏற்படற உயிரிழப்பு பாதியா குறையுது.

தண்ணீர் சாப்பிடாமே இருக்கிறப்போ பிட்யூட்டரி சுரப்பியின் பின்பகுதி (Anti Diuretic Harmoneஐ சுரக்குது. வெளியாகிற சிறுநீர் அளவை இது குறைச்சுடும். அதனாலே உடம்புலே தண்ணீர் சேமிக்கப்படுது.

நோன்பு காலத்துலே Blood Sugar சீரா, ஒரே அளவா இருக்கிற மாதிரியும் உடம்பு அட்ஜெஸ்ட் பண்ணிக்குது.
இப்படி... இதுமட்டுமில்லே, இன்னும் எவ்வளவோ அட்ஜெஸ்ட்மெண்ட் உடம்புக்குள்ளே நடக்குது.நோன்புன்னா... சாப்பிடாமே இருக்கிறது, தண்ணி குடிக்காமே இருக்கிறது... மட்டும் இல்லே...

உலக சுகங்கள் போகங்கள் வேண்டாம்ன்னு ஒதுக்கறது. அடுத்தவங்க மேலே அனுதாப உணர்வு வளர்றதுக்கும் சகிப்புத் தன்மை வளர்றதுக்கும் நோன்பு துணையா இருக்கு!
உலகத்துலே மனிதர்கள் ஒருத்தரை ஒருத்தர் சரியா புரிஞ்சிக்காததுனாலேதான் பலவிதமான பிரச்னைகள் உண்டாகுது.
மனுஷனுக்கு நிம்மதி குறையறதுக்கே இதுதான் முக்கியமான காரணம். பிரச்னையை சரியா புரிஞ்சிக்கிற திறமை நம்மகிட்டே இருந்தா அதை உடனடியா தீர்க்கறதும் சுலபமா இருக்கும்.

மனிதனை மனிதன் சரியா புரிஞ்சிக்கிற பழக்கத்தை ஏற்படுத்திக் குடுக்கறது நோன்புதான். இந்த நோன்பு இறைவனுக்கு நாம ரொம்ப நெருக்கமா இருக்கோம்ங்கற உணர்வை ஏற்படுத்தற நோன்பு!
இதுவரைக்கும் நான் சொன்னது இறைவன் பேர்லே நம்பிக்கை உள்ளவர்கள் கடைப்பிடிக்கிற நோன்பை பத்தி.

இதெல்லாம் இருக்கட்டும். இறைவன் பேர்லே நம்பிக்கையே இல்லாத ஒருத்தன் சாப்பிடாமே இருக்கணும்ன்னு ஆசைப்பட்ட கதை ஒண்ணு உங்களுக்குத் தெரியுமா?
அவருகிட்டே ஒருத்தர்... "நம்ம வயிற்றை நிரப்பறது ஆண்டவன்தான்" அப்படின்னார்.
"அது எப்படி... அவரு வந்து நிரப்புவார்...? நாம தானே கையாலே எடுத்து சாப்பிடணும்"ன்னான் இவன்.

அது மட்டுமில்லே அதை சோதிச்சிப் பார்க்கணும்ன்னும் ஆசைப்பட்டான்.
உடனே மனைவிகிட்டே போனான். கட்டுச் சோறு கட்டிக்குடுன்னான். ஒரு பொட்டலம் கட்டி எடுத்துக்கிட்டான். நேரா மனுஷனே இல்லாத ஒரு பாலைவனத்துக்குப் போனான். ஒரு இடத்துலே உக்கார்ந்தான்.
சோற்றுப் பொட்டலத்தை முன்னாடி வச்சான். "நான் இதை கையாலே தொடப் போறதில்லே... நானா சாப்பிடாதப்போ... ஆண்டவன் எப்படி என் வயிற்றை நிரப்புவார் பார்க்கலாம்"ன்னான்.

கையை கட்டிக்கிட்டு கண்ணை மூடிக்கிட்டு பேசாமே உக்கார்ந்துகிட்டான். கொஞ்ச நேரம் ஆச்சு. அந்தப் பக்கமா ரெண்டு ஆசாமிகள் வந்தாங்க.
அவங்களுக்கு அகோரப் பசி. ரெண்டு பேர்லே ஒருத்தன் அந்த பொட்டலத்தை எடுக்கப் போனான்.

இன்னொருத்தனுக்கு சந்தேகம்.

"இவன் ஏன் பொட்டலத்தை வச்சிக்கிட்டு சாப்பிடாமே உக்கார்ந்திருக்கான். ஒருவேளை இதுலே விஷம் கலந்திருக்குமோ?"ன்னான். இருந்தாலும் இருக்கும்!'ன்னான் இன்னொருத்தன். அந்த ஆள் கிட்டேயே கேப்போம்ன்னு பேச்சுக்குடுத்துப் பார்த்தான்.

அந்த ஆள் பேசவே இல்லை. சந்தேகம் வலுத்தது. ரெண்டு பேரும் அந்த ஆளை வலுக்கட்டாயமா பிடிச்சிக்கிட்டு வாயிலே சாப்பாட்டை திணிச்சாங்க...
வேறே வழியில்லே... சாப்பிட்டுட்டான். இப்ப அந்த ஆளுக்கு வயிற்றை நிரப்பினது யார்?

யோசிச்சிப் பாருங்க.
அதுக்கப்புறம் அந்த பொட்டலத்துலே இருந்துது பூராவையும் அந்த ரெண்டு பேரும் காலி பண்ணிட்டுப் போயிட்டாங்க.

இந்த ஆள் ஆச்சரியப்பட்டுப் போய் உக்காந்திருந்தான்.
"என்னப்பா இறைவனோட கருணையை நினைச்சி ஆச்சரியப்பட்டுக்கிட்டிருக்கியா?"ன்னு அவனைப் பாத்து கேட்டார் பழைய நண்பர்.

அதுக்கு அவன் "நான் அதை நினைச்சி ஆச்சரியப்படலே..." எப்பவும் நான் கஷ்டப்பட்டு சாப்பிடற எங்க வீட்டு சமையலை அவ்வளவு பிரியமா அந்த ரெண்டு பேரும் சாப்பிட்டாங்களே... அந்த அளவுக்கு அதுலே என்ன இருக்கு? அதை நினைச்சித்தான் திகைச்சிப் போய் உட்கார்ந்திருக்கேன்!" அப்படின்னான்.

அண்ணல் நபிகள் நடந்த பாதையில்...! (10)

"வசதியுள்ள நிலையிலும், வசதியற்ற நிலையிலும்
செலவழிப்பார்கள்; மேலும் சினத்தை
அடக்கிக்கொள்வார்கள்....மேலும் மக்களின்
தவறுகளை மன்னித்து விடுவார்கள்.. இத்தகைய
உயர்ந்த பண்பினரை இறைவன் நேசிக்கின்றான்..." -அருட்குரான்.

மதீனா நகரே விழாக் கோலம் பூண்டிருந்தது போன்று இருந்தது. காரணம், அந்தநகரில் மார்க்க மேதைகளும், அறிஞர் பெருமக்களும், சமுதாயத்தின் பிரபலமான பெரியோர்களும், அரசு அதிகாரிகள் என்று அவ்வளவு பேர்களும் ஓரிடத்தில் குழுமியிருந்ததுதான் காரணம். அவர்கள் குழுமியிருந்த இடம் பெரும் மாளிகை! அந்த அரண்மனை போன்ற மிகப்பெரிய மாளிகையில் விருந்து தடபுடலாக நடந்து கொண்டிருக்கின்றது.

விருந்தினர்களோடு விருந்தினராக அந்த மாளிகைக்குச் சொந்தக்காரரும் உணவருந்த அமர்ந்திருந்தார். விருந்தினர்களுக்கு அவருடைய இல்லப் பணிப்பெண் பரிமாறிக்கொண்டிருந்தாள். சோள ரொட்டி, கறிக்குழம்பு, பேரித்தம் பழம் போன்றவற்றைக் கொண்டு வந்து பரிமாறுவது அவளின் வேலையாக இருந்தது. அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்துவிட்டது!?

பாத்திரம் கீழே விழுந்த சத்தமும், பணிப்பெண்ணின் அலறலும் விருந்தினர்கள் அனைவரையும் ஒருங்கே ஈர்த்தது. விருந்தினர்களின் பார்வைகள் ஒட்டுமொத்தமாகக் குவிந்திருந்தது அந்த வீட்டு உரிமையாளர் மீது!
ஆம்! பணிப்பெண் கையில் பிடித்திருந்த கறிக்குழம்புப் பாத்திரம் கைதவறி விழுந்த அதிர்ச்சியில் அலறியது அந்தப் பணிப்பெண்தான். சுடச்சுடக் குழம்பும் கறியும் கொட்டியது அந்த உரிமையாளரின் முகத்தில்!

அவரின் முகத்திலும் தாடியிலும், தூய வெண்ணிற ஆடையிலும் கொட்டி வழிந்து கொண்டிருந்தது. அந்தக் கறிகுழம்பின் சூடும், காரத்தன்மையும் அவரின் முகம், மூக்கு என்று எரிந்து கொண்டிருந்தது. அதைத் துடைத்துக் கொண்டிருந்த பணிப்பெண்ணைச் சுட்டெரிப்பது போல அவர் பார்த்தார். அந்தப் பணிப்பெண்ணின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோட, தம் இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு அழத்துவங்கி விட்டாள். விருந்து ஸ்தம்பித்தது! அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்று விருந்தினர்கள் திகைத்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஒரே அமைதி!

அந்த நேரத்தில்.....அமைதியைக் கிழித்துக்கொண்டு அந்தப் பணிப்பெண் அருட் குரானின் திருவசனத்தை ஓத ஆரம்பித்தாள். பயம், துக்கம், பீதி, குற்ற உணர்வுகளால் அவளது குரல் தழுதழுத்தது. அப்படி அவள் குரல் நடுங்கி ஓதியபோதிலும் உச்சரிப்பு குன்றாமல் வெகு நேர்த்தியாக ஓத ஆரம்பித்தாள். "இறைவனிடமிருந்து வழங்கப்படும் மன்னிப்பு மற்றும் சுவனத்தின் பக்கம் செல்லும் பாதையில் விரைந்து செல்லுங்கள். அது வானங்கள், பூமியின் அளவிற்கு விரிவானது. மேலும் அது இறை அச்சமுடையோருக்காகத் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது...." ஏற்ற இறக்கங்களோடு நிதானமாக ஓதத் துவங்கினாள்.

அது, அந்தச் சூழலையே மாற்றிவிட்டது. உரிமையாளரின் முகத்திலிருந்த சுட்டெரிக்கும் பார்வை மறைந்தது. சாந்தம் மெல்ல, மெல்ல அவரின் முகத்தில் குடியேறியது. அவர் தன் கண்களை மூடிக்கொண்டு பணிப்பெண் ஓதுவதை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கலானார். " .... அவர்கள் எத்தகையோர் எனில் வசதியுள்ள நிலையிலும், வசதியற்ற நிலையிலும் செலவழிப்பார்கள்; மேலும் சினத்தை அடக்கிக்கொள்வார்கள்...." பணிப்பெண் இவ்வாறு ஓதிக்கொண்டிருக்கும்போது திடீரென்று ஒரு குரல் கணீரென்று கேட்டது.

" நான் எனது கோபத்தை அடக்கிக்கொண்டேன்.... உரிமையாளர் தன் எரிச்சல் மறைந்த நிலையில் சொன்னார். பணிப்பெண் அதன்பிறகும் ஓதினாள்...." மேலும் மக்களின் தவறுகளை மன்னித்து விடுவார்கள்...."

" நான் உன்னை மன்னித்துவிட்டேன்.... அவர் உரக்கக் கூவினார். கூடியிருந்த விருந்தினர்கள் முகத்தில் மலர்ச்சி! சிரிக்க மறந்த முகங்கள் புன்னகை பூத்தன! பணிப்பெண் முகத்தில் பரவசம்! அந்தப் பரவசத்தில் தொடர்ந்து ஓதுகின்றாள். ".... இத்தகைய உயர்ந்த பண்பினரை இறைவன் நேசிக்கின்றான்..."

பணிப்பெண் ஓதி முடிக்கவில்லை. சிலிர்த்தெழுந்தார் அவர்! " போ... உன்னை நான் விடுதலை செய்துவிட்டேன். சுதந்திரமாக நீ செல்லலாம்; என்றார். அது மட்டுமல்ல அந்தப் பணிப்பெண்ணுக்கு ஏராளமான வெகுமதிகளைக் கொடுத்து அனுப்பினார். அங்கிருந்த விருந்தினர் முகங்கள் உவகையால் மகிழ்ச்சி பொங்கிப் பூத்தது. சந்தோச சாம்ராஜ்யத்தில் மிதப்பது போன்று பணிப்பெண் உணர்ந்தார்.

இப்பவும் கூட சிலர் இருக்காங்க... எப்டீங்கிறீங்களா? ஆடம்பரமான விருந்து நடந்து கொண்டிருந்தது. சமுதாயத்தில் உள்ள பெரும்புள்ளிகள் எல்லாம் அங்கிருந்தனர். அந்த விருந்தை நடத்துபவர் அரசியல்வாதியிலிருந்து, அதிகாரவர்க்கம் வரை செல்வாக்கு படைத்தவர்; ஆளும்கட்சியில் பெரும் பொறுப்பு வகிப்பவர். தடபுடலாய் விருந்து நடந்து கொண்டிருந்தது. சீருடை அணிந்த வேலைக்காரர்கள் உணவு பரிமாறிக்கொண்டிருந்தார்கள். விருந்துச் சாப்பாட்டை ஒரு கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். விருந்தில் கடைசியாக நெய் மணக்கும் பாயாசம் பரிமாறப்பட்டது. அப்போதுதான், அந்தச் சத்தம் கேட்டது; எல்லோரும் திடுக்கிட்டு சத்தம் வந்த திசையில் திரும்பிப் பார்த்தார்கள். கண்ணைப் பறிக்கும் வெள்ளுடையிலிருந்த ஒரு பிரமுகர் முகத்திலிருந்து பாயாசம் வழிந்து சட்டை வேட்டி எல்லாம் பாயாசமாய்க் காட்சியளிக்க பணியாள் "அய்யோ கை தவறி....நடந்து போச்சு... மன்னிச்சுருங்கய்யா" என்று சொல்லி முகத்தை துடைத்துக் கொண்டிருந்தான்.

இதைக் கவனித்த விருந்தை ஏற்பாடு செய்தவர், தாம் சாப்பிடுவதை விட்டுவிட்டு அந்தப் பிரமுகரை நோக்கி விரைந்து சென்றார். எல்லோரும், என்ன நடக்கப் போகுதோ என்று ஒருவித அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

"ஏண்டா, அறிவு கெட்டவனே, ஒனக்கு கண்ணில்ல.. இப்படியா... மொதல்ல நீ, வெளிய போ...யாருப்பா... அங்க.. இவங்களை அழைச்சிட்டு உள்ள போய் புது துணி குடுத்து மாத்திக்க ஏறப்பாடு செய்" என்று இரைந்தார்.

" சரி...சரி.. பாவம்...கை தவறி விழுந்துருச்சு... நீங்க போய் சாப்புடுங்க" என்று முகத்திலிருந்த பாயாசத்தை ஆயாசமாய் துடைத்துக்கொண்டே சொன்னார் அந்த ஆள்!

விருந்து எல்லாம் முடிந்தது, வந்தவங்கள்ளாம் கெளம்பினாங்க. விருந்து கொடுத்த அந்த மனிதரும் அவருக்கு வேண்டப்பட்ட ஒருத்தரும் மட்டும் அங்க இருந்தாங்க. எங்க அவன்? கூப்புடு.... என்று கூப்பாடு போட்டார் அந்தப் பெரிய மனிதர்.

"அய்யா.... தெரியாம... கைதவறி நடந்து போச்சு மன்னிச்சுருங்க அய்யா....என்றவாறே, சரி நம்ம சீட்டுக் கிழிஞ்சுது இன்னையோட என்ற முடிவோட வந்தான், அந்தப் பணியாள்.

"சரி..சரி.. கை தவறி விழுந்ததுக்கு நீ, என்ன பண்ணுவே, எல்லாருக்கும் முன்னாடிதிட்டிட்டனேன்னு வருத்தப்படாதே இந்தா...இதச் செலவுக்கு வச்சுக்க... ஒருவாரம் லீவு..ஊருக்குப் போயிட்டுவா?"என்று ஆயிரம் ரூபாயை நீட்டினார். பணியாள் ரூபாயை வாங்கிக்கொண்டு.

"அப்ப வர்றனுங்க", என்று சொல்லிக் கிளம்பினான் முகமெல்லாம் சந்தோசம் சுடர்விட!

பெரியமனிதருக்கு அருகிலிருந்தவர், "என்னாங்க கூப்புட்டு சீட்டைக் கிழிச்சு வூட்டுக்கு அனுப்பப் போறீங்கன்னு நெனைச்சேன். செலவுக்கு கைநெறையா காசும் குடுத்து அனுப்புறீங்களே. உங்க பெருந்தன்மையே.. பெருந்தன்மைங்க..." என்றார்.

"அட, நீ வேற... அந்தாளு என்னை எதிர்த்துப் பேசுற முக்கியமான எதிர்கட்சியாளு. எனக்கு கூப்புட இஷ்டமே இல்லை; ஒருவகையில கூப்புட்டு மூக்கறுத்தமாதிரி இப்டியானதுல எனக்கு உள்ளூர சந்தோசம்.... அதான் இவனுக்கு ஒருவார லீவும் பணமும் குடுத்தேன்" அப்டீங்கிறார்...!?

Friday, September 21, 2007

அண்ணல் நபிகள் நடந்த பாதையில்...! (9)-

" தன் குடும்பத்தார், தன் செல்வம், தன் அண்டைவீட்டார் ஆகியோர் விசயத்தில்ஒரு மனிதன் செய்யும் தவறுகளுக்குத் தொழுகை, தர்மம் ஆகியன பரிகாரம் ஆகின்றன. ''-திருக்குரான்.

பால்காரர் வந்துவிட்டார்.....!

அபூபக்கர் சித்திக்!

மக்கா நகரின் மகத்தான மனிதர்!!
இறைத் தூதர் முகம்மது நபி (ஸல் ) அவர்களின் இதயம் கவர்ந்த இனிய நண்பர்; அன்பும் பண்பும் ஒருங்கே அமையப்பெற்ற பெருந்தகையாளர் ஆவார்.

செல்வந்தர் என்ற கர்வமோ, அகம்பாவமோ மருந்துக்கும் இல்லாத பேராளர்!
ஏழை எளியோர்க்கு எப்போதும் உதவுகின்ற பேராளர்!

அபூபக்கர் சித்தீக் அவர்களின் இல்லத்துக்கு அருகே வசித்தவர்கள்
ஏழை எளியவர்களாகவும் முதியவர்களாகவும் அனாதைகளாகவும் இருந்தனர்; அவர்களின் அன்றாடத் தேவைகளைத் தனது பணியாட்களைக் கொண்டு நிறைவேற்றியிருக்கலாம்.

ஆனால் அபுபக்கரோ தானே தினமும் சென்று அவர்களின் சுய தேவைகளை நிறைவேற்றி வந்தார். எப்படி என்றால், சிலருக்கு மாவு அரைத்துக் கொடுப்பார். சிலருக்குத் தானே ரொட்டி சுட்டுக் கொடுப்பார்.

சிலருக்கு வேண்டிய மளிகைப் பொருட்களை வாங்கி வந்து கொடுப்பார்.

வயதான மூதாட்டி (வயதானால்தான் மூதாட்டி என்று உடனே

யாரும் வரிந்து கட்டிகொண்டு வந்துவிடவேண்டாம்!?)
ஒருவருக்கு ஆடு ஒன்று இருந்தது. மூதாட்டியின் வீட்டிற்குக் காலையிலும் மாலையிலும் அபூபக்கர் சென்று பால் கறந்து
கொடுத்து வருவது உட்படப் பல வேலைகளைத் தானே செய்து
உதவி வந்தார்.

நபி அவர்கள் மரணமெய்திய பிறகு மக்கள் அபூபக்கர் அவர்களையே தங்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்தார்கள். அதாவது அரசுத் தலைவராக ( கலீ·பாவாக ) தேர்ந்தெடுத்தனர்.

இந்தச் செய்தி அபூபக்கரின் இல்லத்துக்கு அருகில் வசித்தவர்களுக்குத் தெரியவந்தபோது ஒருபுறம் மகிழ்ச்சி அடைந்தாலும், மறுபுறம் மனக் கவலையுங் கொண்டனர். இனிமேல், அபூபக்கர் அரசுப் பணிகளில் மூழ்கிவிடுவார், நம்மை எங்கே கவனிக்கப் போகிறார்? அதற்கு அவருக்கு நேரமும் கிடைக்காதே என்பதுதான் அவர்களின் கவலைக்குக் காரணமாக இருந்தது.

ஆட்சித்தலைவர் பொறுப்பேற்ற பிறகும் அபூபக்கர் தம் அண்டை அயலாரை மறக்கவில்லை; வழக்கம் போல அபூபக்கர்

அதிகாலையில் முதல் வேலையாக மூதாட்டி வீட்டிற்குச்
சென்றார். மூதாட்டியின் வீட்டிற்கு முன் நின்றுகொண்டிருந்த
சிறுமி ஒருத்தி வேகமாக வீட்டிற்குள் ஓடி,

" பாட்டீ...பால்காரர் வந்துவிட்டார் " என்று பெருங் குரல் கொடுத்துக்கொண்டே ஓடினாள். பாட்டிக்கு மட்டுமல்ல,
அபூபக்கரின் வழக்கமான சேவைகளைப் பெறுகின்ற
எல்லோருக்கும் மிக்க மகிழ்ச்சி ஏற்பட்டது.

இனிமேல் கிடைக்காது அவரின் சேவை என்றெண்ணியிருந்த அவர்களுக்கு மகிழ்வு ஏற்படாதா என்ன?

அபூபக்கர் சம்பவத்தை எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரிடம் சொன்னேன். அவர் அரசாங்கத்தில் ஒரு பெரிய அதிகாரியாக

இருப்பவர்.

"இந்தக்காலத்தில் சாதாரண நிலையிலிருந்த ஒருவருக்குப் பெரிய பதவி கிடைத்தால் பழசை மறக்காமல் செய்வது என்பது அபூர்வம் என்று சொன்னேன்.

அதற்கு நண்பர் தன்னோட சோகமான அனுபவத்தை என்னிடம் சொன்னார். அபூபக்கர் காலம் அந்தக்காலம்!

இந்தக்காலத்தில் நல்லது என்று எண்ணி யாருக்காவது உதவி
செய்தால் நாம்தான் வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டியதாகிவிடுகின்றது என்றார்.

அவரோட அனுபவம் என்ன என்று விசாரித்தேன்.


அவரும் நடந்ததைச் சொன்னார்.

ஒரு நாள் என்னைப் பார்க்கவேண்டும் என்று ஒரு ஆள் வந்தார்.
வந்த ஆள் கேட்டார், "சார், போன மாசம் வந்த பெரிய வெள்ளத்தில் நான் மாட்டிக்கிட்டு தத்தளிச்சப்ப என்னைக் காப்பாத்திக் கரை சேத்தது நீங்கதானா சார், " என்று கேட்டார்.

"ஆமாம்! அதனால் என்னப்பா, அது என்னுடைய கடமை. இதற்குப்
போய் நன்றி எல்லாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை " என்று சொன்னேன்.

அதற்கு வந்த ஆள் சொன்னார்: -" அதற்கு இல்லை சார்! அன்னைக்குச் சட்டைப் பையில் ஒரு நூறு ரூபாய் நோட்டு வச்சிருந்தேன். அதக் காணோம்! அதான் உங்களக் கேட்டுட்டுப் போகலாம்ன்னு வந்தேங்கிறான்!?"

"நிச்சயமாக அல்லாஹ் உங்கள் தோற்றங்களையோ, உங்கள் பொருட்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையும், உங்கள் செயல்களையுமே பார்க்கிறான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

- ஆல்பர்ட்.

அண்ணல் நபிகள் நடந்த பாதையில்...! (8)

"அண்டை வீட்டாளர்களின் உரிமைகள் என்னவென்பது உங்களுக்குத் தெரியுமா? அண்ணல் நபிகளிட்ட பட்டியல் இதோ....
உங்கள் அண்டை வீட்டார் உதவி கேட்டால் உதவுங்கள். ஆறுதல் தேவைப்படும்போது ஆறுதல் அளியுங்கள்; அவருக்குத் தக்க சமயத்தில்
கடன் கொடுங்கள்; அவர் துயரப்பட்டு நிற்கும்போது அவரின் துயரைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அவர் நோய் வாய்ப்படும்போது நலம் விசாரியுங்கள்; அவர் மரணமடைய நேரிட்டால் இறுதிச் சடங்குகளில் மனமுவந்து கலந்துகொள்ளுங்கள்; அவர் நல்லது செய்தால் பாராட்டுங்கள். வாழ்த்துங்கள்; அவருக்குத் துன்பம் நேரும்போது அவர் துயர் களைய முற்படுங்கள்; அவருக்குக் காற்று கிடைக்காதவாறு உங்கள் சுவரை அவர் அனுமதியின்றி உயரமாக எழுப்ப வேண்டாம்; அவருக்குத் தொல்லைகள் ஏதுமில்லாமல் நடந்துகொள்ளுங்கள்; - எம்பெருமானார் நபிகள் நாயகம்.

சூரியக் கதிர்கள் இரவின் மடியில் சற்றே தலை சாய்த்துத் துயிலத் துவங்கிய சமயமது! தம் தொழுகையை நிறைவேற்றிவிட்டு பள்ளிவாயிலை விட்டு எம்பெருமானார் வெளியே வருகின்றார்கள்!

எம்பெருமானாரைச் சுற்றிலும் ஒரு கூட்டம் சூழ்ந்துகொள்ள, அந்த அற்புதப் பொழுதில் எம்பெருமானார் போதனைகளைச் செவிமடுத்துக் கொண்டிருந்தனர், கூடியிருந்தோர்!

எம்பெருமானார் முகம்மது நபி (ஸல்) அவர்கள், உதிர்க்கின்ற நல் முத்துக்களை சிந்தாமல் சிதறாமல் செவிகளில் வாங்கிக்கொண்டிருந்த நேரத்தில்தான் அந்தச் சம்பவம் நிகழத் துவங்குகின்றது!


கந்தலான ஆடை, கலைந்த கேசம், பஞ்சடைந்த கண்கள், ஒட்டிய வயிறு, எலும்புக்கூடு ஒன்று நடந்து வருவது போல் ஒருவர் தள்ளாடியபடியே அண்ணல் நபிகள் அமர்ந்திருந்த கூட்டத்தை நோக்கி வருகின்றார்!

நேராக எம்பெருமானிடம் சென்று, சொல்லுகின்றார்.

அவர் நா அசைகின்றது; வார்த்தைகளோ வெளிவரவில்லை;
கைகளைத் தூக்கிச் சைகை செய்ய முனைகின்றார்.
கை உயரே எழும்ப மறுக்கின்றது; அவர் என்ன சொல்ல
வருகின்றார் என்று புரியாமல் அங்கிருந்த பலரும் குழப்பத்தோடு அவரையும் நபிகளையும் மாறிமாறிக் கவனிக்கின்றனர்.

ஆனால் நபிகள் நாயகமோ வறுமையின் கோரப் பிடிகளில் சிக்கித் தவிக்கின்ற அந்தமனிதனை வாட்டும் நோய் என்ன என்பதை அறிந்து கொண்டார். நபிகள் நாயகம், உடனே அருகிலிருந்த ஒருவரை அழைத்துத் தம் வீட்டிற்குச் சென்று அந்த மனிதருக்கு உணவளிக்கும் பொருட்டு எதாவது வாங்கி வரும்படிக் கட்டளையிடுகின்றார்கள்;

சற்று நேரத்தில் திரும்பி வந்த அந்த மனிதர் வீட்டில் உணவு ஏதும் மீதம் இல்லை என்பதைத் தெரிவிக்கின்றார். நபிகள் நாயகம் அவரைத் தமது மற்ற மனைவியர் இல்லங்களுக்கும் சென்று இருக்கும் உணவை விரைந்து பெற்று வரும்படி பணிக்கின்றார்கள்!
அங்கிருந்தும் திரும்பி வந்த அவர், அருந்துவதற்கு தண்ணீர் மட்டுமே இருப்பதாகவும் உணவுப் பதார்த்தங்கள் ஏதும் மீந்திருக்கவில்லை என்பதை நபிகளிடம் சொல்லுகின்றார். ஏழ்மையில் இனிமை கண்ட ஏந்தல் எம்பெருமானார் இல்லங்களில் உணவைச் சேமித்து வைக்கின்ற பழக்கமோ, வழக்கமோ இருந்ததில்லையாதலால், தம்மைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களை நோக்கிச் சொல்லுகின்றார்,


"உங்களில் யார் இந்த மனிதருக்கு உணவு அளிக்கின்றாரோ அவருக்கு இறைவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்..!" என்றார்கள்.


நபிகள் சொல்லி முடிக்கும் முன்பாகத் துள்ளி எழுந்தார் அபூதல்ஹா என்பவர்!

"உங்கள் அன்புக் கட்டளையை நிறைவேற்ற நான் தயாராக இருக்கின்றேன்," என்றார் மெத்தப்பணிவோடு!


நபிகளின் அனுமதி கிடைத்ததும் எலும்புக்கூடாயிருந்த அந்த மனிதரைக் கைத்தாங்கலாகத் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றார், அபூதல்ஹா!

இல்லத்தை அடைந்ததும் தம் இல்லாளிடம் (மனைவியிடம்) கேட்கின்றார். சாப்பிடுவதற்கு என்ன இருக்கின்றது? இந்த மனிதருக்கு நாம் உணவு படைத்தாகவேண்டும், என்கிறார்.

அவரின் உள்ளம் அறிந்த உள்ளத்தாள் உள்ளதை உள்ளவாறே உரைக்கின்றாள்.

"இன்று நம் இல்லில் குழந்தைகளுக்கு மட்டுமே உண்பதற்கு உள்ளது. தாங்கள் என்ன செய்யச் சொல்கின்றீர்களோ செய்யச் சித்தமாயிருக்கின்றேன்" என்கிறார் அபூதல்ஹாவின் உள்ளம் கவர்ந்த உள்ளத்தரசி!


குழந்தைகளைச் சமாதானம் செய்து தூங்கவைத்துவிடு.

உணவருந்துமிடத்தில் எல்லாவற்றையும் தயாராக வைத்துவிட்டுக் கைவிளக்கை சற்றே மங்கலாக இருக்குமாறு வைத்துவிடு. அவரோடு நாமும் சாப்பிடுவது போல பாவனை செய்து சமாளித்துக் கொள்வோம், என்கிறார் அபூதல்ஹா!

அபூதல்ஹாவின் மனையாளும் அவ்வாறே உணவை எடுத்து வைத்துவிட்டு விளக்குத் திரியைச் சரி செய்வது போல மங்கச் செய்துவிடுகின்றார். விருந்தினருக்குப் பரிமாறிவிட்டுத் தாங்களும் உணவருந்துவது போலப் பாசாங்கு செய்ய விருந்தாளியாக
வந்தவரோ வயிறார உண்டுவிட்டு நன்றி கூறி விடை பெற்றார்.

அன்று அபூதல்ஹாவின் குடும்பமே இராப்பட்டினி !

விருந்தாளியாக வந்தவர் மீண்டும் நபிகள் நாயகத்தைச் சந்தித்துத்
தாம் திருப்தியாக உணவருந்த ஏற்பாடு செய்தமைக்கு நன்றி தெரிவித்துப் போனார்.

அபூதல்ஹாவின் ஏழ்மை நிலை அறிந்தவர்கள் அவரின் விருந்தோம்பும் தன்மைகுறித்து சிலாகித்துப் பேசிக்கொண்டனர். ஆனால் அபூதல்ஹா விருந்தாளிக்கு உணவளித்துவிட்டுப் பசியோடு இரவைக் கழித்ததை அவர்கள் எவரும் அறியார், எம்பெருமானாரைத் தவிர!

மறுநாள் அபூதல்ஹா நபிகள் நாயகத்தைச் சந்தித்தபோது, " நேற்று இரவு நீங்களும் உங்கள் உள்ளத்தாளும் நடந்துகொண்ட விதம் குறித்து இறைவன் மிக மகிழ்ச்சி அடைந்தான், என்று கூறி அபூதல்ஹாவைப் பாராட்டுகிறார்.


"தாங்களே தேவையுள்ளவர்களாக இருந்தாலும் கூட பிறருக்கு முன்னுரிமை வழங்குகின்றார்கள்" என்ற அருட்குரானின் திருவசனத்தின் பிரதிபலிப்பாக அபூதல்ஹா தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.


ம்ம்ம்.. இந்தக் காலத்தில் எல்லோர் இல்லங்களிலும் இப்படி உள்ளத்தரசிகள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?


என்னுடன் பணிபுரியும் ஒரு நண்பர். மாலை மணி ஐந்து எப்போது அடிக்கும் என்று காத்திருந்தது போல இருந்துவிட்டு 5 மணி ஆனதும் மனிதர் அரக்கப் பரக்க வீட்டுக்குக் கிளம்பிவிடுவார்.

"அப்படி என்ன அவசரம்?", என்று ஒரு நாள் கேட்டேன். " என் மனைவி எனக்காகக் காப்பி குடிக்காமல் காத்துக் கொண்டிருப்பாள், அதான்" என்றார்.


"உங்க பேரில் அவ்வளவு மரியாதையா? உங்க மனைவிக்கு என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டேன்.


"அப்படியெல்லாம் இல்லைங்க..... நான் போய்த்தான் காப்பி போட்டு அவளுக்கும் கொடுத்துவிட்டு நானும் குடிப்பது வழக்கம்...!?" என்கிறார்.

விபசாரியான ஒரு பெண் ஒரு கிணற்றின் விளிம்பில் தன் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள் அந்த நாயை தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக்கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி கிணற்று நீரை இறைத்து அதற்கு கொடுத்தாள் ஆகவே அது பிழைத்து கொண்டது. அவள் ஒர் உயிருக்குக் காட்டிய இந்த கருணையின் காரணத்தினால் அவளுக்கு பாவமன்னிப்பு வழங்கப்பட்டது. -அபூஹுரைரா (ரலி)

- ஆல்பர்ட்

அண்ணல் நபிகள் நடந்த பாதையில்...! (7)

''என்னுயிரின் பாதுகாவலனும் பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருள்களின் பாதுகாவலனுமாகிய இறைவா! மனிதர் அனைவரும் ஒருவருக்கொருவர் உடன்பிறந்தோரே என்று நான் உறுதி கூறுகிறேன்''-எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?"

ஒரு இஸ்லாமியப் பெரியவர்! அவர் பெயர் இஸ்மாயில் இராவுத்தர்!

அவர் ஏழை. அதனாலே அவர் ஒரு சிறிய குடிசை வீட்டில் வாழ்ந்தார். ஒருநாள் இராத்திரி. நல்ல மழை பெஞ்சுகிட்டிருந்துச்சு. அந்தப் பெரியவரும் அவர் மனைவியும் அந்த குடிசைக்குள்ளே தூங்கிக்கிட்டிருந்தாங்க.

அந்த நேரம் பார்த்து யாரோ திடீர் என்று கதவைத் தட்டுற மாதிரிச் சத்தம் கேட்டுச்சு. அந்தப் பெரியவர் முழிச்சுக்கிட்டார். மனைவியை எழுப்பினார்.

"வெளியே யாரோ வழிப்போக்கர்... நமக்குத் தெரியாத நண்பர் வந்திருக்கார் போல தெர்¢கிறது... கதவைத் திறக்கிறேன்! நீ போய் அந்தப் படுதாவைப் போர்த்துக்கொண்டு அந்தச் சுவர் ஓரமா இருந்துக்க" ன்னார்.


அதற்கு அந்த அம்மா..."உள்ள இடமே இல்லயே... நம்ம ரெண்டு பேருக்கே இங்கே இடம் பத்தாதே... அப்படி இருக்கும்போது இன்னும் ஒரு ஆள் எப்படி உள்ள இருக்க முடியும்?" -ன்னு கேட்டாங்க.


அதற்கு அவர் சொன்னார்."இது ஏழையோட குடிசை...இதில எத்தன பேர் வந்தாலும் எடம் உண்டு!" என்று பதில் சொன்னார்.


"நான் யதார்த்தமாகப் பேசுறேன். நீங்களோ தத்துவமா பேசுறீங்க!"
என்று அந்தம்மா சொன்னார்கள்.

அதற்கு மறுபடியும் அவர் சொன்னார்: -"மனதிலே இடம் இருந்தால் இந்தக் குடிசையையே அரண்மனை மாதிரி நம்மாலே உணர முடியும். உள்ளம் குறுகியிருந்தா ஒரு பெரிய அரண்மனை கூட சின்னதாத்தான் தெரியும்.

நம் வீட்டு வாசல் தேடி வந்திருக்கின்ற ஒரு மனிதனை எப்படி நாம் போங்க என்று சொல்ல முடியும்? இதுவரைக்கும் இந்தக் குடிசையிலே நாம ரெண்டு பேர் படுத்திருந்தோம். இந்த இடத்தில் நிச்சயமா மூன்று பேர் படுக்க முடியாது! ஆனா குறைந்தது மூன்று பேர் உக்காரலாம்!

அதனால நாம எல்லோரும் உட்கார்ந்தால் இன்னும் ஒருவருக்கு இங்கே எடம் கிடைக்கும்!" என்றார். அதன் பிறகு அந்தப் பெரியவர் கதவைத் திறந்தார்... அந்த ஆள் உடம்பு முழுவதும் நனைந்து போய் நின்னுக்கிட்டிருந்தார். கதவைத் திறந்ததும் உள்ளே வந்தார். ரெண்டு பேரும் உக்கார்ந்து பேச ஆரம்பித்தார்கள்!

கொஞ்ச நேரம் கழித்து மேலும் ரெண்டு பேர் வந்து கதவைத் தட்டினார்கள். உடனே அந்தப் பெரியவர்: "வேறே யாரோ வந்திருக்காங்க போல இருக்கே... போய் கதவைத் திறங்க!" என்று சொன்னார்.
கொஞ்ச நேரத்துக்கு முன்பு உள்ளே வந்த ஆசாமி பெரியவரிடம் சொன்னான்.


"கதவைத் திறப்பதா... இங்க எடமே இல்லையே!"-என்றான். கொஞ்ச நேரத்துக்கு முன்னால் இவன் வெளியிலே நின்றுகொண்டிருந்தான்...இந்தப் பெரியவரின் நல்ல மனசினாலேதான். நமக்கு உள்ளே இடம் கிடைத்தது என்பதை மறந்து விட்டான்.

எதற்குக் கதவைத் திறக்கணும்? வேண்டாமே'-என்றான்.


"அன்புதான் உங்களுக்கு இடம் கொடுத்தது... அந்த அன்பு இன்னும் இருக்கிறது... அது உங்களோட முடிஞ்சு போகல்லை... தயவு செய்து கதவை திறந்துவிடுங்க..என்றார் பெரியவர்.

நாம் இப்போது கொஞ்சம் விலகித் தானே உட்கர்ந்திருக்கின்றோம்... இனிமே, கொஞ்சம் நெருங்கி உட்காரலாம். சரியாப் போய்டும்!" என்றார் அந்தப் பெரியவர்.

கதவைத் திறந்தாங்க.

அந்த ரெண்டு பேரும் உள்ளே வந்தார்கள்.ஒரு வழியாகச் சமாளித்து அமர்ந்து கொண்டார்கள்.


சிறிது நேரம் சென்றது!யாரோ கதவை மீண்டும் தட்டி ஒலியெழுப்புகின்ற சத்தம் கேட்டது.

அந்தப் பெரியவர், கதவு ஓரமாக உட்கார்ந்திருந்த ஆளைப்பார்த்துச் சொல்கின்றார்..."கதவைத் திறங்க... யாரோ இன்னுமொரு புது நண்பர் வந்திருக்கார்!" - என்றார்.

அந்த ஆள் கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்க்கின்றார். அங்கே... ஒரு கழுதை உடம்பு முழுக்க நனைந்து குளிரிலே நடுங்கிக் கொண்டிருந்ததைப்பார்க்கிறார்.
பார்த்துவிட்டு, வேகமாகக் கதவைத் தாளிட்டுவிட்டு...... "இது கழுதைங்க.... அதுக்காக நாம் திறந்து விட வேண்டிய அவசியமில்லை...." என்றான்!


இங்கே மிருகங்களைக்கூட மனிதர்களாக நடத்தித்தான் எனக்குப் பழக்கம்! தயவு செய்து கதவைத் திறந்து விடுங்க...!" என்றார்.


"இடம் எங்கே இருக்கிறது?" என்று எல்லாருமாச் சேந்து கத்தினாங்க.அதற்கு அவர் சொன்னார், "இங்கே நிறைய இடம் இருக்கு. உட்காருவதற்குப் பதிலாக நாம் எல்லோரும் எழுந்து நின்று கொள்ளலாம் கவலைப்படாதீர்கள்!

அப்படித் தேவைப்பட்டால் நான் வெளியிலே போய் இருந்து கொள்கிறேன்!" என்றார் பெரியவர்.

"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?"என்று சொன்னார் அய்யன் திருவள்ளுவப் பெருந்தகை. அது இதுதான்.


" தாங்களே தேவையுள்ளவர்களாக இருந்தாலும்கூட தங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை வழங்குகின்றார்கள்...." என்று அருட்குரான் அறிவிக்கிறது; அருட்குரானின்வழிநடப்பவர் இந்தப் பெரியவர்!

வாழ்க்கையிலே அமைதியான நேரம் எது தெரியுமா?

எந்த விதமான நிபந்தனைகளும் இல்லாமல் அன்பு செலுத்துகின்ற நேரம் இருக்கிறதேஅதைவிட அமைதியான நேரம் வேறே எதுவுமில்லை என்கிறார் ஒரு பெரியவர்! (ஓஷோ)

நம்ம ஆள் ஒருத்தன்:


"எங்க வீட்டுக்கு அடிக்கடி விருந்தினர் வருவது உண்டு சார்.
எவ்வளவு விருந்தாளி வந்தாலும் கதவை திறந்து விட்டுட்டு மரியாதையா நான் வெளியிலே போயிருவேன் சார்!" என்றான்.

"ஏன் அப்படிச் செய்கிறாய்? என்று கேட்டேன். "நான் வீட்டுக்கு உள்ளே இருந்தால் அவங்களுக்கு எல்லாம் சாப்பாடு வேறே போட வேண்டியிருக்குமே,அதானாலே வெளியிலே போயிடறேன்!". என்றான்.

நபி (ஸல்) அவர்கள் வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் முஸ்லிம்களின் இதயங்களில் உபகாரம் செய்ய வேண்டுமென ஆர்வத்தை வளர்த்தார்கள். (ஸன்னன் அபூ தாவூத்)

- ஆல்பர்ட்

Wednesday, September 19, 2007

அண்ணல் நபிகள் நடந்த பாதையில்...! (6)

அண்ணல் நபிகள் நடந்த பாதையில்...! (6)

"தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்!" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அபு அனிபா என்று ஒரு பெரியவர் இருந்தார். இஸ்லாமியப் பெரியவர். அவர் ஒரு நெசவாளர். மிகவும் ஏழ்மையான நிலைமையில் இருந்தார்.

நாள்தோறும் அவர், தானே தனது கையால் நூல் நூற்று நெசவு செய்வார். துணிகளைத் தயார் பண்ணுவார். அதையெல்லாம் தோளில் போட்டுக்கொண்டுதெருத் தெருவாகப் போய் விற்பனை செய்வது அவரின் வழக்கம்.

அதில் வரக்கூடிய சொற்ப வருவாயை வைத்துகொண்டு அவர் தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். அவர் ஒரு நாள் ஒரு பாலைவனப் பகுதி வழியாகப் போய்க் கொண்டிருந்தார். அவருடன் இன்னும் இரண்டு நண்பர்களும் போய்க் கொண்டிருந்தார்கள்!

வழியிலே ஒரு ஆள் பேரீச்சம்பழம் விற்றுக் கொண்டிருந்தான்.
'எப்படி விலை? என்று விசாரித்தார்.
"காசுக்குப் பத்துபழம்" என்றான் அவன். அந்த ஊர் காசு!

"சரி! ஒரு காசுக்கு பழம் கொடு! அப்படியே சருகில் வைத்துக் கட்டிக்கொடுக்கும்படியும் தாம் நடந்து செல்லும் வழியிலே சாப்பிட்டுக்கொள்ள ஏதுவாக இருக்கும்! என்றார் அந்தப் பெரியவர்.

அதே மாதிரி அந்த ஆளும் ஒரு உலர்ந்த சருகில் பழத்தை வைத்துக் கட்டிக் கொடுத்தான். அதை வாங்கிக் கொண்டு இவரும் மற்ற இரண்டு பேரும் போய்க் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் போய்க்கொண்டிருந்தது ஒரு பாலைவனப்பகுதி இல்லையா? அதனாலே எங்கேயாவது தண்ணீர் கிடைக்கின்ற இடமாகப் பார்த்து உட்கார்ந்து பழத்தைச் சாப்பிடலாம் என்று பேசிக்கொண்டே போகிறார்கள்.
வழியிலே ஒரு நீர் நிலை தெரிந்தது! அங்கே போய் மூன்று பேரும் வசதியான இடமாகப் பார்த்து அமர்ந்தார்கள். பெரியவர் பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பத்து பழம்தானே இருக்க வேண்டும்? ஆனால் ஒரு பழம் கூடுதலாக
அதில் இருந்தது!

அதைப் பார்த்தவுடனே பெரியவர் பதறிப் போய்விட்டார்.

ஒரு காசுக்கு 10 பழம்தானே அவர் சொன்னார். கைத் தவறுதலாக அந்த பழ வியாபாரி ஒரு பழத்தைக் கூடுதலாக வைத்துவிட்டாரே! இது அவருக்கு நஷ்டமாச்சே! இப்ப என்ன செய்வது என்று யோசித்தார்.

"சரி... திரும்பிப் போய் அந்தப் பழவியாபாரியை சந்தித்து கூடுதலாக இருக்கும் ஒரு பழத்தை கொடுத்துவிட்டு வந்துடுவோம்!" என்று புறப்பட்டார்.
அருகிலிருந்த நண்பர்கள், அவர் சொன்னதைக் கேட்டுச் சிரித்தார்கள்! (ஏன்? நாமாக இருந்தாலும் அதைத்தானே செய்திருப்போம்!)

"என்னங்க இது? வேடிக்கையா இருக்கிறது!

ஒரே ஒரு பேரீச்சம் பழம் கூட இருக்கிறது என்பதற்காக அதை திருப்பிக் கொடுப்பதற்காக யாராவது திரும்பவும் மூணுகல் தொலைவு திரும்பி நடப்பார்களா?

இது தேவைதானா?" என்று கேட்டார்கள். பெரியவர் அவர்கள் சொன்னதை ஏற்றுக்கொள்ளவில்லை.


" ஒரு வியாபாரத்தில் நாம் காசு கொடுத்து அதற்குச் சரியா ஒரு பொருளை வாங்குகின்றோம். அதுதான் நியாயம். அதிகப்படியா எதுவும் குடுத்தா அது விலக்கப்பட்ட பொருள். அது நம்மை சேரக்கூடாது. அபஹாரமானது!" என்று அவர்களூக்கு விளக்கம் சொல்லிவிட்டு விடுவிடுவென்று தாம் வந்த பாதையிலேயே நடக்க ஆரம்பித்தார்.

அந்த வியாபாரியைத் தேடிப் பிடித்து கூடுதலாக அவர் கை தவறிப்போய் வைத்ததைக் கொடுப்பதற்காகவே திரும்பவும் அவரைத்தேடி வந்ததாகச் சொல்லி அந்த ஒரு பழத்தைத் திருப்பிக் கொடுத்தார்.


ஆனால், அந்த வியாபாரி என்ன சொன்னார் தெரியுமா?

"ஐயா! அந்த ஒரு பழத்தை நான் தெரியாமல் ஒன்றும் கொடுக்கவில்லை!

உங்க தோற்றத்தைப் பார்த்ததும் எனக்கு உங்கள் மேல் ஒரு
மரியாதை ஏற்பட்டது. அதனாலேதான் ஒரு பழத்தை அதிகமா
வைத்துக் கட்டிக்கொடுத்தேன்.

நீங்க இவ்வளவு தூரம் வந்து இதைக் கொடுக்க வேண்டுமா? நீங்களே அதை வைத்துக் கொள்ளுங்கள்!" என்று சொன்னார், அந்த வியாபாரி.


ஆனால் பெரியவரோ அதற்குச் சம்மதிக்கவில்லை!

வணிகத்திலே - வியாபாரத்திலே - வாங்குகிறவர் ஒருத்தர்.
விற்கிறவர் ஒருத்தர். ரெண்டு பேரும் இவ்வளவுக்கு இவ்வளவு என்று
ஒரு உடன்பாட்டுக்கு வர்றாங்க. அதன்படி நடந்து கொள்கின்றார்கள் அதுதான் வியாபாரம்.

அந்த உடன்பாட்டுக்கு ஒத்துப் போகின்றதுதான் நியாயம். அந்த நியாயம் தவறி நாம் நடந்து கொள்ளக்கூடாது என்று சொல்லிவிட்டு பழத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டு வந்த வழியே திரும்ப நடக்க ஆரம்பித்தார்.
நேர்மை-நியாயம் இதற்க்கெல்லாம் இலக்கணம் அந்தப் பெரியவர்!


இந்தக் காலத்தில் எல்லாம் நாம் அப்படியா நடந்து கொள்கின்றோம்?
இப்படி நம் நாட்டில் நடந்தால் எப்படி இருக்கும்? அப்புறம் எதற்கு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் எல்லாம் தேவைப்படப்போகிறது?

நீங்களே கொஞ்சம் நல்லா யோசித்துப் பாருங்களேன். " கொசுறு " இல்லை என்றால் இப்போதெல்லாம் வியாபாரமே நடப்பது இல்லை.


அம்பது ரூபாய்க்கு காய்கறி வாங்கினாலும் அம்பது பைசாவுக்கு கறிவேப்பிலை வாங்க மனசில்லாமல் யோவ் பெரிசு ஒரு இணுக்கு கறுவப்பிலையை போடுன்னு பையை அகலத் திறந்து இல்ல காட்டிக்கிட்டு நிக்கிறோம்

அதுமட்டுமில்லை... வாங்குகிறவர் விற்கின்றவரை எப்படி ஏமாற்றுவது என்று பார்க்கின்றார். விற்கின்றவர் வாங்குகின்றவரை எப்படி ஏமாற்றுவது என்று பார்க்கின்றார். சாமர்த்தியசாலிகள் பிழைத்துக் கொள்கின்றார்கள்!


ஒருவர் அப்படித்தான் மாம்பழம் வாங்கினார்.

'ஒரு பழம் ஒரு ரூபாய்! ' என்றார் கடைக்காரர்.

"பத்து ரூபாய்க்குப் பழம் குடுங்க" என்றார் இவர். அவர் பத்துப் பழம் கொடுத்தார்.

இவர் அடித்துப் பிடித்துப் பேசி ஒரு பழம் அதிகமாவே வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டார். வந்ததுக்கப்புறம் 'பாவம் அந்தக் கடைக்காரர்' என்று நிரம்ப வருத்தப்பட்டார்.

"நீங்கள்தானே அடித்துப் பிடித்து கட்டாயப்படுத்தி ஒரு பழம் அதிகமா வாங்கினீங்க... இப்ப நீங்களே வருத்தப்பட்டா எப்படி?" என்று வீட்டுக்கார அம்மா கேட்டாங்க.

" நான் அதுக்காக வருத்தப்படவில்லை... நான் அந்த வியாபாரியிடம் கொடுத்தது செல்லாத நோட்டு... பாவம் எப்படி அதை மாற்றுவாரோ, என்று எண்ணியே வருத்தப்படுறேன்" என்றார் இவர்.

இதே நேரத்தில் அந்தக் கடைக்காரரும் வருத்தப்பட்டார்;
பாவம், அந்தப் புளிப்பான பழத்தை யார் தலையில்
கட்டலாம் என்று பாத்தேன், வசமாச் சிக்கினான்
அந்த ஆள்..! எப்படித்தான் அந்தப் பழத்தைச்
சாப்புடப் போறானோ, என்று...!

"ஹலால் எனும் அனுமதிக்கப்பட்டது தெளிவானது; ஹராம் எனும் விலக்கப்பட்டதும்
தெளிவானது; அவ்விரண்டிற்குமிடையே சந்தேகத்திற்கிடமான காரியங்கள் உள்ளன.
பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைவிட்டு விடுகிறவர் பாவம் என்று தெளிவாகத்
தெரிவதை நிச்சயம்விட்டு விடுவார்; பாவம் எனச் சந்தேம்ப்படுபவற்றைச் செய்யத்
துணிகிறவர் தெளிவான பாவங்களிலும் வீழ்ந்து விடக் கூடும். பாவங்கள்
அல்லாஹ் போட்ட வேலிகளாகும். வேலியைச் சுற்றி மேய்கிறவர் அதற்குள்ளும்
சென்று விடக்கூடும்" என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.