Friday, June 13, 2008

அண்ணல் நபிகள் நடந்த பாதையில்...! (12)

ரம்ஜான்.... ரமதான்...ரமலான் என்றழைக்கப்படும் புனித மாதம் எத்தகையது என்பது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்துரைக்கும்போது....
" ரமதான் மாதம் எத்தகைய தென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழி காட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறரோ அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப் பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்குச் சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் நோன்பில் விடுபட்டுப் போனதைப் பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழிக் காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான், " என்கிறார்.


ஒரு தேர்! அந்தத் தேர்லே 5 குதிரை பூட்டியிருக்கு! அந்தத் தேர் போய்ச் சேரவேண்டிய இடத்துக்குப் பத்திரமா போய்ச் சேரணும்ன்னா, 5 குதிரையும் ஒரே வேகத்துலே போகணும்! ஒரே திசையிலே போகணும். ஒவ்வொண்ணும் ஒவ்வொரு திசையிலே போனாலும் ஆபத்து!


ஒவ்வொண்ணும் ஒவ்வொரு வேகத்துலே போனாலும் ஆபத்து! அதுசரி... எங்கே இருக்கு அந்தத் தேர்?ன்னு கேக்கறீங்களா? நம்ம சரீரம்தான் அந்தத் தேர். ஐம்புலன்கள்ன்னு சொல்றோமே மெய், வாய், கண், மூக்கு, செவி அது ஐந்தும் 5 குதிரைகள். அது அஞ்சும் ஒரே திசையிலே போகணும். அதை மறந்துட்டு, கை ஒண்ணு செய்ய, வாய் ஒண்ணு பேச, கண் ஒண்ணு பாக்க.. இப்படி இருந்தா வாழ்க்கை என்னத்துக்கு ஆவும்? வாழ்க்கையை நெறிப்படுத்துவதற்கான ஒரு முயற்சி தான் நோன்பு.


நோன்பு நோற்கும் காலங்களில் இசுலாமியச் சகோதரர்கள் மனதை கஷ்டப்படுத்திக் கொண்டு அதிகாலையில் எழுந்திருக்கிறார்கள்; வருடத்திற்கு 30 நாட்கள் அவர்கள் இவ்வாறு செய்வது, நோன்பு அல்லாத காலங்களிலும் நுரையீரலை புதுப்பிக்க வைக்கும் என்ற நல்ல தத்துவத்தின் அடிப்படையில்தான் நோன்பு ஆரம்பிக்கப்படுகிறது.


பதினோரு மாதங்கள் வரை முறையில்லாமல், ஆசை தீர உண்டதனால் களைத்துப் போயிருக்கும் வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்ற உறுப்புகளுக்கு, ஒரு மாதத்திற்கு மட்டும் வழக்கமான நேரத்திற்குள் ஏதும் உண்ணுவதோ, பருகுவதோ இல்லாமல், ஆசைகளையும், இச்சைகளையும் கட்டுப்படுத்துவதன் மூலம் உடல் மீண்டும் புத்துணர்ச்சி பெறுவதற்கும், நோய் நொடிகளின்றி வாழவும் வழிவகுப்பது தான், இம் மாதத்தில் நோற்கும் 30 நாள் நோன்பு ஆகும்!


ஒரு நாளில் 10 தடவைக்கும் மேல் டீ, காபி, மற்றும் பானங்கள் அருந்துபவர்கள் இருக்கிறார்கள்; ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை சிகரெட், பீடி என்று புகைப்பவர்களும் இருக்கிறார்கள்; சதா வெற்றிலை பாக்கை வாயில் குதப்புவர்களும் இருக்கிறார்கள்; நேரங்காலம் இல்லாமல் வயிறு புடைக்க உணவை உண்பவர்களும் இருக்கிறார்கள். இந்தப் பழக்கத்தை, ஆண்டிற்கு ஒரு முறை 30 நாட்கள் நோன்பு இருப்பதன் மூலம் உடலானது முறையற்ற பழக்கங்களுக்கு ஆட்படாமலும், நோய்களின்பால் ஈர்க்கப்படாமலும் நல்ல வழியில் இயக்கம்பெற இந்த நோன்பு அத்தியாவசியமாகிறது.


பதினோரு மாதங்கள், மேற்கூறிய வரைமுறையற்ற பழக்கங்களில் சிக்கியுள்ள மனிதனின் உடல், நச்சுப் பொருள்களால் நிரப்பப்படுகின்றன. வரைமுறையற்ற பழக்கங்கள் மனதுக்கு
சந்தோஷத்தைக் கொடுத்தாலும் அவைகள் உடலுக்கு கெடுதலையும் தீங்கையும் விளை விக்கின்றன. நோன்பு மேற்கொள்ளும் 30 நாட்களிலும் பகல் நேரம் முழுவதும், நோன்பு நோற்பது கஷ்டங்கள் கொடுத்தாலும், அவைகள் உடலுக்கும் மனதிற்கும் நன்மையானவற்றை, நாம் அறியாமலேயே உண்டாக்குகின்றன.


மனிதன், நாள் முழுவதும் சுவாசித்தாலும், நுரையீரல் அதிகப்படியாக இஇயங்கும் நேரம் அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணிவரை உள்ள 2 மணி நேரமேயாகும். தூங்கும்பொழுது ஐம்புலன்களும் முழுமையாக இஇயங்காமல் இருக்கும். அப்பொழுது நுரையீரல் இயங்குவதைவிட, விழித்திருக்கும்பொழுது இயங்கும் சுவாச இயக்கமானது, நுரையீரலை நல்ல முறையில் புதுப்பிக்கிறது. அதிகாலையில் பல ஆஸ்துமா நோயாளி கஷ்டப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம், அவர்களை ஆஸ்துமா ஏன் எழுப்பிவிடுகிறது? காரணம் அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை நுரையீரல் சரியாக இயங்கமுடியாததாலும் ஐம்புலன்களும் விழித்திருந்தால்தான் நுரையீரல் நன்கு இயங்கமுடியும் என்று இயற்கை கருதுவதாலும்தான்.
இரவு தூக்கத்தின்போது, வயிற்றில் உள்ள உணவு நன்கு ஜீரணமாகி சிறுகுடலுக்கு சென்றுவிடுகிறது. காலை உணவு (ஸஹர்) இந்த நேரத்தில் எடுத்துக்கொள்வதன் மூலம் வழக்கமான உண்ணும் நேரங்களை திசை திருப்பப்படுகிறது.


இந்த மாற்றத்தின் மூலம் வயிறு, தன்னுடைய பழகிப்போன நேரத்திலிருந்து விலக ஒரு சந்தர்ப்பம் ஏற்படுகிறது. தேவையில்லாமல் பசித்தல், அதிகமாக பசித்தல், அடிக்கடி பசித்தல் போன்ற தன்மைகள் மாற்றப்படுகின்றன. காலை உணவையும், மதிய உணவையும் உண்ணாமல் இருக்கும்பொழுது நாம் அதிகாலை (ஸஹர்) உண்ட உணவை வயிறு நன்கு ஜீரணித்துவிடு கிறது. வயிற்றில் அமிலங்களை சுரக்கும் சுரப்பிகள், தன் அதிகப்படியான அமிலச் சுரப்பிலிருந்து விடுபடுகின்றன, வயிற்றில் ஏற்படும் இந்த மாற்றம் இஇந்த தாக்கம்......குடல், ஜீரண உறுப்புகள் அனைத்தையும் நன்கு இயங்கும் முறையில் மாற்றுகின்றன.


நோன்பு இல்லாத காலங்களில் அதிகப்படியாக உண்டு, நன்கு ஜீரணிக்கப்படாமல் உடலில் தேங்கியுள்ள கசடுகள், கழிவுப் பொருட்கள் எல்லாம் மெல்ல நீக்கப்படுகின்றன. கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. அதிகாலை (ஸஹர்) உணவை, யாருக்கும் குமட்டல் ஏதுமின்றி நன்றாக சாப்பிடமுடியாமல், அவர்களின் வயிறு, குடல் நன்றாக இருக்கிறது என்று பொருள். யாருக்கு சாப்பிடமுடியாமல், மயக்கம் ஏற்படுவதுபோலவும், வாந்தி வருவது போலவும், இருக்கிறதோ, அவர்களுக்கு பித்தம் அதிகமாகி உள்ளது; குடல், ஜீரண உறுப்புகள் கெட்டுப்போய் இருக்கின்றன என்று அர்த்தம். இந்த நோய்களைத் தீர்ப்பதற்காகவேதான் நாம் நோன்பை மேற்கொள்கிறோம். நோன்பு இருக்கும் நேரத்தில் உணவு பழக்கங்களை நல்ல முறையில் கடைபிடிப்பதால் வயிறு உப்புசம், ஏப்பம், மயக்கம், மலச்சிக்கல் போன்ற உபாதைகளிலிருந்து நிரந்தரமாக விடுபடுகின்றது.


நோன்பு நோற்பதற்கு முக்கிய காரணமே ஆசைகளிலிருந்தும் இச்சைகளிலிருந்தும் நாம் விடுதலை பெறவேண்டும்; மேலும், உடலையும் மனதையும் நோயின்றி வைத்துக் கொள்ள வேண்டும் என்னும் அடிப்படைக் கொள்கைக்காகத்தான்.

No comments: